-வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் என்.எம்.ஆலம் விசனம்.
(மன்னார் நிருபர்)
(18-11-2022)
ஜனாதிபதியின் மன்னார் விஜயம் இங்குள்ள மக்களின் பிரச்சினையை அறிவதை விட மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை எவ்வாறு அரசிற்கு ஏற்ற வகையில் பயண்படுத்திக் கொள்ள முடியும், அல்லது எவ்வாறு அந்த வளத்தை இன்னும் ஒருவருக்கு கையளிக்களாம் என்ற நோக்கத்துடன் அவரது வருகை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பேச்சாளரும், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளருமான என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்திற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தெளிவு படுத்தும் வகையில் அவருடன் சந்திப்பை மேற்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
-ஜனாதிபதியின் மன்னார் விஜயம் இங்குள்ள மக்களின் பிரச்சினையை அறிவதை விட மாவட்டத்தில் இருக்கும் வளங்களை எவ்வாறு அரசிற்கு ஏற்ற வகையில் பயண்படுத்திக் கொள்ள முடியும், அல்லது எவ்வாறு அந்த வளத்தை இன்னும் ஒருவருக்கு கையளிக்கலாம் என்ற நோக்கத்துடன் அவரது வருகை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்றோம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களும் அவரது காலத்தில் அவ்வாறான ஒரு நோக்கத்தோடு தான் மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
-அவர் நடுக்குடா பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.தற்போது அவருக்கு பதவி கூட இல்லாமல் போயுள்ளது. அதே போன்று தற்போதைய ஜனாதிபதி இவர்களும் அரசியல் நோக்கத்திற்காக மன்னாரிற்கு வருகை தர உள்ளார்.அவர்கள் மக்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் வாழும் மக்களும் அவர்களுக்கே வாக்களித்துள்ளனர்.
மக்களின் வாக்குகள் ஊடாகவே அவர்கள் இன்று தமது பதவியை பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மக்களை சந்திப்பதில் ஏன் பின்னுக்கு நிற்கின்றார்கள்?
மக்களுக்கு அச்சப்படுகின்றார்களா? அல்லது மக்களின் தேவைகள் பெரிதாக உள்ளது. ஒன்றுமே மக்களுக்கு செய்யவில்லை என அச்சப்படுகின்றார்களா? இவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மக்களை சந்திப்பதை தவிர்த்துக் கொள்ளுகிறார்கள்.
குறிப்பாக மீனவ சமூகமாக எமது பிரச்சினை மன்னார் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. இந்திய மீனவர்களால் அழிக்கப்பட்ட வளங்களும், அவர்களினால் ஏற்படுகின்ற பிரச்சனைகளை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.
ஜனாதிபதியின் வருகை கூட ஒரு சந்தர்ப்பத்தை தரும் என்று எதிர் பார்த்தோம். ஆனால் அவரும் மீனவர்களை சந்திக்க தயார் இல்லை என்ற எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது.
இந்திய மீனவர்களின் வருகை, எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் சீராக கிடைப்பதில்லை உள்ளிட்ட விடையங்கள் மற்றும் கிடைக்கும் எரி பொருளை வைத்து தொழில் செய்ய முடியாத அளவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எரிபொருளை கொள்வனவு செய்வதில் எவ்வாறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கிறார்களோ அவ்வாறே அவர்களினால் பிடிக்கப்படும் மீன்களையும் விற்பனை செய்வதில் கஷ்டப்படுகிறார்கள்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடிய அல்லது திட்டமிடல் இல்லாத அரசு இன்று பதவியில் இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த பாதீட்டில் கடல் தொழில் சார்ந்த விடயங்களுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. நன்னீர் மீன் வளர்ப்பிற்கான திட்டங்களை உருவாக்கி உள்ளார்கள். அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.ஆனால் கடற்றொழில் குறித்து எந்த திட்டமும் இல்லை.அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. எனவே எமது சந்ததியும் கடலை நம்பி உள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரமும் கடல் தான். எனவே மன்னார் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள ஜனாதிபதி அவர்கள் நடுக்குடா பகுதியில் உள்ள மீனவர்களை மட்டும் சந்திப்பதாக அறிகின்றோம்.
எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்துகின்ற பல மீனவ அமைப்புகள், தலைவர்கள் உள்ள நிலையில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகள் மட்டும் கேட்டறிவது நியாயம் இல்லை.
அதிகாரிகளும் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ் விடயத்தில் பாராமுகமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. என அவர் மேலும் தெரிவித்தார்.