( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 04 )
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அதிலிருந்து ஓரளவேனும் மீண்டு வருவதற்கு சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. அவர்கள் மூலம் டொலர்கள் வரவு அதிகரிக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது.
அவ்வகையில் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் தலைநகர் கொழும்பு அதை அண்மித்த மாவட்டங்கள், தென்னிலங்கை மற்றும் மத்திய மலைநாட்டுப் பகுதிக்கே அதிகம் வருகின்றனர். கடற்கரை அழகைக் கண்டு களிப்பதற்கு கிழக்கு மாகாணத்தின் பாசிக்குடா கடற்பகுதிக்கும் அவர்கள் வருவதுண்டு.
ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மையப்படுத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களைத் தவிர இதர மக்கள் யாரும் சுற்றுலாவிற்கு என்று வன்னிப் பகுதிக்கு வருவதாக தெரியவில்லை.
எனினும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களும் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்பவர்களும் கண்டிப்பாக முல்லைத்தீவில் உள்ள அதிசயத்தையும் கண்டு களிக்க வேண்டும். ஆசியாவின் அதிசயம் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இலங்கையில் மட்டுமல்லாமல் வேறு எங்கும் இருப்பதாக நானறியவில்லை.
அந்த அதிசயம்தான் வீதிக்குப் படிக்கட்டு கட்டியுள்ள அதிசயமாகும். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் சந்தியில் இருந்து துணுக்காய் செல்லும் பிரதான சாலையானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது. இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டபோது மல்லாவி நகரின் மத்தியில் வீதி ஏற்கனவே உயரமாகவும் அனிஞ்சியன்குளம் பாடசாலை முன்பாக மிகவும் இறக்கமாகவும் உள்ளதனால் வீதியின் உயரத்தில் ஏறுவது சிரமமாகவுள்ளதோடு மழைக்காலத்தில் பாடசாலையை நோக்கி அதிக வெள்ளம் வருவதனால் சிரமத்தைப் போக்க பாடசாலை முன்பாகவிருந்து சரிவாக வீதியை உயர்த்தித் தருமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது இப்பணிக்கு வீதி வேலைக்கு மேலதிகமாக 15 கோடி ரூபா நிதி வேண்டும் எனக் கணக்கிடப்பட்ட சமயம் அந்த நிதியைப் பெறவும் அப்பகுதி மக்கள் அலைந்து திரிந்து ஒப்புதல் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வீதி அமைப்பின்போது அனிஞ்சியன்குளம் பாடசாலை முன்பாக பள்ளமாக இருந்த இடத்தில் 3 அடி உயர்த்தி சமன் செய்ய வேண்டிய வீதியில் மெத்தப்படித்த பொறியியலாளர்கள் ஏற்கனவே உயரமாக இருந்த அதே இடத்தில் மேலும் 3 அடி உயர்த்தி மல்லாவி நகரில் இருந்த அத்தனை வர்த்தக நிலையத்தையும் புறமொதிக்கு போக்குவரத்திற்கும் சீர் அற்ற ஒரு வீதியை அமைத்தனர். இதன்போது 15 கோடி ரூபாவினையும் விரயம் செய்து தரம் அற்ற அபிவிருத்தி ஒன்றை மேற்கொண்டபோது மல்லாவி மக்களும் வர்த்தக சங்கமும் சந்திக்காத அதிகாரிகளும் இல்லை கோரிக்கை விடாத அமைச்சர்களும் இல்லை.
இதனையடுத்து அந்த அதிசய கட்டுமானம் செய்யப்பட்ட இடத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் வரை நேரில் சென்று பார்த்தபோது உயர்த்திய அளவை உடைத்துத் தருமாறு மக்களும் வர்த்தகர்களும் கெஞ்சினர்.
ஆனால், அந்த வீதியை உடைத்தால் கட்டுமான வேலை செய்தவர்களே செலவு செய்த பணம் முழுவதையும் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதனாலும் அதற்குப் பொறுப்பானவர்களின் வேலைக்கே ஆபத்து நேரிடும் என்பதனாலும் அதிகாரிகள் அது தொடர்பில் சிந்திக்கவே மறுத்து விட்டனர். இதன் பின்னரே வீதியின் நடுவே இருந்து கரைக்குச் செல்ல வீதியில் இரு இடங்களில் படிகட்டும் கேலிக்கூத்து இடம்பெற்றது. இந்த வீதியை உடைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் இன்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
வீதிப்பணிக்கு அநியாயமாக 15 கோடி ரூபா செலவு செய்தபோதும் அவலங்கள் மட்டுமே அதிகம் நிறைந்த மாவட்டமான முல்லைத்தீவில் சகல தரத்திலான 2 ஆயிரத்து 95 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் காணப்படும் நிலையில் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை 414 கிலோ மீற்றர் வீதிகளே தார் வீதிகளாகவும், தார்ப் படுக்கை ( காப்பெற் ) வீதிகளாக மாற்றப்பட்டு 1,681 கிலோ மீற்றர் வீதிகள் கிடங்கும், கிரவலும், மண்ணுமாகவே காட்சி தருகின்றன.
அதாவது வீதிகள் அனைத்துமே வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி சபைகளிற்கு சொந்தமானவை. இவை தவிர விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான போக்குவரத்து பாதைகளும் உண்டு.
இவற்றிலே `ஏ` தர வீதியில் 99.92 கிலோ மீற்றர் வீதியும் `பி` தரத்தில் 103.13 கிலோ மீற்றர் வீதியுமாக 203 கிலோ மீற்றர் நீள வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகையின் கீழும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ்த்தர வீதியில் 399.95 கிலோ மீற்றர் வீதியும் டீ தர வீதியில் 17.5 கிலோ மீற்றரும் உள்ளது.
இதேபோன்று உள்ளூராட்சி சபைகளிற்குச் சொந்தமான வீதிகளில் 1,475 கிலோ மீற்றர் வீதிகள் உள்ளன. இவற்றிலே `சீ` மற்றும் `டீ’ தர வீதிகளில் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் 80 கிலோ மீற்றர் வீதி மட்டுமே முழுமையான தார் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளிற்கு சொந்தமான 1,475 கிலோ மீற்றர் வீதியில் கொங்கிறீட் வீதிகளாக 35 கி.மீற்றரும் தார் வீதிகளாக 99 கிலோ மீற்றரும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதே நேரம் மேலும் 711 கி.மீ வீதியானது கிரவல் கொண்டு சீர் செய்யப்பட்டுள்ள அதே நேரம் மேலும் 626 கி.மீற்றர் வீதி வெறும் மணல் வீதிகளாகவே உள்ளன.
இந்த ஒரு விபரமே இந்த மாவட்டத்தின் அவலத்தின் தன்மையை எடுத்தியம்பும் என நம்புகின்றேன்.
இன்று உலகம் முழுக்க வருமானத்தின் பெரும்பகுதி இரு விடயங்களிற்கே செலவிடப்படுகின்றது. அது இலங்கைக்கும் பொருந்தும். அது முல்லைத்தீவிற்கு மட்டும் விதி விலக்கு அல்ல. அதாவது உலகம் இன்று கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரு துறைகளிற்கே அதிக பணம் அல்லது வருமானத்தின் பெரும்பகுதி செலவிடப்படுகின்றது. அது அரச வைத்தியசாலை, அரச பாடசாலைகளிற்கு அப்பால் தற்போது இலங்கையில் தனியார் வைத்தியசாலை மற்றும் தனியர் கல்விக் கூடங்களிலேயே அதிகம் நாடுவதன் மூலமே பெருந்தொகை நிதி வெளிச் செல்கின்றது.
வடக்கு மாகாணத்தில் அதிக வைத்தியசாலையோ அல்லது அதிக கல்வி நிலையங்களோ யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில்தான் உள்ளன. அதனால் கல்வி மற்றும் சுகாதாரங்களிற்காக முல்லைத்தீவில் செலவு செய்யும் நிதியும் பிற மாவட்டத்திற்கே செல்கின்றது. இதனைப் போக்க தனியார் வைத்தியசாலைகள் முல்லைத்தீவில் முதலிடவும் அதிகம் நாட்டம்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதிலும் இரு முக்கிய விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. ஒன்று வைத்தியர்கள் இரண்டாவது அதிக எண்ணிக்கையானோர். இது இரண்டையும் முல்லைத்தீவில் எதிர்பார்ப்பது மட்டுமல்ல அங்கே கிடையாது என்பதே யதார்த்தம். அதனால் இதனை எக்காலத்திலும் இங்கே நிவர்த்தி செய்ய முடியாது என்பதும் தெரிகின்றது. ஏனெனில், மாவட்டத்திற்கு 95 வைத்தியர்கள் தேவையாகவுள்ள நிலையில் இன்றுவரை 61 வைத்தியர்களே பணியில் உள்ளனர். இதே நேரம் இவர்களிலும் 20ற்கும் மேற்பட்டவர்கள் சிங்களவர்கள். அவ்வாறானால் ஏன் மருத்துவர்கள் இந்த இடங்களில் பணியாற்ற முன்வருவது இல.லை எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை மருத்துவர்களிடம் எழுப்பும் போது மருத்துவர்கள் எழுப்பும் பதில் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகின்றது. அதாவது இந்த மாவட்டத்தில் இருந்து ஆண்டிற்கு 4 அல்லது 5 பேர் மருத்துவத்துறைக்குத் தேர்வாகின்றனர். அதன்படி 2010ஆம் ஆண்டிற்கு பின்பு தேர்வானவர்களிலேயே 35 முதல் 40 பேர் வரை மருத்துவர்களாக வெளிவந்துள்ளனர். ஆனால் அந்த மாவட்ட வைத்தியர்களே 20பேர்தானே பணியில் உள்ளனர். அதாவது அந்த மாவட்ட மக்கள் தொகையின் பிரகாரம் மாவட்ட கோட்டாவில் தேர்வாகி பல்கலைக்கழகம் வந்த மருத்துவர்களே யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி மற்றும் வெளிநாடு எனப் பணியாற்றும்போது நாம் ஏன் அவர்கள் தொடர்பில் மட்டும் சிந்திக்க வேண்டும் என எழுப்பும் பதில் கேள்வியால் அந்த விடயத்திற்கு அத்தோடு முற்றுப்புள்ளி இடப்பட்டது.
இதேநேரம் வைத்தியசாலைகளின் தேவை தினமும் வேறுபட்டதாக இருப்பினும் 2016ஆம் ஆண்டுவரை உயிரிழந்தவர்களின் உடல்களை பிணவறையில் கைத்தொலைபேசியின் வெளிச்சத்தில் தேடும் அவலத்துடனேயே இங்கே காணப்பட்டதன் சான்று இன்றும் உள்ளது.
இவை இவ்வாறெனில் மாவட்டத்தில் 3,389 குடும்பங்கள் இருப்பிடத்திற்கு காணி இன்றியும் 9 ஆயிரம் குடும்பங்கள் இருப்பிடம் இன்றியும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டாளும் 922 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் உரிமையாளர்களை காணவில்லை என்னும் நிலையில் அனாதரவாகக் காணப்படுகின்றன. அதாவது இவை அணைத்தும் வீட்டுத் திட்டங்களின் ஊடாக வழங்கப்பட்ட வீடுகள் என்பதுதான் மிகப்பெரும் ஆச்சரியம்.
பாமர மக்களிற்கு வழங்கிய வீடுகளில்தான் மக்கள் இல்லை என்றால், சில முஸ்லீம் மக்கள் புத்தளத்திலும் வீடுகளை வைத்திருக்கும் நிலையில் இங்கும் வீட்டுத் திட்டம் வழங்கியதனால் அவை இன்று கட்டப்பட்ட காலம் முதல் பாழடைகின்றன எனக் கூறப்பட்டாலும் மாங்குளம் பகுதியிலே 50 அரச உத்தியோகத்தர்களிற்கு அரச வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தில் இன்று 8 வீடுகளில் கூட மக்கள் இன்றி அவை பாழடைந்து காணப்படுவதுடன் சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் காணப்படுவதாகக் குற்றம் சாட்டுவதோடு இதுதான் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியின் அடையாளமாகவும் காட்சி தருகின்றது என்கின்றனர் அயல் கிராம மக்கள்.
( அவலப் பட்டியல் தொடரும் )
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 01
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 02
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 03
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 04
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 05
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 06