மா.க.ஈழவேந்தன்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், இலங்கை.
“நில்லாவுலகில் நில்லோம் செல்வோமே” என்று மணிவாசகப் பெருந்தகை கூறிய கூற்று அனைத்து மக்களுக்கும் உரிய கூற்றாகும். செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் வாழ்வும் வளமும் கொடுத்த நாயன்மார்களில் நான்கு நாயன்மார்களை நாம் அடிக்கடி நினைவு கொள்கிறோம். “திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசையே வென்று ஏற அசைவில் செழுந்தமிழ் வழக்கே துறைவெல்ல தோண்டியவர் தோணிபுரத் தோன்றலார்” ஞானசம்பந்தர் என்று தமிழால் ஞாலமளந்த ஞான சம்பந்தரை சேக்கிழார் வாழ்த்துகிறார். ஆனால் இதே ஞானசம்பந்தர் அவர்கள் வாழ்ந்தது 16 ஆண்டுகள் தாம். அடுத்து மண்மேல் ‘நம்மை செந்தமிழ் பாடுக’ என்று இறைவiனால் கட்டளையிடப்பட்ட நம்பி ஆரூரனும் வாழ்ந்தது 18 ஆண்டுகள்தாம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தைத் தந்த மணிவாசகர் நாலெட்டில் தெய்வீகம் அடைந்தார். விதிவிலக்காக ‘என்கடன் பணி செய்து கிடப்பதே தன் கடன் அடியேனைத தாங்குதல் என்று பாடிய நாவுக்கரசர் 81 ஆண்டுகள் வாழ்ந்தார். புவிக்குப் புதுவழி காட்டிய புத்தரும்; 80 ஆண்டுகள் வாழ்ந்தார். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்த முனைவர் ஜி.யு.போப் அவர்களின் வாழ்க்கையும் அகவை எண்பதுகளில் நிறைவுற்றது. உலகியல் வாழ்க்கைக்கு அமைய எங்கள் அவ்வை நடராஜன் அவர்கள் நிலைத்த புகழ் நாட்டி நி;ல்லாவுலகில் தனது 85ஆவது அகவையில் உயிர்நீத்தார்.
அவ்வை நடராசன் அவர்கள், தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும்பணியாற்றிய, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பெரும் பணியாற்றிய அவ்வை துரைசாமி அவர்களின் மகனாவார். தந்தைக்கு ஏற்ற வகையில் வாழையடி வாழையாக தமிழுக்கு வளம் சேர்த்தவர் நம் அவ்வை நடராசன் அவர்கள். அவர் பல பட்டங்கள் பெற்றதோடு, தமிழகத்தின் செய்தித் துறையில் தலைவராக விளங்கியவர். அக்காலகட்டத்தில் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஈழச் சிக்கல் எப்படி இருக்கிறதென்பதை அடிக்கடி கேட்டு தம் இன உணர்வை வெளிக்காட்டியவர். தன் அலுவலகத்தில் மட்டுமல்ல, பல கூட்டங்களில் அவர் வெல்லும் சொல் படைத்த நிலையில் அவரது சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டு உவகை உற்றவன் நான்.
மறைமலை அடிகள் (குயவாநச ழக வுயஅடை சுநயெளைளயnஉந) என்று நான் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் (தமிழக மறுமலர்ச்சியின் தந்தை மறைமலை அடிகள்) சிறப்பைப் பற்றி எனக்கு நேரில் கூறியதோடு, பல கூட்டங்களிலும் அவர் அதன் சிறப்பினைக் கூறினார். நூலோ சிறிது; அதன் உள்ளடக்கமோ பெரிது . அதுவும் ஆங்கிலத்தில் வெளிவந்திருப்பது தமிழினத்தின் தேவையை நிறைவு செய்கிறதென்று அவர் கூறிய கூற்று எம் நெஞ்சைத் தொடும் கூற்றாகும். நான் எழுதிய இந்நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடாத்துகின்ற மறைமலை அடிகள் நூலகத்திலும் இடம்பெற்றுள்ளதை நான் இங்கு பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
1968ல் அறிஞர் அண்ணா முதலமைச்சராக விளங்கிய காலத்தில் அவருக்கும் இந்நூலை நான் வழங்கினேன். அவர் இந்நூலைப் படித்தபடி, பேராசிரியர் இலக்குவனார் எழுதிய தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் விழாவில் தன் தலையை அசைத்து இந்நூலுக்கு வாழ்த்துக் கூறியதை நான் பெருமிதத்தோடு கூற விழைகிறேன்.
அவ்வை நடராசன் அவர்கள் காட்சிக்கு எளியவர். தமிழகத்தின் செய்தித் துறையில் அவராற்றிய பணி தமிழ் மக்கள் பெருமை கொள்ளத் தக்கது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசியராக விளங்கிய எனது மருமகன் முனைவர் அரசேந்திரன் அவர்களுக்கும் அவ்வை நடராசன் அவர்களுக்கும் நெருங்கிய நட்பும் உறவும் விளங்கியது குறிப்பிடத்தக்கது. எனது மகள் யாழினிக்கும் அரசேந்திரனுக்கும் தமிழ் மணம் கமழும் தமிழ்த் திருமணம் கலைஞர் தலைமையில் 80களில் நடைபெற்றபோது, அவ்வை நடராசன் அவர்கள்; நிகழ்த்திய உரை அவையோரை ஆட்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் அன்பழகனும் கலந்துகொண்டிருந்தார்.
அவ்வை நடராசன் அவர்களுக்கும் எனக்குமிடையில் பற்றும் பாசமும் நெருக்கமாய் இருந்ததனால் அடிக்கடி என்னை தன் இல்லத்திற்று அழைத்து, அவரும் அவர் குடும்பமும் செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருந்த நிலையை எண்ணுகின்றபோது, நெஞ்சம் உருகுகின்றது.
அவ்வை நடராசன் அவர்கள் எழுதிய நூல்களை விஞ்சுகின்ற அளவுக்கு அவரது சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களுக்குத் தலைமை தாங்கிய நிகழ்ச்சிகள் அனைவரதும் உள்ளத்தை ஆட்கொண்டது. அவருடைய பிறிதோர் சொல்லை வெல்லும் சொற்கள் வள்ளுவன் கூற்றுக்கமைய கேட்போர் பிணிக்கும் வகையில் கேளாதாரும் வேட்பம் உறும் வகையில் அமைந்திருந்தது இங்கு வலியுறுத்தத் தக்கது. அவருடைய அறிவு ஆற்றலை உணர்ந்த நிலையில் தமிழக அரசு அவரை தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமித்தது அவரது பல்துறை ஆற்றலுக்கும் நிர்வாகத் திறத்திற்கும் சான்றாகும். அவர் இத்துறைக்கு நியமனம் பெற்றபோது அவ்விழாவிலும் கலந்துகொள்கின்ற வாய்ப்பு எமக்குக் கிடைத்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அவரது பல்துறை ஆற்றலை நன்குணர்ந்த தமிழக அரசு அவருக்கு சிறப்பு விருதுகள் வழங்கியதோடு, மத்திய அரசும் சாகித்திய அக்கடமி விருதை வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. அவரது தமிழ்ப் புலமை உலகறிந்தது. அவரது ஆங்கிலப் புலமை தமிழுக்குக் குறைந்ததல்ல. பல நூல்களுக்கு அளித்த ஆங்கில அணிந்துரை அவரது ஆங்கிலப் புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
எம்மைப் பொறுத்தவரையில் அவரது புலமை, விருந்தோம்பல் ஆகியவை போற்றுதற்குரியதெனினும், அவரது இதயத்தை ஈர்த்த ஈழத் தமிழர் சிக்கலில் அவருக்கிருந்த ஈடுபாட்டை நாம் நன்கு அறிவோம். “ஈழத் தமிழ் மக்கள் நடாத்துகின்ற போராட்டங்கள் பொருள் பொதிந்தவை. மெல்ல மெல்லப் பணிபுரியும் மேதை செல்வநாயகம் நடாத்துகின்ற அறவழிப் போராட்டம் பயன் தராத நிலையில், பிரபாகரன் நடாத்துகின்ற மற வழிப் போராட்டம் நீங்கலாக வேறு என்ன வழி இருக்க முடியும்? ஒரு இனத்தின் வாழ்வு அந்த இனத்தின் மொழியில் தான் உண்டு. ஆனால் அந்த இனமும் மொழியும் வாழ்வதற்கு நிலந்தான் உயிர் நாடி. இலங்கையில் நடைபெறுகின்ற சிங்கள வெறியாட்டம் உங்கள் மொழியை, உங்கள் பண்பாட்டை, நாகரிகத்தை, வாழ்வியல் முறையை, வாழ்வகத்தை பூண்டோடு அழித்து ஈழத்தில் தமிழினம் இருந்ததோ என்ற கேள்வியை சிங்களப் பேரினவாதம் உருவாக்கிக் கொண்டு இருப்பதை நான் உணர்கிறேன்” என்றார். இக்கூற்று அவரது உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து உருவாகியது என்பதை, அவரது கலங்கிய கண்கள் சான்று கூறின.
உலகில் நிலையாமை ஒன்றுதான் நிலைத்தது. ஆனால் அவ்வை நடராசன் அவர்கள் நிலைத்த புகழை நிலைநாட்டி, செத்தும் வாழும் சிலரின் வரிசையில் தனி இடம் பெறுகிறார். அவ்வை துரைசாமி அவர்களின் வழியில் வந்த அவ்வை நடராசன் அவர்கள் இத்தகைய புகழைப்பெற்றிருப்பது வியப்பல்ல. இத்தகைய பெருமகனுடன் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது நாம் பெற்ற பேறாகும்.
‘தமிழன் வாழ வேண்டின் தமிழன் தன்னை ஆள வேண்டும்’ என்பதை நிலைநாட்டுவதுதான் நாம் அவ்வை நடராசனுக்குச் செய்ய வேண்டிய கைமாறாகும்.
“ஈழம் வெல்லும் இதைக் காலம் சொல்லும்” – இது எம் மறை மொழி. தாரக மந்திரம்.
மா.க.ஈழவேந்தன்
Eelaventhan Manickavasakar
mkeelaventhan15@gmail.com