தாயகத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
முல்லைத்தீவில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு பொலிஸார் இடையூறு , நினைவுவளைவுகளை உடைத்தெறிந்து அட்டகாசம் , முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை அறுத்தெறிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து சுடுவோம் எனவும் அச்சுறுத்தல்.#MaaveerarNaal2022 pic.twitter.com/voHJtvaEGp
— kumanan (@kumanan93) November 27, 2022
விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஆகுதியாகிய வீரவித்துக்களை மாவீரர் தினத்தன்று தமிழ் மண்ணும் மக்களும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூர்ந்ததனர்.
எனினும் முல்லைத்தீவில் பொலிசார் சில கெடுபிடிகளை ஏற்படுத்தி, சிவப்பு-மஞ்சள் கொடிகள் மற்றும் மாவீரர் தினம் தொடர்பில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளை பிடிங்கி வீசி, அஞ்சலிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வந்திருந்த தமிழர்களை மிரட்டியும், படம் பிடித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவின.
1982 ஆம் ஆண்டு முதல் இறுதிப்போர் வரை விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களை தாயகத்திலே வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நினைவேந்தியதோடு புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் உணர்வெழுச்சியோடு கடைப்பிடித்தனர்.
வடக்கு கிழக்கில் துயிலுமில்லங்கள், தனித்த நினைவிடங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பல்கலைக்கழகம், விசேடமாக ஏற்பாடு செய்த இடங்கள் என தாயகத்தில் மட்டும் 50ற்கும் மேற்பட்ட இடங்களில் சுடர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன.
மாவீரர்களின் பெற்றோர் மாலை6.05ற்கு பிரதான சுடர் ஏற்றியதை அடுத்து மாவீரர்களின் உறவுகளும் அகவணக்கம் செலுத்தி தனித்தனியான சுடர்களையும் ஏற்றினர்.
தாய் மண்ணிற்காக தம்மையே கொடையாக கொடுத்தவர்களின் நினைவைப் போற்றும் வகையிலான உணர்வுபூர்வமான இந்த அஞ்சலி நிகழ்ச்சி யாழ்ப்பாணத்திலே கோப்பாய், கொடிகாமம், சாட்டி, உடுத்துறை எள்ளங்குளம் துயிலுமில்லங்களிலும் பல்கலைக்கழகம், நல்லூர் வீதி , தீருவில், தமிழரசு கட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் மக்கள் எழுச்சியுடன் இடம்பெற்றது.
ரத்தக்களறியுடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில், முள்ளியவளை, ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், அலம்பில், உள்ளிட்ட இடங்களிலும் வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நகர சபை உள்ளக மண்டபத்திலும் அஞ்சலிகள் இடம்பெற்றதோடு மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்களிலும் இடம்பெற்றன.
தமிழர் தாயகத்தின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, வாகரை, கண்டலடி துயிலுமில்லங்களிலும் தாண்டியடியிலும் உணர்வுபூர்வமாக தமிழ் மக்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர்.
இதேபோன்று திருகோணமலை ஆழங்குளம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லங்களிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற நினைவேந்தலில் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் மிக அதிக உறவுகள் கலந்துகொண்டிருந்தனர். இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதியுத்த காலத்தில் அதிக துயிலுமில்லங்கள் ஏற்பட்ட நிலையில் அனைத்து இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.