அம்மா என்றால் அன்பெனும் அர்த்தமாம்
சும்மா சொல்வாரா சொர்க்கம் அவளென
பத்து மாதம் பாரம் தாங்கியே
சொத்தென என்னைச் சொந்தமாய்க் கொண்டாய்
எறும்புஈ நெருங்கிடா இரவெலாம் காத்தே
பொறுப்புடன் பொழுதெலாம் பத்தியம் இருந்தாய்
உதிரமே பாலாய் உணவாய் ஊட்டியே!
மதியுடன் வாழ மழலையில் பொழிந்தாய்
தடுக்கிலே ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்கையில்
இடுக்கண் வராமல் இமைபோற் காத்தாய்
பல்லு முளைக்கப் பரவசம் கொண்டே
பல்லுக் கொழுக்கட்டை பதமாய்ச் செய்தாய்.
எட்டு அடியை எட்டியே வைக்கையில்
கட்டியோர் முத்தம் கனிவாய்த் தந்தாய்
ஐந்து வயதில் அணைத்துச் சென்றுமே
புந்தி புகட்டப் பள்ளியிற் சேர்த்தாய்
வாலிப வயதில் வாழ்க்கைத் துணைக்கு
தாலியைத் தரிக்கவைத்து தம்பணி முடித்தாய்
பிள்ளை எனக்குப் பிறந்த போதிலே!
கொள்ளை இன்பம் கொண்டு களித்தாய்
சோதனை பலவும் சோதித்த போதுமே!
சாதனை பலவற்றைச் சாதிக்கச் சொன்னாய்
விண்ணை நோக்கநீ விரைந்த போதுமே!
மண்ணில் மறவேன் மரிக்கும் வரைக்குமே!
ஆக்கம் ….. கவிஞர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.