பாடாங் செராய் பக்கத்தான் வேட்பாளர் மு. கருப்பையா அகால மரணம்
-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.16:
இன்னும் 3 தினங்களில் நடைபெற இருக்கும் 15-ஆவது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களின் ஆதரவைக் கேட்டு பிரச்சாரக் களத்தில் நின்ற மு.கருப்பையா இன்று நவம்பர் 16 புதன்கிழமை பிற்பகலில் மரணம் அடைந்தார்.
இதய சிக்கல் காரணமாக திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கருப்பையா கூலிம் மாவட்ட அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 2.40 மணி அளவில் இறந்ததாக கூலிம் மாவட்ட காவல் துறை அதிகாரி ரிட்சுவான் சாலே தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 10-ஆம் நாள் களைக்கப்பட்ட 14-ஆவது நாடாளுமன்றத்தில் இதே பாடாங் செராய் தொகுதி சார்பில் உறுப்பியம் பெற்றிருந்த கருப்பையா, தான் சார்ந்திருந்த மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் ஆதரவுடன் மீண்டும் களமிறங்கி இருந்தார்.
முன்னாள் இராணுவ வீரரான கருப்பையா மறைவு கட்சிக்கு பெரும் இழப்பு என்று பிகேஆர் பொதுச் செயலாளரும் கூலிம் பண்டார் பாரு வேட்பாளருமான சைபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
பாடாங் செராயில் கருப்பையாவை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி ம.இ.கா. வேட்பாளர் சி.சிவராஜா, பாடாங் செராய் தொகுதி இந்திய சமுதாயம் ஒரு நல்ல சமூக செயற்பாட்டாளரை இழந்தது துயரமானது என்று தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தேர்தல் ஆணையம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்றும் அப்போது பாடங் செராய் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப் படுவதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.