ஜெகதீஸ்வரன் டிஷாந்த்
முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர்.
சீருடை தரித்த இரண்டு இராணுவத்தினர் தம்மை 591 ஆவது படைமுகாமிலிருந்து வருகின்றதாக அடையாளப்படுத்தியதோடு தமக்கு ஊடக அமையம் தொடர்பில் சில தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளனர்.
ஊடக அமையத்தின் தலைவரோ அல்லது முகாமையாளரோ இருப்பார்கள் எனில் அவர்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வழங்குமாறும் அவ்வாறான தகவல்களை பெற்றுவருமாறு தமது 591 பிரிகேட் படைமுகாமின் கட்டளை அதிகாரி பணித்துள்ளதாகவும் இதே போன்றே முல்லைத்தீவு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களின் தகவல்களும் தம்மால் திரட்டப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே ஊடக அமையத்தின் தகவல்களையும் கோருவதாக வருகைதந்த படையினர் ஊடக அமையத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் தெரிவித்தனர்.
இவ்வாறு வருகைதந்த படையினருக்கு பதில் வழங்கிய ஊடக அமையத்தின் ஊடகவியலாளர் குமணன் என்ன நோக்கத்துக்காக இந்த தகவல்களை திரட்டுகின்றீர்கள் என நாம் தெரிந்துகொள்ளவேண்டும். என கோரிய நிலையில் எமக்கு தெரியாது எமது முகாமின் அதிகாரி விபரங்களை திரட்டுமாறு பணித்துள்ளார் அதற்காகவே திரட்டுகிறோம் முன்னர் இருந்த அதிகாரி மாற்றலாகி சென்றுவிட்டார் இப்போது புதிய அதிகாரி நியமிக்கப்ட்டுள்ளார் அவரின் கூற்றின் படியே பதிவுகளை மேற்கொள்கின்றோம் எமக்கு என்ன நோக்கத்துக்கு என தெரியாது என தெரிவித்துள்ளனர்.
இதற்க்கு பதிலளித்த ஊடகவியலாளர் என்ன நோக்கத்துக்காக படையினர் எமது தகவல்களை கோருகின்றார்கள் என்பதை சரியாக தெரிந்து கொள்ளாது எம்மால் நீங்கள் கேட்ட உடனே உடனடியாக தகவல் வழங்க முடியாது என மறுத்த நிலையில் அங்கிருந்து படையினர் திரும்பி சென்றுள்ளனர் .
இவ்வாறு படையினர் வருகைதந்த நேரம் ஊடக சந்திப்பு ஒன்று இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்புகளோ அல்லது நிகழ்வுகளோ இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ஊடக அமையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இராணுவ புலனாய்வாளர்கள் தொடர்சியாக கண்காணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று படையினர் வருகைதந்து தகவல்கள் கோரிய செயற்பாடு ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சதச்சத்தை ஊட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாள் அன்று முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடி இருப்பதோடு மாவீரர் நாள் நினைவேந்தல் செயற்பாடுகளை வர்த்தகர்கள் தொடர்சியாக மேற்கொண்டு வருவது வழமை
இவ்வாறு தமது கடைகளை மூடியுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் படையினர் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தும் சம்பவங்கள் கடந்த வருடங்களில் பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடமும் மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் முல்லைத்தீவு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் தகவல்களை படையினர் திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.