எமது செய்தியாளர் நடராசா லோகதயாளன்
ஜனாதிபதி ரணிலின் வவுனியா விஜயம் தமக்கு ஏதேனும் ஒரு வகையில் சிறியளவிலான விமோசனத்தையாவது தரும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது என்று வட மாகாண தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கு மேலானாலும் தமிழ் மக்களின் துன்பங்களும் துயரங்களும் சற்றேனும் குறையவில்லை. எதிர்க்கட்சி தலைவராகவும் முன்னர் பிரதமராகவும் ரணில் விக்ரமசிங்க இருந்த போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ராஜபக்சக்களே காரணம் என்று கூறினார்.
ஆனால் இப்போது அதே ராஜபக்சக்களின் ஆதரவுடன் `பின் வாசல்` வழியாக ஜனாதிபதியாகியுள்ள ரணில், பதவியேற்ற பிறகு முதல் முறையாக வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட போது எதிர்ப்பையே சந்தித்தார்.
வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் சனிக்கிழமை (19) வருகை தந்தார்.
அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்திற்கு வெளியே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளையும் மீறி அவர்களின் போராட்டம் இடம்பெற்றது.
பின்னர் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த மூன்று மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள், அதற்கான சாத்தியக்கூறுள்ள தீர்வுகள் ஆகியவை படக்காட்சிகள் மூலம் அவருக்கு விளக்கப்பட்டன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் வனத்துறை வசமுள்ள சுமார் 50,000 ஏக்கர் அளவிலான காணியை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைகளை முன்வைத்ததாக அறிய முடிகிறது. அதன் மூலம் மக்கள் தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கிடைக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் ஜனாதிபதிக்கு விளக்கியது.
மாவட்ட அதிகாரிகளின் விளக்கம் மற்றும் அதையடுத்த கலந்துரையாடல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி சில முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், தனது வழமையான பாணியில் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக கூட்டத்திற்கு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
”வடக்கு மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு”
ஆனால், எப்படியான தீர்வை அவர் எண்ணியுள்ளார், அது எப்போது அளிக்கப்படும் என்பதெல்லாம் அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
இராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதில் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் அரச தரப்பிலிருந்து எந்த கருத்தும் இல்லை. ஜனாதிபதியும் அந்த விடயம் குறித்துப் பேசவில்லை.
வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எப்போது முழுமையான பயன்பாட்டிற்கு வருமா-வராதா என்ற கேள்வி மேலோங்கியுள்ள நிலையில், அது குறித்து மௌனமாக இருந்த ரணில் விக்ரமசிங்க வவுனியா விமான நிலையத்தை தரம் உயர்த்துவது பற்றி பேசியுள்ளார்.
இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் “கூரை ஏறி கோழியைப் பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போற கதை என்பதன் அர்த்தம் இதுதான் என்றார்”.
வடக்கு மாகாணத்தில் நிலவும் ஏராளமான பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏதாவது காத்திரமான தீர்வை அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலத்தைக் கடத்தும் நோக்கில் குழுக்கள் அமைக்கப்படும் என்ற ஒரு பதிலை அளித்துவிட்டு அவர் சென்றுள்ளது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.