யாழிலிருந்து நடராசா லோகதயாளன்
தமிழர்களின் இனப்பிரச்சனைகான தீர்ப்பும், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திறப்புக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது போலுள்ளது. இரண்டுமே இதே-அதோ என்று கூறப்படுகிறதே தவிர செயல்வடிவம் பெற்று முழுமையாக நடைமுறைக்கு வருமா; அந்த அதிசயம் நடைபெற்றாலும் எப்போது நடைபெறும் என்பதெல்லான் அந்த கந்தனுக்கும் புத்தனுக்கும் மட்டுமே வெளிச்சம்.
இப்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பிலும் யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானம் போன்றே அறிக்கை விளையாட்டே இடம்பெறுகின்றது. வேண்டும்-வரும்-வராது-உண்டு ஆனால் தற்போதில்லை இப்படி வார்த்தை விளையாட்டுக்கள்.
இந்த விமான நிலையம் 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு பூட்டப்பட்டபோதே நான் பகிரங்கமாக எழுதினேன் இங்கே மீண்டும் `விமானம் வரும் ஆனால் வராது ஏன்று`. அப்போது பலருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை ஆனால் இப்போது புரிகின்றது. இந்த நிலையில் பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வதாக வாய்ப்பேச்சு மட்டும் இடம்பெறுகின்றது.
இதற்கு ஒரு படி மேலேபோய் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 05 ஆம் திகதி ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அந்த ஊடகச் சந்திப்பின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்காமல் உள்ளமை குறித்து கேள்வியெழுப்பியபோது பதிலளித்த அமைச்சர், ”யாழ்ப்பாணம் விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வரத்தயாரில்லை, குறிப்பாக இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலேயே விமான நிலையம் இயங்காத நிலையில் உள்ளது” என்றார்.
இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை யாழ்ப்பாணத்தில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்க முடியாதமைக்கு இந்தியாதான் தடையாகவுள்ளதா என இந்தியத் தரப்பிடம் வினாவினோம். அவர்கள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார்கள். `என்னாது` அவர்களின பதில் தூக்கிவாரிப்போட்டது. அதாவது பலாலியில் இருந்த கண்காணிப்பு இயந்திரம், பணியாளர்கள் எல்லாம் எங்கே என அமைச்சரிடமே கேளுங்கள எனப் பதிலளிக்கின்றனர்.
சரி – அப்படியென்றால் அவற்றை இனியும் கொண்டு வரமுடியுமென்றால் விமானம் வந்து செல்ல என்ன தடை உள்ளது என்றோம்.
”இலங்கையில் விமானத்தை இறக்குவதற்கான அனுமதிகள், ஏற்பாடுகளை தற்போதும் எம்மால் பெறமுடியும் ஆனால் இலங்கை அரசு விமான சேவை நடாத்த முன்வரும் நிறுவனத்திடம் இருந்து விமான நிலையத்திற்கான வரியாக விமானச் சிட்டை விற்பனையின்போது பெறப்படும பணத்தை இலங்கை அரசிற்கு டொலரில் செலுத்த வேண்டும் என பெரும் முட்டுக்கட்டையான கோரிக்கையை முன் வைக்கின்றது”.
இந்தியாவில் விற்பனை செய்யும் விமான சிட்டைகள் இந்திய நாணயத்தில் விறகும்போது அதற்கான பணத்தைக்கூட டொலரில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான வங்கி வசதிகள் மற்றும் உள்நாட்டு -வெளிநாட்டு நாணய நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. எனவே அங்கு டொலரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்காது. இந்தியப் பொருளாதரமும் காத்திரமாக உள்ளது.
ஆனால் இலங்கையில் விற்பனை செய்யும் விமான சிட்டையை இலங்கை நாணயத்தில் விற்றுவிட்டு இலங்கை அரசிற்கு செலுத்தும் வரிப்பணத்தை டொலரில் செலுத்துவதானால் இலங்கை நாணயத்தை எங்கே கொடுத்து டொலரை பெறுவது?அரசே அந்நியச் செலாவணிக்கு சிரமப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் மோசமான நிர்வாகச் செயல்பாடுகள் காரணமாக நாட்டின் கையிலிருப்பில் இருந்த அந்நியச் செலாவணி வங்குரோத்து நிலைக்குச் சென்றது. நாட்டில் டொலர்கள் கையிருப்பு இல்லாததால்தான் இறக்குமதிகளைச் செய்ய முடியவில்லை. அதன் காரணமாக விலைவாசிகள் விண்ணைத்தொடும் அளவிற்கு ஏறின. இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஒன்பது மாதங்களிற்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. மக்கள் மணி கணக்கில் வரிசையில் நிற்கும் அவலம் அரங்கேறியது.
உள்ளூரின் விமான சிட்டைகளை விற்பனை செய்பவர்கள் உள்ளூர் ரூபாவை டொலராக மாற்றலாம் என்றால் இலங்கை முதலீட்டு சபையோ அல்ல விமானப் போக்குவரத்து அதிகார சபை குறைந்த பட்சம் இலங்கையின் எந்த வங்கியோ இதற்கு உடன்பட மறுக்கின்றனர். அப்படியான நிலையில் டொலரை எங்கிருந்து எப்படி?
இந்த விடயத்தை அதாவது இலங்கையில்- இலங்கை நாணயத்தில் விற்ற விமானச் சிட்டைகளிற்கு- இலங்கை அரசிறகான வரியை- விமான சேவை நடாத்தும் நிறுவனம்- இலங்கை நாணத்திலேயே செலுத்துவதற்கான அனுமதியை- எந்தவொரு அமைச்சராவது பெற்றுத்தர முன் வந்தால் உடன் விமான சேவை நடாத்த முடியும். அதற்கும் விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்ற உபகரணங்களை மீளக் கொண்டு வர வேண்டும எனப் பதிலளித்தார்.
இலங்கையின் 5வது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டபோதும் தற்போது இழுத்து மூடப்பட்ட நிலையில் காணப்படுவது தொடர்பில் கடற்றொழில அமைச்சரிற்கு அப்பால் இந்தியாதான் காரணம் என இலங்கையின் சிவில் விமான போக்கு வரத்துதுறை அமைச்சர் நிமால் சிறிபாலடீ சில்வாவும் நாடாளுமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவ்வாறானால் இலங்கையில் விமான சேவை நடாத்த வந்த எயார் அலியன்ஸ் பொய் உரைக்கின்றதா என்ற கேள்வி எழுந்ததை அடுத்து அதை ஆராய முற்பட்டேன்.
அப்போதுதான் பூதம் கிளம்பியது. இந்தியாவில் மட்டும் அல்ல இலங்கையில் விற்கும் விமானச் சிட்டைக்குமான வரியை முதன் மாதம் தொடக்கமே இலங்கை அரசிற்கு டொலரில் அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசு கோருகின்றது என்பதை அறிய முடிந்தது. அவ்வாறானால் இலங்கை நாணயத்தை எங்கே செலுத்தி எவ்வாறு டொலரை பெறுவது? அதாவது இலங்கை அரசே இலங்கை நாணயம் வேண்டாம் எனக்கூறும்போது அதனை பெற எவர் முன் வருவார் என்பதே விமான சேவையை நடாத்த முன் வந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை. இதை கமுக்கமாக இலங்கை அரசு மூடிமறைத்து, விமானத்தை இயக்கும் நிறுவனங்கள் மீது பழியைப்போட முற்படுவது தெரியவந்தது. நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விடயத்தை முன்வைத்து, தமது பொருளாதார குளறுபடிகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தாமல் பொறுப்பற்ற மழுப்பலான ஒரு காரணத்தை முன்வைப்பது தெரிய வருகிறது.
அரசின் இந்த யதார்த்தமற்ற நிலைப்பாட்டிற்கு பிறகும் இந்த விடயத்திற்கும் ஓர் மாற்று யோசணையை விமான சேவை நிறுவனங்கள் முன் வைத்தன. அதாவது ”முதல் ஆறு மாதங்களிற்கு மட்டும் வரிப் பணத்தை இலங்கை நாணயத்திலேயே ஏற்றுக்கொள்ளுங்கள் அதன பின்பு விமான சேவையின் தேவை அதிகரிக்கும்போது டொலரில் செலுத்தி விமான சிட்டையை பெறுவதற்கு ஊக்குவித்து அந்த டொலரில் இருந்து இலங்கை அரசிறகான வரிப்பணத்தை டொலரில் செலுத்துகின்றோம் என விடுத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளாதமையே தற்போதுள்ள முட்டுக்கட்டை” என தெரிவிக்கின்றனர்.
உணமையில் யாழ்ப்பாணம் விமான நிலைய சேவை இலங்கை அரசிற்கா இந்திய நிறுவனத்திற்கா தேவை என்ற கேள்விக்கு எழுவதை தவிர்க்க முடியவில்லை. அடிப்படையில் இந்தியாவிலிருந்து பலாலிக்கான விமான சேவை இந்த விமான சேவை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிற்கே மிகவும் முக்கியமானது என்பதை இலங்கை அரசு உளப்பூர்வமாக உணர்ந்து அதை ஏற்றுக்கொள்கிறதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. யாழ்ப்பாணம் விமான நிலையம் முழுமையான செயற்பாட்டிற்கு வந்தால், ஆண்டுதோறும் இலங்கை வரும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் கொழும்பைவிட இந்த விமான நிலையத்தையே பயன்படுத்த முன்வருவார்கள் என்பதே யதார்த்தம்.
அப்படியென்றால் கொழும்பு விமான நிலையத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்ற எண்ணமும் இலங்கை அரசிற்கு இருக்கக் கூடும். தெற்கு வாழ வேண்டும்-வடக்கு தேய வேண்டும் என்பது தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளின் நிலைப்பாடாக உள்ளது என்று சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டி வருந்துகின்றனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ழுமையான செயற்பாட்டிற்கு வந்தால், மேற்குலக நாடுகள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு அதை ஒரு வாயிலாக பயன்படுத்தும். பன்னாட்டு வருகை அங்கு அதிகரிக்கும். சுற்றுலா மேம்படும்.
இதேநேரம் நாட்டின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடான போக்குவரத்திற்கு தற்போது விமான நிலைய வரியாக 60 டொலர் செலுத்தப்படும் நிலையில் `உலகில் விமானமே வராத விமான நிலையம்` என்று விமர்சிக்கப்படும் மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கான வரி இரண்டு ஆண்டுகளிற்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று ஏன் யாழ்ப்பாணம் விமான நிலையத்திறகும் வரியை தள்ளுபடிம் சலுகையை வழங்கக் கூடாது என்று வடக்கு வாழ் பொதுமக்களின் கேள்விக்கு அரசிடமிருந்து மௌனமே அரசிடமிருந்து பதிலாக வருகிறது.
மக்கள் கோரும் அந்த வரிச்சலுமையை முழுமையாக இரத்து செய்ய மறுத்த மத்திய அரசு தற்போது 50 வீத சலுகையை வழங்க முன் வந்துள்ளது. அதாவது 60 டொலர் என்னும் வரியை 30 டொலராக குறைக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இதனால் இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்ட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இந்த வரிச் சலுகை இல்லாத ஊருக்கு பாதை காட்டியதாக அமையக்கூடாது ( பூட்டிய விமான நிலையத்திற்கு) எனபதே பலரின் விருப்பம்.