தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை ஒரு பொதுக் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என்ற கருத்து இந்தியா உட்பட எல்லா மேற்கு நாடுகளிடமும் உண்டு. குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் தூதுவர்கள் அதை வலியுறுத்திக் கூறுவது உண்டு. தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை ஒரே குரலில் முன்வைப்பது பலமானது என்று அவர்கள் எப்பொழுதும் கூறுவார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டுக்குள் ஒரு தீர்வை கொண்டு வரப்போவதாகக் கூறிய பின் அவருடைய அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வாவும் அவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே முதலில் ஒற்றுமைப்பட வேண்டும் என்று.
தமிழ்க் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. அது உண்மை. தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்தவும் முடியாது. அதுவும் உண்மை. ஒன்றாக இருக்க முடியாத காரணத்தால்தான் கட்சிகள் தங்களுக்கு இடையே பிரிந்து நிற்கின்றன. அவர்கள் கூறுவதுபோல கொள்கை வேறுபாடு அல்லது செய்முறை வேறுபாடு என்பதெல்லாம் உண்மை அல்ல. கொள்கை பொறுத்து தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே விதமான தீர்வைத்தான் முன்வைக்கின்றன. செயல்வழி பொறுத்தும் அவர்களுக்கு இடையே வேறுபாடு கிடையாது.எல்லாருமே தேர்தல்மைய அரசியல்வாதிகள்தான். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை வித்தியாசமாகக் காட்ட முற்படுகிறது.
தன்னை ஏனைய கட்சிகளிடமிருந்து பிரித்துக் காட்டும் அந்தக் கட்சியானது தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சி போலவும் காட்டிக் கொள்கிறது. ஆனால் செயல் வழியில் அந்தக் கட்சியும் கூட்டமைப்பைப் போலதான் செயல்படுகிறது. அவர்கள் ஒரு கட்சிதான். மக்கள் இயக்கம் அல்ல. தங்களுடைய தீர்வு எது என்பதை முன்வைத்து அதை நோக்கி அவர்கள் இன்றுவரை தொடர்ச்சியாகப் போராடவில்லை. மாறாக கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் முன்வைக்கும் தீர்வுக்கு எதிராகத்தான் அவர்கள் போராடி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் அக்கட்சி கூர்மையான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. ஆனால் அது ஒரு கட்சி தான்; போராட்ட இயக்கமல்ல. எனவே,மூன்று கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுதான். அது மட்டுமல்ல, இம்மூன்று கட்சிகளும் இதுவரை காலமும் சமர்ப்பித்த தீர்வு முன்மொழிவுகளும் ஏறக்குறைய ஒரே விதமானவைதான்.
இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை வரலாற்றில் தமிழ்த் தரப்பு மிகக்குறுகிய காலத்துக்குள் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை வழங்கிய ஒரு காலகட்டம் எதுவென்று பார்த்தால், அது 2016 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி இன்றுவரையிலுமான ஒரு காலகட்டம்தான். 2016ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றி இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளை தொடங்கினார்.அதிலிருந்து தொடங்கி இன்றுவரையிலும் தமிழ்க் கட்சிகள் தங்களுடைய தீர்வு முன்மொழிவுகளை அரசாங்கத்திடமும் நிபுணர் குழுக்ககளிடமும் சமர்ப்பித்து வருகின்றன. தமிழ்க் கட்சிகள் மட்டுமல்லதமிழ் மக்கள் பேரவை, குடிமக்கள் சமூகங்கள்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் என்று பல்வேறு வகைப்பட்ட தமிழ்த் தரப்புகளும் தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்திருக்கின்றன. குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வு முன்மொழிவை முன்வைத்தது. அது ஒரு சமஸ்டி முன்மொழிவு. வடமாகாண சபையும் ஒரு தீர்வு முன்மொழிவை முன்வைத்தது. அதுவும் சமஸ்ரிதான். அதன் பின் விக்னேஸ்வரனின் கட்சி ஒரு முன்மொழிவை முன்வைத்தது. அது மிக உயர்வான ஒரு சமஸ்டி. அதே சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஒரு முன்மொழிவை முன்வைத்தது. ஒரு நாடு இரு தேசம் என்று கூறிய அக்கட்சி இப்பொழுது இரண்டுக்கும் மேற்பட்ட தேசங்கள் என்ற பொருளில் பல தேசிய இனங்களுக்குரிய ஒரு கூட்டாட்சி பற்றிக் கதைக்கிறது.அவர்களும் கூறவருவது ஓர் உயர்ந்த பட்ச சமஸ்டியைத்தான்.
அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.அந்த உரிமையின் பிரகாரம் அவர்கள் ஒரு உயர்ந்த தீர்வை பெற முடியும் என்று மூன்று கட்சிகளும் கூறி வருகின்றன.எனவே கடந்த பல தசாப்த கால தீர்வு முன்மொழிவுகளை தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் சமஷ்டிப்பண்புடைய தீர்வைதான் முன்வைத்து வருகிறார்கள்.
இதில் ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சிகள் குறித்த சர்ச்சைகள் உண்டு. அதுவும் ஒரு சமஸ்ரித் தீர்வு என்று கூட்டமைப்பு கூறியது.ஆனால் அதற்கு சமஷ்டி என்ற லேபல் கிடையாது. லேபலைப் போட்டால் அது சிங்கள மக்களைக் குழப்பிவிடும் என்று கூறி அத்தீர்வை ஒருமித்த நாடு என்ற பொருள்பட “எக்கிய ராஜ்ய” என்று அவர்கள் அழைத்தார்கள். எனினும் கூட்டமைப்பை விமர்சித்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கள மக்களுக்கு அதை ஒருமித்த ராட்சியம் என்று கூறிக்கொண்டு தமிழ்மக்களுக்கு அதை சமஸ்டிப் பண்புடையது என்று கூறுவதன் மூலம், இரண்டு இனங்களையும் ரணிலும் கூட்டமைப்பும் சேர்த்து ஏமாற்றுகின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டை அவர்கள் முன் வைத்தார்கள். அக் குற்றச்சாட்டில் உண்மை உண்டு.
அத்தீர்வு முயற்சியை மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குழப்பிவிட்டார். அதன்பின் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். அந்த நிபுணர் குழுவின் முன் தமிழ்த்தரப்பு தனது முன்மொழிவுகளை வைத்தது.
இப்பொழுது மறுபடியும் ரணில் வந்துவிட்டார்.அவர் 2018இல் தான் விட்ட இடத்தில் இருந்து தொடங்கப் போகிறாரா? அல்லது அதே தீர்வை வேறு ஒரு லேபலோடு கொண்டு வரப்போகிறாரா? அல்லது முழுமையான சமஷ்டிப் பண்புடைய, வெளிப்படையான ஒரு தீர்வை முன்வைக்கப் போகிறாரா ?என்ற கேள்வி இங்கு முக்கியம்.
ரணில் விக்கிரமசிங்க விசுவாசமாக ஒரு தீர்வைக் காண முயற்சிக்கிறாரா என்ற சந்தேகம் உண்டு.ஏனெனில் பன்னாட்டு நாணய நிதியம், ஐநா போன்றவற்றை சமாளிப்பதற்கு ஒரு தீர்வை காண முயல்வதான ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நிர்பந்தம் அவருக்கு உண்டு. முன்னாள் சமாதானத் தூதுவர் சூல் ஹெய்ம் களத்தில் இறங்கியிருப்பதும் அந்த நோக்கத்தோடுதான் என்று கருதப்படுகிறது. எனவே ரணில் ஏதோ ஒரு தீர்வை நோக்கி, ஏதோ ஒரு நகர்வை முன்னெடுக்கப் போகிறார் என்று மட்டும் தெரிகிறது.
அந்த நகர்வை எதிர்கொள்வதற்காக எனைய கட்சிகளோடு இணைந்து செயல்படத் தயார் என்று கூறி, கூட்டமைப்பின் பேச்சாளர் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தமிழ்மக்கள் கேட்பது சமஸ்ரித் தீர்வைத்தான் என்பதை தமிழ்க்கட்சிகள் ஒருமித்த குரலில் கூறவேண்டும் என்ற நோக்கம் அந்த அழைப்பில் இருந்தது.அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர்களை சமபந்தரின் கொழும்பு இல்லத்தில் கூடுமாறும் அவர் கேட்டிருந்தார். ஆனால் அந்த நகர்வை அவர் உரிய பொறுப்புணர்ச்சியோடு பக்குவமாக முன்னெடுக்கவில்லை.குறிப்பாகத் தனது தமிழரசுகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அவர் அது பற்றி எதுவும் தெரிவித்திருக்கவில்லையாம். இந்நிலையில் ஏனைய கட்சிகள் அந்த அழைப்பு சம்பந்தரிடம் இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிகிறது. எனவே சுமந்திரனின் முயற்சி கடந்த செவ்வாய்க்கிழமை வெற்றியளிக்கவில்லை. அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்ககட்சிகள் இந்த விடயத்தில் ஒன்றாகக் கோரிக்கைகளை முன்வைப்பதுதான் ரணில் விக்ரமசிங்கவை அம்பலப்படுத்தும். அது மட்டுமல்ல, பன்னாட்டு நாணய நிதியம், ஐநா போன்றவை அரசாங்கத்தை பிணை எடுக்கும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு முக்கிய முன்நிபந்தனையாக வைக்குமாறு தமிழ் கட்சிகள் நிர்பந்திப்பதற்கும் அது உதவும்.
இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடி என்பது இனப்பிரச்சினையின் நேரடி விளைவு. சிறிய இலங்கத்தீவு அதன் அளவுப்பிரமாணத்தை விட மிகப்பெரிய ராணுவத்தை வைத்திருக்கின்றது. அதில் மூன்றில் இரண்டு பகுதி தமிழ் பகுதிகளில்தான் நிலை கொண்டிருக்கிறது. உலகில் பாதுகாப்புச் செலவினம் என்று பார்த்தால் குட்டி இலங்கைத்தீவு இஸ்ரேலுக்கு அடுத்ததாக காணப்படுகிறது. 100 பிரஜைகளுக்கு எத்தனை படை வீரர் என்ற கணிப்பில் இலங்கைத்தீவு பத்தாவது இடத்தில் காணப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்திலும் பாதுகாப்பு செலவினங்களுக்கே அதிகளவு நிதி (410 பில்லியன் ரூபாய்) ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண முடியாது என்றபடியால், இனப் பிரச்சினையை தீர்ப்பது என்பது பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்குரிய ஒரு முக்கிய முன் நிபந்தனையாக முன் வைக்கப்பட வேண்டும். அதைத் தமிழ்த் தரப்பு ஒரே குரலில் முன்வைக்க வேண்டும். அவ்வாறு ஒரு நிபந்தனையை முன் வைக்கும்பொழுது உலகசமூகம் தமிழ்த்தரப்பிடம் உங்களுடைய முன்மொழிவைக் காட்டுங்கள் என்று கேட்கும். அந்த நேரம் எங்களுடைய எல்லா முன் மொழிவுகளும் சமஷ்டிப் பண்புடையவை என்று தமிழ்க் கட்சிகள் ஒரே குரலில் கூறலாம்.
தமிழ்க்கட்சிகள் இதுவரை வைத்த தீர்வுகள் பெருமளவுக்கு சமஷ்டிப் பண்புடையவைதான். ஆனால் அதை அவர்கள் தனித்தனியாகத்தான் முன்வைத்திருக்கிறார்கள். எல்லாரும் ஒரு மேசையில் கூடி, ஒரே குரலில் இதுதான் எங்களுடைய தீர்வு முன்மொழிவு என்று இதுவரை முன்வைக்கவில்லை. அப்படி வைக்க வேண்டிய ஒரு தேவை உண்டு.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய கட்சிகளோடு ஒத்துழைக்காமல் விடக்கூடும். அதுவும் நல்லதே. அத்தீர்வு முன்மொழிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டுவது போல சமஸ்டி பண்பு குறைவாக இருந்தால் அக்கட்சி அதை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்க்க ஒரு கட்சி இருந்தால்தான் கூட்டமைப்பு தனியோட்டம் ஓட முடியாது.
எனவே,தமிழ்த்தரப்பு தமது தீவு முன்மொழிவுகள் அனைத்தும் சமஷ்ரிப் பண்புடையவை என்பதனை தெளிவாகவும் தீர்க்கமாகவும் அனைத்துலக சமூகத்தின் முன் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இலங்கைத்தீவை பிணை எடுக்க முயற்சிக்கும் மேற்கத்திய தரப்புகளோடு தமிழ்த்தரப்பு உறுதியான ஒரு இடத்தில் இருந்தபடி பேச முடியும். ரணில் ஒரு நரி, சூழ்ச்சிகள் செய்கிறார் என்று தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருக்காமல், தமிழர்களும் தந்திரம் பழக வேண்டும்.