எமது யாழ்ப்பாணம் செய்தியாளர்
இலங்கை அரசு தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வளமான நிலங்கள் மற்றும் கடற்பரப்புகளைச் சீனாவிற்கு அளிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் -யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை(28) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
”எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்கப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது”.
அண்மையில் சீன பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திட இருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்த துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசியல் நிர்ப்பந்தத்திற்காக எமது நிலத்தையும் கடலையும் வேறு நாடுகளுக்கு விற்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக யாழ் மாணவர் ஒன்றிய அறிக்கை கூறுகிறது.
தமது கடலையும், நிலத்தையும் காப்பாற்றக் குரல் கொடுக்குமாறும் அந்த மாணவர் அமைப்பு சிவில் சமூகங்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அந்த கடமையிலிருந்து அவர்கள் தவறினால் எதிர்காலத்தில் தாங்கள் அனைவரும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்.