*-நக்கீரன்*
கோலாலம்பூர், நவ.18:
2004 பொதுத் தேர்தல் வரை மலேசிய தேர்தல் களத்தில் சொல்லி அடித்து 100% வெற்றியைப் பெற்று வந்த மஇகா சார்பில் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதும் அதற்கு நாட்டின் பெரிய தொகுதியான காப்பார் தொகுதியைப் பயன்படுத்தியதும் வழக்கமாக இருந்தது.
2008 12-ஆவது பொதுத் தேர்தலின்போது அடித்த அரசியல் ஆழிப் பேரலையில் காப்பாரில் களம் கண்ட பாதுகா கோமலா கிருஷ்ணமூர்த்தி அடித்துச் செல்லப்பட்டார்.
அந்தத் தேர்தலில் மக்கள் கூட்டணி சார்பிலும் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து எந்தப் பெண்ணும் நிறுத்தப்படாததால், அரசியல் அதிரடி படைத்த அந்த 12-ஆவது நாடாளுமன்றத்தில் ஒரு தமிழச்சியின் குரல்கூட ஒலிக்கவில்லை.
அடுத்த இரு தேர்தலிலும்கூட மஇகா சார்பில் ஒரு பெண் பிரதிநிதியை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியவில்லை; அதேவேளை, 13, 14-ஆவது தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ‘எதிரணி அரசியல் மறவர்’ பட்டுவின் மகளான கஸ்தூரி ராணி, பத்து காவான் தொகுதியில் இருந்து ஜசெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆளும் அணியோ அல்லது எதிரணியோ எதுவாக இருந்தாலும் ஒரு தமிழச்சியின் குரல் மலேசிய நாடாளுமன்றத்தில் ஒலித்து வந்தது. இருந்தபோதும், மலேசியத் தமிழ் பெண்கள் மத்தியில் அந்த அளவிற்கு ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீரைப் போலத்தான் கஸ்தூரியின் அரசியல் பயணம் அமைந்திருந்தது. ஆனால், தேசிய அளவில் மகளிர் சமுதாயத்திற்கும் பன்னாட்டு அளவில் மனித உரிமை குறித்த பிரச்சினைகளிலும் கஸ்தூரி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த முறை அவர் போட்டியிடவில்லை.
40 வயதை எட்டிய கஸ்தூரி, அண்மையில் மணம் முடித்து, இல்லறம் என்னும் நல்லற வாழ்வை ஏற்கொண்டார்.
இந்தச் சூழலில், நாளை நவம்பர் 19-இல் உருவாகவுள்ள 15-ஆவது நாடாளுமன்றத்தில் மீண்டும் தமிழச்சியில் குரல் ஒலிக்குமா என்ற எதிர்பார்ப்பு மலேசிய இந்திய சமுதாயத்தில், குறிப்பாக தமிழ்ப் பெண் குலத்தில் எழுந்துள்ளது.
தேசிய முன்னணி சார்பில் மஇகா-வின் மோகனா முனியாண்டியும் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் மக்கள் நீதிக் கட்சி-பிகேஆரின் சரசுவதி கந்தசாமியும் களம் இறங்கியுள்ளனர்.
இந்த இரு தமிழ்ப் பெண்களின் குரல் மலேசிய நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா என்பதை நாளை நவம்பர் 19, சனிக்கிழமை வாக்களிக்கப்போகும் கோல லங்காட், தாப்பா தொகுதிகளின் வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
கடந்த முறை காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் களம் கண்டு வெற்றிக் கோட்டை தவறவிட்ட மோகனா முனியாண்டி, சளைக்காமல் இந்த முறை கோல லங்காட் தொகுதியில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து மஇகா சார்பில் போட்டி இடுகிறார்.
தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்திலும் அழைத்த குரலுக்கு செவிசாய்த்து பேசிய மோகனா, தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திம், மஇகா வட்டாரத் தலைவர்கள்-தொண்டர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சளைக்காமல் களமாடி தேர்தல் பணி ஆற்றுகின்றனர். அதனால் கோல லங்காட் மக்கள் ஆதரவுடனும் ஆண்டவன் அருளாலும் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மோகனா முனியாண்டியை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜி.மணிவண்ணன் பிகேஆரைச் சேர்ந்தவர். 2013 தேர்தலில் காப்பாரில் வென்ற இவர், 2018 தேர்தலில் பேராக் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
222 தொகுதிகளில் 112-ஆவது தொகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள கோல லங்காட், தொகுதியில் தனக்கான வெற்றி வாய்ப்பு குறித்து கருத்தறிய மணிவண்ணனுடன் பல முறை தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியவில்லை.அவரின் நண்பர் அரி மூலம் முயன்றும் பயனில்லை.
எது எவ்வாறாக இருந்தாலும் நம்பிக்கைக் கூட்டணி வசம் இருக்கும் கோல லங்காட் தொகுதியில், தற்பொழுது 6 பேர் களமிறங்கியுள்ள நிலையில் ஒரு தமிழச்சி அங்கு தேர்ந்தெடுக்கப்ப்டுவாரா என்பது நாளை இரவில் தெரிந்துவிடும்.
அதைப்போல, இன்னொரு தமிழ்ப் பெண் சரசுவதி கந்தசாமி போட்டியிடுவது நாடாளுமன்ற தொகுதி வரிசையில் 72-ஆவது இடம் பிடித்துள்ள தாப்பா.
பேராக் மாநிலம் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் 1984-இல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, பாரம்பரியமான மஇகா கோட்டையாகும். ‘நினைவில் வாழும்’ டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன், டான்ஸ்ரீ க.குமரன், டான்ஸ்ரீ சு.வீரசிங்கம் ஆகியோர் வெற்றிக்கொடி நாட்டிய தொகுதி தாப்பாவாகும்.
2008-இல் தேசிய முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்த நேரத்திலேயே டத்தோஸ்ரீ மு.சரவணன் அங்கு வெற்றி முகட்டை எட்டினார். தொடர்ந்து அடுத்த இரு தேர்தல்களிலும் வென்ற நிலையில், இப்பொழுது 4-ஆவது முறையாக சாதனை படைக்க புறப்பட்டிருக்கும் அவரிடம் தொகுதில் நிலவரம் குறித்த கேட்டபொழுது, “என்னைக் கேட்டால் நான் வெல்வேன் என்றுதான் சொல்வேன்; அதனால், நீங்கள் கண்டதையும் கேட்டதையும் கொண்டு நீங்களே எழுதுங்கள்” என்று மிடுக்குடன் சொன்னார் டத்தோஸ்ரீ சரவணன்.
ஆறுமுக நாவலர், ‘தமிழும் சைவமும்’ இருவிழியென சொன்னதைப் போல, அரசியல் பணியையும் தமிழ் வளர்ச்சிப் பணியையும் இரு கரமெனக் கருதி அரசியலில் வலம்வரும் சரவணனின் இலக்கியத் தேடலுக்கு ஒன்றை சான்றாகக் கொள்ளலாம்.
கண்ணதாசன் அறவாரிய விழா ஏற்பாடு தொடர்பாக சரவணனுடன் சென்னைக்கு சென்றது தப்பாகப் போய்விட்டது என்று கலைஞர் கரு.கார்த்திக் ஒரு முறை சளிப்பாகக் கூறினார்.
காரணம் கேட்டதற்கு, “அவர் என்னங்க, சென்னையில் உள்ள அத்தனை புத்தகக் கடைகளுக்கும் சென்று, நூல்களாக வாங்கி, புத்தக மூட்டையோடு கோலாலம்பூர் திரும்பினார்” என்று கரு.கார்த்திக் சொன்னார்.
நாடாளுமன்ற பாரம்பரியத் தன்மை மிகுதியாக உள்ள சரவணன், இரு தவணைகள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபின், தற்பொழுது 15 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தொடர் உறுப்பியம் பெற்று வருகிறார்.
இந்த நிலையில்தான், நடுத்தர பட்டணமான தாப்பாவில் மீண்டும் களம் இறங்கி உள்ளார் இவர்.
அவரை எதிர்த்து போட்டியிடும் சரசுவதி கந்தசாமிக்கு தாப்பா தொகுதி வாக்காளர்கள் ஆதரவளித்து, முதல் முறையாக ஒரு பெண்ணை தங்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பார்களா என்பது இன்னும் ஒரு நாளில் தெரியவரும்.
“கடைசி நேரத்தில் பொருளாதார அணுகூலங்களை வகைதொகையின்றி அளிக்கின்றனர். போதாக் குறைக்கு இந்தியாவில் இருந்து கொள்கலன் மூலம் ஆடை இறக்குமதி செய்தி விநியோகிக்கின்றனர். அதனால், கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. இருந்தாலும், மலேசியாவின் அடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் என்று நாடு முழுவதும் அடிக்கும் ஆதரவு அலையால் நான் வெற்றி பெறுவேன்” என்று சரசுவதி நம்பிக்கை தெரிவித்தார்.
முடிவு, ஊதா நிற மை தோய்ந்த விரலோடு வாக்காளர்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை பொறுத்தது!