(25-11-2022)
அண்மையில் கப்பல் மூலம் கனடா வருவதற்கு முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான இளம் குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
அவருக்காய் இரங்கும் ஒரு இதயம்
நான்கு பிஞசுகளையும்
ஒரு கனியையும்
தாங்கிக்கொண்டிருந்த ஒரு பலா மரம்
மன அழுத்தக் காற்றின் உக்கிரத்தால் சரிந்தது
தன் சிரமங்களின் பாரத்தை எப்படியாயினும்
குறைத்து விடலாம் என்ற கனவுகளோடு
கப்பலில் ஏமாற்றுப் பேர்வழிகளால்
ஏற்றப்பட்ட இந்த பயன் தரும் மரத்தின்
உறுதியான வேர்களை வெட்டியர்கள் யார்?
எண்ணிக்கையில் இலட்சத்திலும்
சம்பாத்தியத்தில் கோடிக்கணக்கிலும்
வெளிநாடுகளில் கொடிகட்டிப் பறக்கும்
ஒரு இரண்டு ‘நம்மவர்கள்’
நல்லவர்களாய் முயன்றிருந்தால்
இ.ப்படியானவர்கள் கப்பல் பக்கம்
கால் வைத்திருக்க மாட்டார்கள்.
வியட்னாமிலிருந்து அடுத்து வரும்
கொடும் செய்தி நிச்சயம்
இந்த சரிந்த மரம் போன்றதாய்
இருக்கக் கூடாது
பலா மரம் என்ற உவமானம்
சாவகச்சேரி பலாமரங்களுக்கும் பலாப் பழத்திற்கும் பெயர் பெற்ற பிராந்தியம்