கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி & சிவா பரமேஸ்வரன்
இலங்கையின் முக்கிய சுற்றுலா கவர்ச்சிகளில் யானைகளுக்கு முக்கிய இடமுண்டு. கண்டி பெரஹர போன்ற சமூக-சமய நிகழ்வாக இருந்தாலும் சரி அல்லது பின்னவல போன்ற சரணாலயமாக இருந்தாலும் சரி அங்கு யானைகளைப் பார்க்க வருவோரின் கூட்டம் கணிசமானது.
ஆனால் யானையைக்கட்டி தீனி போடுவது சாதாரண விஷயமல்ல. பெரிய மகாராஜாக்களே அது இயலாது என்று கைவிட்ட வரலாறுகளும் உண்டு. மெதுவாக ஆடி அசைந்து சொத்தை அசைபோட்டு உரிமையாளர்களையே திவாலாக்கும் நிலைக்கு யானைகள் இட்டுச் செல்லும். பெரும் தனவந்தர்கள் கூட சில காலம் யானைகளை வைத்திருந்து பின்னர் அவற்றை கோவில்களுக்கு தானமாக அளித்துவிடுவார்கள் என்பது சிறு வயதில் படித்தது.
சொத்துக்களை அழிக்கும் நிறுனவங்கள் `வெள்ளை யானைகள்` என்று அழைக்கப்படுகின்றன. விற்கவும் முடியாது பராமரிக்கவும் முடியாது ஆனால் தொடர்ச்சியாக செலவு மட்டும் செய்யப்பட வேண்டும். அதுதான் `வெள்ளை யானைகளுக்கான` விளக்கம் அல்லது இலக்கணம்.
இப்படியான 500க்கும் மேற்பட்ட `வெள்ளை யானைகளை` பல தசாப்தங்களாகக் கட்டித் தீனி போட்ட இலங்கை அரசு அவை நலிவுற்று, எலும்பும் தோலுமாக இருக்கும் நிலையில் வந்த விலைக்கு அவற்றை விற்றுவிடலாம் என்கிற முடிவிற்கு வந்துள்ளது.
ஆனால், `கடை விரித்தேன் கொள்வாரில்லை` என்று வள்ளலார் ஆன்மீக ரீதியாகச் சொன்னது இலங்கை அரசிற்கு அரசியல் பொருளாதார ரீதியாகச் செல்லும்.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் நிலை யானையைக் கட்டி தீனி போடுவது போன்றுதான் உள்ளது.
இலங்கையில் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின்படி அரசுக்குச் சொந்தமான 527 நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு மிகப்பெரிய எண்ணிக்கையிலான அரசதுறை நிறுவனங்களை ஏனைய நாடுகளில் காண இயலாது.
அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தமது ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரும் நோக்கிலேயே இலங்கையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
அரச துறையின் தொழிற்பாதுகாப்பு ஓய்வூதியம் உரித்துடைமை சமூக அந்தஸ்து என்பன காரணமாக ஆரம்பக்காலத்திலிருந்தே அரச துறையில் தொழில் புரிவது தொழிற்படையில் பிரவேசிப்பவர்களின் முதன்மைத் தெரிவாக இருந்தது. சமூகத்தின் மேல் நோக்கிய நகர்வுக்கும் இதுவே பிரதான வழியாக இருந்தது. உதாரணமாக இலங்கையின் வடபகுதி மக்களிடையே பிரபலமான இருந்த ஒரு சொற்றொடர் கோழி மேய்த்தாலும் கோர்ன்மேன்திலை கோழி மேய்க்கோனும். (கோழிப்பண்ணைப் பராமரிப்பாளராக வேலை செய்தாலும் அது அரசுபண்ணையாக இருக்கவேண்டும்) என்பதாகும். அது மட்டுமன்றி திருமணங்களின் போதும் அரசுத்துறையில் வேலை செய்வதே மணமகன்களுக்கான முக்கிய தகுதியாகப் பார்க்கப்பட்டது.
அரசியல்வாதிகள் தாம் பதவிக்கு வருகின்ற போது தமது ஆதரவாளர்களுக்கு பெரும் எண்ணிக்கையில் அரசதுறை நிறுவனங்களில் வேலை வழங்குவதைக் காண முடியும். இதற்கு சிறுபான்மையின பொரும்பான்மையின அரசியல்வாதிகள் என்ற பேதம் இல்லை. ஒரு மூத்த அரசியல்வாதி ஒருதடவை `எனது ஆதரவாளர்களுக்கு எனது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் வேலை பெற்றுத்தர முடியாவிட்டால் நான் அமைச்சராக இருந்து என்ன பயன் என்று கேட்டார்`. 2005இல் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம் அப்போது ஐந்து இலட்சம் பேர் அளவிலிருந்த அரச பணியாளர்களின் எண்ணிக்கையை அடுத்து வந்த பத்து வருடங்களில் பதினைந்து இலட்சமாக மாற்றி சாதனை படைத்தது. அரசதுறையை வினைத்திறனாக இயங்கவைக்க புதிய இரத்தம் பாய்ச்சப்படவேண்டும் என்று காரணம் கூறப்பட்டது. 2015இல் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் உயர்கல்வி அமைச்சராக இருந்த கண்டிப் பிரதேச அரசியல்வாதி பல்கலைக்கழகங்களில் தனது ஆதரவாளர்களுக்கு பெரும் எண்ணிக்கையில் பதவிகளைப் பெற்றுத்தந்தார்.
ஆகவே அரசதுறை தொழில் முயற்சிகளும் நிறுவனங்களும் காலத்திற்ககுக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்களின் ஆதரவாளர்களால் நிரப்பப் பட்டதுடன் இந்நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பகள் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அரச கட்சிகளின் அடிவருடிகளுக்கும் வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் தகுதியானவர்கள் தகுதியான பதவிகளுக்கு நியமிக்கப்படாமல் அரசுதுறை நிறுவனங்கள் ஊழற் கூடாரங்களாக மாறின. அவற்றின் மூலம் இந்நிறுவனங்களில் கட்சி சார் தொழிற்சங்கங்களின் கைகள் பலப்படுத்தப்பட்டதுடன் இந்த நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்யவோ சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ முட்டுக்கட்டை போடுகின்றன.
சுருங்கச் சொன்னால் இந்த அரச நிறுவனங்கள் ஊழலில் ஊற்றுக்கண்ணாகவே உள்ளன. உதாரணமாக இலங்கை நிலக்கரிக்கம்பனி நிலக்கரிக் கொள்வனவில் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த போது அதனால் நான்கு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் இது துறைசார்ந்த அமைச்சருக்குத் தெரிந்தே இடம் பெற்றதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டது. இது ஊசிமுனை அளவே. ஒவ்வொரு துறையாக எடுத்தால் அது பூதாகாரமாக இருக்கும். அலட்சியம், மோசடி, உழல், உள்குத்து, மோசமான நிர்வாகம் என்பதே இவை அனைத்திற்கும் பொதுவான தொழில் இலக்கணமாகவுள்ளது.
அரசு நிறுவனங்கள் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதன் மூலம் வரவு செலவத்திட்டத்தின் வரையறைக்குள் அவை வராமல் தப்பித்துக் கொள்ளும் புதிய உத்தி கையாளப்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்திற்கு அவை பதிலளிக்க வேண்டியதில்லை.
வரிசெலுத்துவோரின் பணத்தை விரயம் செய்யும் நிறுவனங்களாக இவை தொடர்ந்து செயற்படுகின்றன. 2006 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் உபாயரீதியில் முக்கியத்துவமிக்க 55 நிறுவனங்களின் நிறுவனங்கள் அடைந்த மொத்த நட்டம் 1.2 டிரில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய நிறுவனங்களை மறுசீராக்கம் செய்வதற்கான குறுங்கால மற்றும் நீண்டகாலத் தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் குறுங்காலத்தீர்வகளாக இவற்றைத் தனியார் மயப்படுத்தல், மறுசீராக்கம் மற்றும் முதலீட்டை விலக்கிக்கொள்வதன் மூலம் கொழும்பப் பங்குச் சந்தையில் இவற்றைப் பட்டியலிடச் செய்தல் என்பவற்றைக் கூறலாம். ஆனால் இவற்றை தீவிரமான மாற்றங்களாகக் கருதமுடியாது.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அரசதுறை நிறுவனங்களை மீள் சீர்திருத்தம் செய்ய இரு பிரதான கொள்கைகளைப் பயன்படுத்துகின்றன. ஒன்று அவற்றுக்கு வழங்கப்படும் மானியங்களை குறைத்தல். இரண்டு அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல். இவற்றின் மூலம் தனியார் துறையுடன் போட்டியிட அவற்றை நிர்ப்பந்திக்கலாம். அவற்றை முழுமையாகவோ பகுதியளவிலோ தனியார்மயமாக்கம் செய்வது சாத்தியமான தீர்வாகலாம்.
நீண்டகால அடிப்படையில் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, ஊழலை ஒழிக்க முயன்று, அரசியல் செல்வாக்கை முற்றாகத் தடுத்து உற்பத்தியை அதிகரித்தால் ஓரளவிற்கு அவற்றை மீட்க முடியும்.
இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவை தொடர்ச்சியாக பெருநட்டத்தில் இயங்கி, அரசு நிதியை வீண்விரயம் செய்து வருகின்றன.
இவை அவசரமாகவும் அவசியமாகவும் மறுசீரமைக்கப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவற்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் தற்காலிகமாக எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த போது இலாபகரமாக இயங்கியது. அரசியல் காரணங்களுக்காக 2008 இல் அது மீண்டும் அரசுடைமையாக்கப்பட்டதிலிருந்து 316 பில்லியன் ரூபாய்கள் நட்டத்தை அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அண்மையில் பெற்றோலிய பொருள்களின் விலைகள் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலைமையிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. இதே காலப்பகுதியில் போட்டி நிறுவனமான இந்தியன் ஒயில் கம்பனி மிகப் பெரிய இலாபத்தைச் சம்பாதித்தமை இந்நிறுவனத்தின் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளை விலை அதிகரிப்பின் மூலம் சீராக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. அதே நிலைமையிலேயே இலங்கை மின்சார சபையும் இயங்குகிறது. மக்கள் அதிக விலையை செலுத்தியபோதிலும் இவை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குமாயின் இவற்றை தனியார்மயப்படுத்துவதே பொருத்தமான தீர்வாக இருக்கக் கூடும். ஆனால் அனைத்திலும் அரசியல் என்பதால் இது சாத்தியமா என்ற கேள்வி உள்ளது.
2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அரச நிறுவனங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 420 அரச நிறுவனங்களின் சுமையை அரசு சுமப்பதாகவும் அவற்றுள் 52 பிரதான நிறுவனங்கள் 86 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்வதாகவும் இவற்றை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் சிறிலங்கா டெலிகொம் கொழும்பு ஹில்டன் வோட்டர்ஸ் எட்ஜ்; மற்றும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பவற்றை மறுசீரமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றுள் பல இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் உள்ளடக்கம். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைப்பது நியாயமாக இருப்பினும் இலாபமீட்டும் நிறுவனங்களை ஏன் விற்கவேண்டும்? என்ற குற்றச்சாட்டு உடனடியாக எழுந்தது. ரணில் அரசாங்கங்கள் பொதுவாகவே இவற்றை விற்பது தொடர்பில் அதிக கரிசனை காட்டும். கடந்த காலங்களில் 2005 இதற்கு முன்னர் வரவு செலவுத்திட்டக் குறைநிலையை இட்டு நிரப்பும் ஒரு உபாயமாக அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தல் மூலம் பெறப்படும் நிதி பயன்படுத்தப்பட்டது.
ராஜபக்ச காலப்பகுதியிலேயே இது நிறுத்தப்பட்டு ஏற்கெனவே தனியார்மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களும் மீண்டும் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியும் இது அரச வங்கிகளையும் தனியார் மயப்படுத்துமாறு தொடர்ச்சியாகப் பலகாலம் கூறி வந்துள்ளமையும் மறந்துவிடக் கூடிய ஒன்றல்ல. காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலைப்போல ராஜபக்ச கூடாரத்தில் ரணில் பட்ஜெட் முட்டை போட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் அதிர்ஷ்டவசமாக அது நிறைவேற்றப்பட்டு குஞ்சு பொரித்திருக்கிறது. குஞ்சு கோழியாக வளருமா அல்லது அடித்து கோழிக்குஞ்சு ரசம் வைத்துவிடுவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள போதிலும் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை பகுத்தறிவான வகையில் மீளக்கட்டமைப்புச் செய்வதற்கு உரிய வாய்ப்பினையும் அதற்கான பின்புலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த அரசநிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதால் கிடைக்கும் பணம் இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வாக அமையாவிட்டாலும் தொடர்ச்சியாக வரிசெலுத்துபவர்களின் பணத்தை விரயம் செய்து வயிறுவளர்க்கும் அரசியல் வாதிகள் எதிர்காலத்தில் அவற்றை தொடர்வதற்கான வாய்ப்பை இது குறைக்கும்.
ஆனால் தனியார்மயப்படுத்தலில் முதலீட்டாளர்களை முறையாகத் தெரிவு செய்வதுடன் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இலஙகை மின்சாரசபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பற்றை மறுசீரமைப்பது அரசாங்கத்திற்கு இலகுவாக காரியமாக இருக்கப்போவதில்லை.
அதேவேளை அரச நிறுவனங்களை விற்க முயன்றாலும் அதை வாங்க ஆள் வேண்டும். எந்தவொரு முதலாளியும் யானையைக் கட்டித் தீனி போடுவதை விட ஆட்டைக் கட்டி தீனி போடுவதே சிறந்தது என்று கருதுவார்கள்.
அனைத்திலும் பார்க்க விடவும் முடியாது விற்கவும் முடியாத தொடரும் தலைவலியாக இருக்கும் மிகப்பெரும் வெள்ளை யானை ஒன்று உள்ளது.
இதை அடுத்தவாரம் பார்ப்போம்.
கட்டுரையாளர்கள் பற்றி: பேராசிரியர் முருகேசு கணேசமூர்த்தி-பொருளாதர பீடம்- கொழும்பு பல்கலைக்கழகம்
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்.