மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது
தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கிராமப் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து அதன் செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமிய புத்தெழுச்சி குழுவின் கலந்துரையாடலானது இன்று (24) மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் இரு பிரிவுகளாக இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந.ரஞ்சனா ஏற்பாட்டில், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலதாதன் தலைமையில் காலை 10 மணிக்கு கொல்லவிளாங்குளம் பொது நோக்கு மண்டபத்திலும், தொடர்ந்து 2.30 மணியளவில் நட்டாங்கண்டல் கிராம அலுவலர் அலுவலகத்திலும் இடம்பெற்றன.
குறித்த கலந்துரையாடலில் தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது, சத்துணவினை பெற்றுக் கொடுக்கும்வழிமுறைகள், வறுமையிலும் பட்டினியாலும் வாடும் குடும்பங்களை மீட்டெடுப்பது, சிறுவர்களின் போசாக்கு, பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்தல் முதலான முக்கியமாக பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரும் மாவட்ட உலகஉணவுத்திட்ட பொறுப்பதிகாரியுமான க.ஜெயபவாணி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்,வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர்,பாண்டியன்குளம் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராமிய புத்தெழுச்சி குழுவின் அங்கத்தவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் 213 குடும்பங்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதே வேளை ஐந்து வயதுக்கு உற்பட்ட போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் 106 எனவும் வறுமைக்கோட்டிற்கு உற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் 36 எனவும் தெரிவிக்கப்பட்டது