சதிநாயகன் மகாதீருக்கு இரட்டைத் தோல்வி
-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.24:
மலேசியாவின் 10-ஆவது பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு முதற்கண் கனடாவின் ஊடகமான உதயன் வாழ்த்து தெரிவிக்கிறான்.
20-ஆம் நூற்றாண்டின் நிறைவுக்கட்டத்தில் நாட்டின் 5-ஆவது பிரதமராக ஆகியிருக்க வேண்டியவர், நாட்டில் எந்தத் தலைவரும் சந்தித்திராத வஞ்சகத்திற்கும் துரோகத்திற்கும் ஆளாகி, கடந்த கால் நூற்றாண்டாக பல்வேறு சவால்களை சந்தித்தபின் இன்று நாட்டின் 10-ஆவது பிரதமராகி இருக்கிறார்.
1990-ஆம் ஆண்டுகளில் அன்வாரிடம் சற்று தள்ளியே நின்ற அம்னோவின் 2-ஆம் கட்ட தலைவர்கள், அன்வார் அம்னோவில் இருந்தும் துணைப் பிரதமர் பொறுப்பில் இருந்தும் விளக்கப்பட்டு, ‘சீர்திருத்தம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்து மாற்று அரசியலுடன் மலேசிய அரசியல் களத்தில் நுழைந்தபோது, முன்னர் மிரட்சியின் ஒதுங்கி நின்றவர்கள் வரிசையாக துணிந்து எதிர்த்து நின்றனர்.
2013-பதின்மூன்றாவது பொதுத் தேர்தலிலும் நம்பிக்கைக் கூட்டணி வெல்ல முடியாத நிலையில், இடைக்கால ஏற்பாடாக சிலாங்கூர் மாநில அரசியலில் நுழைய முயன்றார் அன்வார்; அந்த நேரத்தில் அன்வாருக்கு இன்னொரு நோக்கமும் இருந்தது.
அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசாரும்(முதல்வர்) சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருமான டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு அந்தப் பதவிக்கு குறிவைத்த அன்வார், இதற்காக காஜாங் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வான சொந்தக் கட்சி உறுப்பினரை பதவிவிலக வைத்து, இடைத்தேர்தல் மூலம் சட்டமன்றத்திற்கு நுழைய முயன்றார்.
மலேசிய அரசியல் வரலாற்றில் ‘காஜாங் நகர்வு’ என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தையும் முறியடித்தார் அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்.
இவ்வாறு, தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் மாற்றிமாற்றி அடிவாங்கிய அன்வாருக்கு இப்போழுது-இன்று காலம் கனிந்துள்ளது.
நாட்டின் முதல் பிரதமரும் தேசத் தந்தை என்று புகழப்படுபவருமான துங்கு அப்துல் ரகுமானின் பெயரில் உள்ள RAHMAN என்னும் பெயர்ச் சொல்லில் இடம்பெற்றுள்ள எழுத்துக்களை தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் வரிசையாக பிரதமர் ஆனார்கள்.
R- ரகுமான், A- அப்துல் ரசாக், H-உசேன் ஓன், M-மகாதீர், A-அப்துல்லா படாவி, N-நஜீப் ஆகியோர்தான் நாட்டின் முதல் ஆறு பிரதமர்கள்.
இவர்களில், மகாதீருக்குப் பின் அப்துல்லா பிரதமர் ஆவார் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை; 1993-இல் அன்வார் துணைப் பிரதமர் ஆனதும் அடுத்த பிரதமர் அவர்தான் என்று மலேசியாவில் மட்டுமல்ல; பன்னாட்டு அரசியல் அரங்கிலும் எதிர்பார்ப்பு நிலவியது.
கடைசியில், பாலியல் விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு, அன்வாரை அடியோடு வீழ்த்தினார் துன் மகாதீர். அதன்பிறகு நடந்ததை யெல்லாம் ஊரும் உலகும் அறியும்.
இப்பொழுது, ஒருவழியாக அன்வார் பிரதமராகிவிட்டார். கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் எதிர்பார்த்தபடி பக்கத்தான் கூட்டணி என்னும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நான்கு நாள் இழுபறிக்குப் பின் இன்று அவரை நாட்டின் 10-ஆவது பிரதமராக மாட்சிமைக்குரிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா அறிவித்தார்.
பதவியேற்ற ஒருசில மணி நேரத்திலேயே அன்வார் அதிரடி படைத்திருக்கிறார். பங்கு சந்தை வர்த்தகக் குறியீடு உயர்ந்ததைப் போல மலேசிய நாணயம் ரிங்கிட்டின் மதிப்பும் உயர்ந்துள்ளது.
15-ஆவது நாடாளுமன்றம் டிசம்பர் 19-ஆம் நாள் கூடவிருக்கிற நிலையில், தனக்கான நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோருவதுதான் முதல்வேலை என அன்வார் அறிவித்திருக்கிறார்.
இதில் வேடிக்கை என்றால், அன்வார் தனக்கான பெரும்பான்மையை நாடாளும்னறத்தில் நிரூபிக்க வேண்டும் என்று கொல்லைப் புற ஆட்சியை நடத்தியவரும் தவளை அரசியலை அறிமுகப்படுத்தியவருமான டான்ஸ்ரீ முகைதீன், அன்வார் பதிவியேற்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் தான் நடத்திய செய்தியாளர்க் கூட்டத்தில் வலியுறுத்தியதுதான்.
முகைதீன், 17 மாதங்களாக கொல்லைப்புற ஆட்சியை நடத்திய காலத்தில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைப் பெறாமலேயே ஆட்சி நடத்தினார். அது குறித்த கோரிக்கை வலுத்த நேரத்தில் அவசரகால சட்டத்தைப் பிறப்பித்தும் கொரோனா பரவலை காரணம் காட்டியும் ஜனநாயக நடைமுறையை மதிக்காமல் காலந்தள்ளிய இவர், அன்வாரைப் பார்த்து நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
2020 மார்ச் 1-இல் 8-ஆவது பிரதமராக பதவியேற்ற முகைதீன், மார்ச் 10-ஆம் நாள்தான், அதுவும் இந்த சின்னஞ்சிறு நாட்டில் 70 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்தார். தன்னுடைய பதவிக் காலம் முழுவதும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே காலந்தள்ளிய முகைதீனின் கோரிக்கை சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது.
தான் பிரதமர் ஆனால், முதலில் மகாதீருக்குத்தான் காய்ச்சல் வரும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்வார் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இதுவரை மகாதீருக்கு உண்மையில்ல் காய்ச்சல் வந்துள்ளதா என்று தெரியவில்லை.
ஆனால், அவருக்கு ஒரு நாள் நிச்சயம் காய்ச்சல் வரும்; அன்வார் மேற்கொள்ள விருக்கும் அடுத்தடுத்த நடவடிக்கை மகாதீருக்கு காய்ச்சல் வருகிற மாதிரி அமையும்.
மொத்தத்தில், கடைசியில் அன்வார் பிரதமராகி விட்டார்; அதேவேளையில், அன்வார் பிரதமர் ஆகாமல், அடுத்தடுத்த சதி, வஞ்சக வேலைகளைப் புரிந்துவந்த மகாதீர் தோல்வி அடைந்துவிட்டார்.
பொதுத் தேர்தலில் வைப்புத் தொகை பறிபோகும் அளவுக்கு மண்டியிட்டு மண்ணைக் கௌவிய மகாதீர், அடுத்த ஒருவாரத்தில் அன்வாரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
அன்வார் பிரதமர் ஆகாமல் தடுப்பதற்காக மகாதீர் மேற்கொண்ட தந்திர நடவடிக்கைகளால், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை பாழானது; கட்சி தாவும் தவளைக் கூட்டம் கூச்சமின்றி சதிராட்டம் நடத்தியது; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீண்டும் கொல்லைப்புற வழியாக பதவி சுகம் கண்டனர்; மாநிலங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாழாகிறது;
போனது போகட்டும்; இப்பொழுதாவது மக்களும் ஜனநாயகமும் மகாதீருக்கு தக்க பாடத்தைப் புகட்டிவிட்டனர். புத்தகம் எழுதப் போவதாக மகாதீர் கூறி இருக்கிறார். அதில் நல்ல அம்சங்கள் இருக்குமா அல்லது இன-சமய உணர்ச்சியைத் தூண்டும் பொல்லாத அம்சங்கள் இருக்குமா என்பது அது வெளியாகும் கட்டத்தில்தான் தெரியவரும்.
மொத்தத்தில் நாட்டின் புதிய நிருவாகத் தலைவர் அன்வார் வெல்க;
மலேசியத் திருநாடு வாழ்க!