வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்.
- மலையகத் தெழிற்சங்க அரசியல் ‘சொந்த பந்தங்களின் கூடாரம்’.
மலையக மக்கள் நுவரெலியாஇ புதுளைஇ கண்டிஇ மாத்தளைஇ இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மலைநாட்டில் மாத்திரமல்ல வடக்குக் கிழக்கிலும் தெற்கிலும் பரந்து வாழ்கின்றனர்.
இதற்கும் அப்பால் புலம் பெயர்ந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பெருமளவில் இல்லாவிட்டாலும் கணிசமானோர் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழும் மலையக மக்களிடையே தாம் ஓரணியில் அணி திரட்டப்பட வேண்டும். என்ற போக்கு அண்மைக்காலமாக மேலோங்கிக் காணப்படுகின்றது.இதற்கென தமக்கான திட்டவட்டமான அடையாளளம் தேவை என்ற வேட்கையுடன் இன்றைய தலைமுறை காணப்படுகின்றது. ஏனெனில் தேசிய ரீதியில் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் என்பதை மலையகம் ஆழமாக உணர்வதன் வெளிப்பாடாகும்.
- மலையகத் தமிழரா?
- இந்தியத் தமிழரா?
- இந்தியா வம்சாவளித் தமிழரா?
ஏன்ற சொற்பதங்களுக்குள் தமது அடையாளத்தைத் இன்றைய தலைமுறை தேடிக் கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்து 200 வருட வரலாற்றைத் தொட்டு நிற்கும் இவ் வேளையில் இலங்கையில் வாழ்கின்ற சுமார் 15 இலட்சம் மக்களின் அடையாளம் குறித்த தேடதலில் மலையகம் இறங்கியுள்ளது.
இந்த ஒட்டு மொத்த மக்களின் இன அடையாளத்தை பிரிட்டிஸ் ஆட்சியாளர் ‘இந்தியத் தமிழர்‘ என்றே வரையறுத்துள்ளனர்.குடித் தெகை மதிப்பீட்டில் மாத்திரமல்ல பல்வேறு அரச ஆவணங்களிலும் ‘இந்தியத் தமிழர்‘ என்ற சொற்பதமே உத்தியோகபூர்வ இன அடையாளமாக இன்றுவரை உள்ளது.
இதற்கெதிராக ‘மலையகத் தமிழர்‘ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோஷம் 1965 க்குப் பிறகு முன் வைக்கப்பட்டதன் விளைவு காலப் போக்கில் எழுத்து வடிவில் ‘மலையகத் தமிழர்‘ என்ற சொற்பதம் வழக்கத்தில் வந்தது. இன்று; ‘மலையகத் தமிழர்‘; சொற்பதத்தையே பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் பெரும்பாலும் காணக் கூடியதாக இருக்கின்றது.
ஆனால் ‘மலையகத் தமிழர்‘ என்பது அரச அங்கீகாரம் பெற்ற அடையாளமாக பிரகடனப்படுத்தப்படவில்லை.
மலையக மக்களில் கணிசமானவர்கள் குடித் தொகை கணக்கெடுப்பின் போதும் வாக்காளர் இடாப்புகளில் பெயர்களைப் பதிவு செய்யும் போதும் மற்றும் பல்வேறு ஆவணங்களிலும் தம்மை இலங்கைத் தமிழர் என்றே பதிவு செய்யத் தொடங்கினர். இதனால் இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை தேசியரீதியில் குறையத் தெடங்கியது.
இது ஒருபுறம் இருக்க மலையகம் தனது இன அடையாளத்திற்கான சொற்பதத்தைத் தேடத் தொடங்கவே மலையகத்திற்கு வெளியில் வாழும் மலையக மக்களும் தமக்கான அடையாளம்குறித்த தேடுதலில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக வடக்குக் கிழக்கில் வாழும் மலையக மக்கள் கடந்த காலங்களில் மலையக அடையாளத்தைப் புதுப்பித்துக் கொண்டபோதும் அரசியலில் தமிழ்த்தேசியத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவே தம்மை இணைத்துக் கொண்டிருந்தனர். அது மாத்திரமல்ல விடுதலைப்போராட்டத்தின் பங்காளராகவும் இருந்து அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர்.
ஆனால் அண்மைக் காலமாக குறிப்பாக போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ்த்தேசியத்திற்குள் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் அதாவது தமிழ்த் தேசியம் மலையக மக்களை உள்வாங்க மறுத்ததன் விளைவு வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் தமக்கான அடையாளம்குறித்து சிந்திக்க தலைப்பட்டுள்ளனர். தற்போது ‘வடக்கு மலையக மக்கள்‘ என்ற அமைப்பைத் தோற்றுவிக்கத் தலைப்பட்டுள்ளனர்.இது தமிழ்த் தேசியம் மலையக மக்களை அரவணைத்துச் செல்ல தவறியதின் எதிர் விளைவாகும். வுடக்கில் வாழ்கின்ற மலையக மக்களைப் போன்று கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்திற்கு அப்பால் செல்லத் தொடங்கிவிட்டனர். ஒற்றுமைப்பட வேண்டிய காலத்தில் தமிழ்த் தேசியத்தை சிதறடிக்க தமிழ்த் தலைமைகளே வழிசமைத்துவிட்டமை துரதிஷடமே.
- இணையவழிக் கலந்துரையாடல் உருவாக்கிய அதிர்வலை
மலையக அடையாளம் குறித்த இணைய வழிக் கருத்தாடல்கள் மலையக நலன் விரும்பிகளால் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இணைய வழிக் கலந்துரையாடல்கள் மலையக அரசியலில் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை தற்காலிகமாகவேணும் ஒன்றிணைப்பதில் இந்தியத் தூதரகம் வெற்றி கண்டுள்ளது.இந்தியத் தூதரகத்தின் அனுசரனை இன்றி மலையக தொழிற்சங்க அரசியலில் இந்த ஒன்றிணைவு சாத்தியமாகி இருக்காது.
- மலையகத் தலைமைகள் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்
மலையக தொழிங்சங்க அரசியல் தலைமைகளின் ஒன்றிணைவினால் மலையகத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர் பார்ப்பார்களாயின் அது பகல் கனவாகவே இருக்கும். ஏனெனில் இவர்கள் அணைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே.; இவர்களுக்கும் இவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நாடாளுமன்றஇ மாகாண சபை மற்றும் பிரதேச சபை ஆசனங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கான ஏணியே மலையக மக்கள். இதற்கும் அப்பால் தேசியக் கட்சிகளுக்கு மலையக வாக்குகளை வாரி வழங்கும் ‘தரகர்கள‘;.அதற்கு ஈடாக தமக்கு அமைச்சுப் பதவிகளையும் தாம் சார்ந்தவர்களுக்கு உயர் பதவிகளையும் பெற்றுக் கொடுப்பதே இவர்களின் அரசியல் பேரம்.மலையகத் தலைமைகளின் இந்தப் பேரங்களில் வாக்களித்த மலையக மக்களுக்கு ஒன்றுமில்லை.
ஆட்சிபீடம் ஏறும் தேசியக் கட்சிகள் அமைக்கும் அரசாங்கத்தில் பங்காளிகளாவது அமைச்சுப் பதவிகளைப் பெறுவது சுகபோகங்களை அனுபவிப்பது இறுதியில் ‘இவர்களால் மலையகத்திற்கு ஏதும் பிரயோசனமில்லை.இவர்களுடனான உறவை நாங்கள் அறுத்துக் கொள்கின்றோம்‘ என்று கூறி இன்னொரு கூட்டணிக்குத் தாவுதல். அடுத்த தேர்தல்வரை கூட்டு பிறகு அதே பல்லவி என மலையக தொழிற்சங்க அரசியல் சுழன்று கொண்டிருக்கின்றது.
- மலையகம்குறித்த தூர நோக்கோ சிந்தனையோ திட்டங்களோ இல்லை
மலையகத் தலைமைகளிடம் மலையகம்குறித்த தூர நோக்கோ சிந்தனையோ திட்டங்களோ இல்லை. இவர்கள் இன்றும் தெழிற்சங்க பாணியிலேயே அரசியல் நடத்துகின்றனர்.
- தேசியக் கட்சிகளின் ஊது குழல்
மொத்தத்தில் ஆட்சிபீடம் ஏறும் தேசியக் கட்சிகளின் ஊது குழலாகவே மலையகத் தலைமைகள் செயற்படுகின்றன.இதுவே இவர்களது இணக்க அரசியல்.
அதேவேளையில் மலையகத் தெழிற்சங்க அரசியல் ‘சொந்த பந்தங்களின் கூடாரம்‘. அங்கு மாற்றானுக்கு இடமில்லை. நேர்மை நாணயத்திற்கு கிஞ்சித்தும் இடம் இல்லை. மலையகத் தொழிற் சங்க அரசியல் கட்டமைப்பே ஊழலுக்குள் மூழ்கிக் கிடக்கின்றது.
- எனவே ‘மலையக தெழிற் சங்க அரசியலில் ஒட்டு மொத்தமாக மாற்றம் அவசியம்‘;.
- மலையக தெழிற்சங்க அரசியலில் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.
- மலையகம் புதிய பாதையில் பயணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
- மலையகம் ஊழல் அற்ற அரசியல் பயணத்தில் பயணிக்க வேண்டும்.
- மலையக மக்களின் இருப்பு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- மலையக தொழிங்சங்க அரசியல் சொந்த பந்தங்களுக்கு அப்பால் ஜனநாயக மயமாகுதல் வேண்டும்.
- மலையக இளைஞர் சமூகத்தின் எதிர்கால திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
மலையகத்தில் மாற்றம் நோக்கிய பயணத்தில் மலையகத்தின் அணைத்து தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும். தென்னிலங்கையின் மாற்றத்திற்குள் மலையகத் தலைமைகள் பயணிக்கட்டும். மலையகத்தின் மாற்றத்தை நோக்கி மக்கள் அணி திரள வேண்டும்.