கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி & சிவா பரமேஸ்வரன்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
திருக்குறள்- பொருட்பால்-அரசியல்-இறைமாட்சி-குறள் எண் 385
பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்திற்கு தக்கபடி செலவிடுவதுமே வல்லமை வாய்ந்த நல்லரசு.
தாவிவரும் குதிரையைப்போல நூற்றுக்கு 68 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்கம் ((galloping Inflation)) காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் நாட்டின் அரைப்பங்கிற்கும் மேற்பட்டோர் வறுமையில் உழலுகின்றனர்.
அதேவேளை மத்தியதர வகுப்பு என்று இதுவரையில் சொல்லப்பட்ட அரச துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோரை உள்ளடக்கிய குழு திடீரெனக்கவிழ்ந்து விழுந்து தொழில் புரியும் வறிய வகுப்பினராக (working poor) அவதாரம் எடுத்துள்ள நிலையில், தொழில் இழப்புகளால் வருவாயை இழந்து பட்டினியால் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக உள்நாட்டு விமர்சகர்களும் சர்வதேச நிறுவனங்களும் எச்சரிக்கை விடுத்துள்ள பின்புலத்தில் 2023 ஆண்டுக்கான இலங்கையின் பட்ஜெட் அண்மையில் வாசிக்கப்பட்டது.
இப்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரு பட்ஜெட் வரவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் `ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்து மகிழ்ந்த நீரோ மன்னனைப்போன்று` தமது கற்பனை உலக இலக்குகளை எல்லாம் கட்டவிழ்த்துவிட்டு எட்டாத ஒரு பட்ஜெட்டை மக்களின் எதிர்பார்ப்புகளுடன் ஒட்டாத ஒரு பட்ஜெட்டை வாசித்திருக்கிறார் விக்கிரமசிங்க பூபதி.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைக்கு உடனடித் தீர்வையே இந்த பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கனவுலகிலேயே காலம் முழுவதும் சஞ்சரிக்கும் ஆட்சியாளர்களும் அவர்களுக்குத் தலைமையேற்றுள்ள `பின்வாசல்` ஜனாதிபதி ரணிலும் தனக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளைப் போலவே நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை கூறி ‘முட்டைக்கு வெள்ளையடித்துள்ளனர்`. நிகழ்கால யதார்த்தங்களை விளங்கிக்கொண்டு அதற்கு தீர்வுகளை அளிக்காமல் எதிர்காலத்தில் தேனும் பாலும் ஓடும் என்று ஆகாயத்தில் கோட்டை கட்டி மக்களை வாழ வைப்பதாகப் போலி வாக்குறுதி அளிக்கிறார்.
2048இல் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுகிறதா இல்லையா என்பதைச் சிந்திக்க இப்போது நேரமில்லை. ஒரு பட்ஜெட் ஒரு வருடத்திற்குரிய நிதிநிலை அறிக்கையே தவிர ஒரு அரசாங்கத்தின் நீண்டகால கொள்கை அறிக்கையல்ல. பிரித்தானியாவின் புகழ்பூத்த பொருளியல் வல்லுநரும் 1928இல் ஏற்பட்ட உலகப்பெருமந்தத்தின் பாதிப்பிலிருந்து மீட்சி பெற உதவிய கொள்கைகளை வகுத்தவருமான ஜோன் மேனார்ட் கெயின்ஸ் என்பவர் குறுங்காலப் பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வுகளை முன்வைக்க முயலுபவர்களை நோக்கி “நீண்டகாலத்தில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம்” (in the long run we are all dead) என்றார். அதே வாசகத்தையே விக்கிரமசிங்க பூபதிக்கும் இப்போது சொல்ல வேண்டியுள்ளது.
இப்போதுள்ள பிரச்சினைக்கு உடனடித்தீர்வு என்ன? ஒரு வருடத்திற்குள் நிலைமையை வழமைக்கு கொண்டுவர என்ன திட்டம் உள்ளது? அதைச் சொல்லுங்கள். அதைவிடுத்து மக்கள் நிகழ்காலத்தில் அனுபவிக்கும் துயர நிலை பற்றி கிஞ்சித்தும் சொரணை இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதமாக அதிகரிக்கப்போகிறேன் வெளிநாட்டு வர்த்தகத்தை 100 வீதத்திற்கு மேல் அதிகரிக்கப்போகிறேன் அடுத்து வரும் பத்து வருடங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பேன் என்றெல்லாம் அடைய முடியாத இலக்குகளை அடுக்கிக் கொண்டு போவது வேடிக்கையாக உள்ளது.
கடந்த 75 வருடங்களாக இதைத்தானே ஐயா சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் உருப்படியாக ஒரு ஆணியையாவது உங்களால் பிடுங்க முடிந்ததா? சிங்கப்பூரும் வியட்நாமும் பொருளாதார வளர்ச்சியில் கொடிகட்டிப்பறக்க இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாகத் தலைகவிழ்ந்து நிற்பதற்கு மக்களா காரணம்? அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களைக் கொட்டிக்கொடுத்ததா காரணம்?
இப்படியான கேள்விகளுக்கு மௌனமே பதிலாகவுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கியமையால் நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக மறைமுகமாகக் கூறுகிறார். எனவே இம்முறை நிவாரணங்கள் இல்லை என்கிறார். உலகில் முதலாளித்துவத்தின் தாயகமாகக் கருதப்படும் அமெரிக்கா தமது மக்கள் பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த போது மக்களின் வாழ்வாதாரத்தை தக்கவைக்க ஊக்குவிப்புப் பொதிகளை வழங்கியது. வர்த்தக சமூகத்தினருக்கு சலுகைகளை வழங்கி பின்னடைவில் குறுகிய காலத்தில் மீட்சி பெற உதவியது. இலங்கை இப்போது செய்வதைப்போல பல்முனை வரிகளை அதிகரித்து மக்களின் வாழ்க்கையோடு விளையாடவில்லை.
ஒரு பொருளாதாரத்தில் எப்போது வரிகளை அதிகரிக்க வேண்டும், எப்போது நிவாரணங்களை வழங்கவேண்டும் என்பதற்கெல்லாம் கோட்பாட்டு விளக்கங்களும் நடைமுறை உதாரணங்களும் உள்ளன. இப்போது இந்த பட்ஜெட்டில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து நீடித்திருக்கும் அபாயத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் அரசாங்கத்தின் ஒரே நோக்கம் எந்தெந்த வரிகளெல்லாம் உள்ளனவோ அவற்றையெல்லாம் அதிகரித்து கஜானாவை நிரப்புவதாகும். எவன் எக்கேடுகெட்டாலென்ன இது மட்டுமே ஒரே குறிக்கோளாகக் காணப்படுகிறது.
இலங்கையின் இன்றைய இழிநிலைக்கு மக்கள் காரணமல்ல, மாறாக அதற்கு நேரடிப்பொறுப்புக் கூறவேண்டிய நான்கு பேரை அடையாளப்படுத்துவது இலகுவான காரியம். எங்கு பிழைவிட்டோம் என்று இனித்தான் தேடப்போகிறாராம் நிதியமைச்சர். அந்த பொருளாதாரக் கொலையாளிகளையும் பிடியுங்கள் பொறுப்பக் கூறவையுங்கள். பொறுப்புக் கூறமுடியாத ஒரு மக்கள் பிரதிநிதியோ அதிகாரியோ ஒரு நாட்டின் சாபக் கேடாகும்.
இலங்கை சிலாகித்துக் கூறும் சிங்கப்பூரிலும், வியட்நாமிலும் இந்தப் பொறுப்புக் கூறல் எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதை விக்கிரமசிங்க பூபதி படித்துத் தெரிந்த கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விட்ட பிழைகளினால் நாடு சீரழிந்து கிடக்கிறது. கொள்ளை அடித்த பணம் எங்கு கொட்டிக்கிடக்கிறது? இப்போது யாரோ செய்த பாவத்திற்கான வேறு யாரோ தண்டனை அனுபவிப்பது போல இலங்கையின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திருடிய பணத்தைப் பொதுமக்கள் வரிகளாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த பட்ஜெட் தள்ளிவிட்டுள்ளது.
குற்றவாளிகள் சுதந்திரமான இறுமாப்புடன்- முடிந்தால் பிடியுங்கள் பார்க்கலாம்- என்று சவால் விடுக்கின்றனர். மறுபுறம் இந்த கொடிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாதகாப்பு செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புக்காக 539.2 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலிருந்தோ எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும் கேள்விக்கு உட்படுத்த முடியாத (holy cow) அதனை நியாயப்படுத்த இலங்கை சர்வதேச வர்த்தகத்தில் ஒரு கேந்திர முக்கியத்துவமிக்க நாடாக மாறுவதால் அதற்கு பாதுகாப்ப வழங்க இச்செலவுகள் அவசியம் என்கின்றனர்.
அதேவேளை இலங்கையிலேயே பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்ற மக்கள் வாழ்வதாக அரசாங்கமே அத்தாட்சிப்படுத்தும் மலையக மக்களின் துயர் துடைக்கவோ அல்லது முப்பதாண்டு கால யுத்தத்தால் பாழ்பட்டுப்போன வடக்கு கிழக்கு வாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்தோ அல்லது நகர்ப்புறங்களில் மிகவறிய நிலையில் உள்ள மக்கள் பற்றியோ எந்தவித கரிசனையும் காட்டப்படவில்லை. மாறாக ஜனரஞ்சகமான இலக்குகளைக் கூறி கவனத்தை திசை திருப்பம் முயற்சிக்கே பட்ஜெட்டின் பெரும்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுமக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தாம் சிரமப்பட்டு உழைக்கும் பணத்தில் கௌரவத்துடன் உயிர்வாழக்கூடிய சூழலை உடனடியாக உருவாக்குமாறு கேட்பதைத்தவிர மக்கள் வரிப்பணத்தில் தமது கழிவறைக்கு டிஷ்யூ காகிதத்தை கூட அரசாங்கத்தின் செலவில் அனுபவிக்கும் அரசியல் வாதிகளைப்போல எவரும் அரசாங்கத்திடம் பிச்சை கேட்டு நிற்கவில்லை.
வருமானம் மாறாமல் அல்லது வருமானம் குறைந்து போயுள்ள நிலையில் நாளாந்தம் எகிறிச் செல்லும் விலைகளைச் சமாளிக்க முடியாமல் வாழ்க்கைத்தரத்தை இழந்து வாடுவோர் அதற்கொரு முடிவைத்தான் கேட்கின்றனர். வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் திணறும் மக்களுக்கு நிவாரணங்களுக்குப் பதில் உடனடிப் லொத்தர் பரிசாக பல்குழல் ஏவுகணைகள் போல எல்லா முனைகளில் இருந்தும் வரி அதிகரிப்புகளை இந்த பட்ஜெட் பரிசாகத் தந்திருக்கிறது.
குறைந்த வருமானம் உள்ளவர்கள் வற் (VAT) வரிபோன்ற நேரடி வரிகளின் அதிகரிப்பால் மோசமாகப் பாதிக்கப்படும் அதே வேளை தமது கல்வி மற்றும் வாண்மைத்திறன்கள் காரணமாக ஒரு இலட்சம் ரூபாவக்கு அதிகமாக வருமானம் பெறும் ஒவ்வொருவரும் 36 சதவீதம் வரையிலான வரியைச்செலுத்துவதோடு இறக்குமதிவரி வற் (VAT)வரி உள்ளிட்ட சகல வரிகளையும் செலுத்த வேண்டும். இந்நிலையில் இந்த மத்தியதர வகுப்பினர் நடைமுறையில் தமது வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வரிசெலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அந்த துர்ப்பாக்கிய சூழல் நாட்டின் பணவீக்கம் 70 சதவீதத்தை எட்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் மாதாந்தம் ஐந்து இலட்சம் ரூபா வருமானம் கொண்ட ஒருவர் சுமார் ஒன்றரை இலட்ச ரூபாவை வரியாகச் செலுத்த வேண்டும். அதே வேளை அந்த ஐந்து இலட்சம் ரூபாவின் பொருள் கொள்வனவு ஆற்றல் வெறும் ஒன்றரை இலட்ச ரூபா மாத்திரமே. இந்நிலையில் மத்தியதரக் குடும்பங்கள் பல தொழில் புரியும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர். ஒரு நாட்டின் பட்ஜெட் மக்களை வறுமையிலிருந்து மீட்பதாக இருக்கவேண்டும். ஆனால் 2023 ஆண்டிற்கான இலங்கையின் பட்ஜெட் வறுமையை அதிகரிப்பதற்கான பட்ஜெட்டாகவம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு செலவு செய்ய தேவையான பணத்தைக் கறக்கும் பட்ஜெட்டாகவும் அமைந்துள்ளது.
`அரகலய` என்பது ஏதோ ஒருமுறை நிகழ்ந்து-ஒரு ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட சம்பவம்- அதற்கு முதல் நாள் ஆதரவு தெரிவித்து மறு நாள் பதவிக்கு வந்ததும் கோத்தாவைவிடவும் மோசமாக நடந்து அவர்கள் மீது அரசின் அடக்குமுறையை ஏவிவிட்டு ஒடுக்கிவிடலாம் என்று அரசியல் அனுபவசாலியான ரணில் விக்ரமசிங்க நினைப்பாராயின் அது கனவுலகின் வாழ்வதற்கு சமமாகும். அண்மையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்படக் கூடும் அப்போது கோத்தாவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவர் கையிலேயே அடங்கியுள்ளது.
தன்னை ஒரு முதிர்ந்த பன்னாட்டு மதிப்புப் பெற்ற அரசியல்வா(வியா)தியாக காட்டிக்கொள்ள விழையும் ரணில், நாட்டிற்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், பாதுகாப்பு செலவினங்களுக்கு பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கும், நாட்டை நிகழ்காலத்தில் காத்து எதிர்காலத்தில் தூக்கி நிறுத்தும் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு கூட்டாக பாதுகாப்பு துறையைவிடக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது சரியா, அது நியாயமானதா, நாட்டு நலனில் அக்கறையுள்ள விஷயமா, பசியில் தவிக்கும் மக்களிடம் இருக்கும் பானை அடித்துப் பிடுங்குவது சரியா போன்ற கேள்விகளை தனது மனசாட்சியிடம் கேட்க வேண்டும்.
நாளை அவரும் சாமானிய பொதுமக்களில் ஒருவராகும் நிலை ஏற்படலாம்-ஏற்படும்.
கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ள திருக்குறளில் கூறியபடி இலங்கை வாய்மை மற்றும் வல்லமையான நல்லலரசா என்று கேட்டால் அதற்கான பதில் எம்மிடம் இல்லை.
கட்டுரையாளர்கள் பற்றி:
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி- பேராசிரியர் பொருளாதாரதுறை-கொழும்பு பல்கலைக்கழகம்.
சிவா பரமேஸ்வரன் – விருது பெற்ற மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்- லண்டன்.