எமது யாழ் செய்தியாளர் நடராசா லோகதயாளன்.
இளைய தலைமுறையினர் பல்துறைகளில் புதுமைகளைச் செய்து புதிய தடங்களைப் பதித்து வருகின்றனர். அவர்களின் சிந்தனையோட்டம் நிகழ்காலத்தை சிறப்பாக சித்தரிப்பதுடன் எதிர்காலத்திற்கான புதிய பாதை மற்றும் அதற்கான வழிகளையும் காட்டுகிறது.
அவ்வகையில் ஆவணப் படங்கள் மூலம் அவர்கள் சமூகத்தில் நிலவும் பல அவலங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளியுலகிற்கு எளிமையான ஆனால் அதே நேரம் காத்திரமாக வெளிக்கொண்டு வருகிறார்கள். அந்த இளைஞர்கள் பட்டாளத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் விதிவிலக்கல்ல.
அந்த பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் நவம்பர் மாதம் 22ஆம் திகதி திரையிடப்பட்டன. கதிரவன் இளம் வெயிலை வீச, அமைதியான ஆரவாரமற்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட்டன. அந்த இளைஞர்களின் படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.
பார்த்தேன்-பிரமித்தேன் என்று சொல்வதே யதார்த்தமாக இருக்கும். எமது மாணவர்களின் திறமை உலகத்தரம் வாய்ந்தது. கல்வியில் யாழ் மாணவர்கள் என்றும் சிறப்பு வாய்ந்தவர்கள் எமது மாணவர்கள் மீண்டும் நிரூபித்தனர். இந்த மாணவர்கள் ஊடக உலகில் சர்வதேச மட்டத்தில் பரிமளிப்பார்கள் என்பதில் எவ்விதமான ஐயப்படும் இருக்க முடியாது.
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த ஆவணப்பட விழாவில் சமூகத்தின் பல்வேறு விடயங்களைப் பற்றிப் பேசுகின்ற பதினான்கு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.
அவற்றுள் ஆனையிறவு உப்பளத்தின் தற்போதைய நிலை சொல்லும் ‘கடல்விளை அமுதம்’, மலையகக் கிராமமொன்றின் விளையாட்டு மைதானத் தேவையைப் பற்றிப் பேசும் ‘மைதானம்’, நீர்வேலி வாழை உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி பேசும் ‘வாழைக்குலைச் சங்கம்’, சூழல் மாசடைவதை ஏதோ ஒரு வகையில் குறைக்கும் வண்ணம் பழமையை வழமைக்குக் கொண்டுவரும் சிறிய முயற்சி பற்றிப் பேசும் ‘மிதியுந்து’, சிற்பக்கலையில் அருகி வரும் உளிப்பயன்பாடு மற்றும் அதிகரித்து வரும் இயந்திரங்களின் பயன்பாடு பற்றிப் பேசும் ‘உளி தொடாக்கலை’, வழக்கொழிந்து போயிருக்கும் சூத்திரக் கிணறு நீர்ப்பாசன முறை பற்றிப் பேசும் ‘அழிவடைந்து போன பழமை’, ஆழக்கடலின் ஆபத்து அறியாது அதில் நீராடச்சென்று மரணித்துப்போன மூன்று சகோதரர்களின் கதை சொல்லும் ‘செம்மலையின் கண்ணீர்’, மரபு ரீதியான கால்நடை வளர்ப்பு மூலமான தற்கால தன்னிறைவுப் பொருளாதாரம் நோக்கிய நகர்வு பற்றிப் பேசும் ‘வன்னியின் ஆவுடையூர்’, நீடித்த வனையுடனான பலவர்ண ‘பற்றிக்’ உள்ளூர் உற்பத்தி பற்றிப் பேசும் ‘வானவில்’, நந்திக்கடல் மீன்பிடியின் தற்போதைய நிலை பற்றிப் பேசும் ‘நந்திக்கடல் மீன்பிடி’,மலையகப் பெண்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களைச் சொல்லும் ‘அம்மா’, வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக இருந்து இன்று சிதைவடைந்திருக்கும் கீரிமலை வெளவால் புறாக்குகையின் கதைசொல்லும் ‘மறைந்திருக்கும் தொன்மம்’, மாற்றுத்திறனாளிக் கலைஞர் ஒருவரின் கலைத்துறைப் பயணம் பற்றிப் பேசும் ‘இருளொளி’, தமிழர்களின் பாரம்பரிய இயந்திரப் பொறிமுறை பற்றிப் பேசும் ‘தூய மரச்செக்கு எண்ணெய்’ ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.
இதன்போது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், திரைப்பட துறைசார் வல்லுநர்கள் என பலர் கலந்துகொண்டு அவற்றை திறனாய்வு செய்தனர்.
இந்த ஆவணப் படங்கள் 5-10 நிமிடங்கள் நேரம் ஓடக் கூடியவை.
அவ்வகையில் வெளியிடப்பட்ட10 நிமிட ஆவணப் படங்களில் ஆனையிறவு உப்பளத்தின் தற்போதைய நிலை சொல்லும் ‘கடல்விளை அமுதம்’ பலரின் வரவேற்பை பெற்றதனைக் காணக்கூடியதாக இருந்தது.
‘கடல்விளை அமுதம்’ ஆவணப் படத்தை உருவாக்கியவர் சுன்னகத்தைச் சேர்ந்த மாணவி பி.சிறீவித்தியா. பலரின் பாராட்டு பெற்ற அவரது படைப்பு குறித்து கனடா உதயனுக்காக அவரிடம் பேசினேன்.
”தற்போது 200ற்கும் குறைவானோர் அங்கு பணியாற்றினாலும் முன்பு 5,000 பேர் வரையில் பணியாற்றிய இடத்தினை தேர்வு செய்தபோது யாழில் வளங்கள் மிக குறைவாகக் காணப்படும் நிலையில் இனம் காணக்கூடிய வளமாக அதாவது அனைத்துப் பக்கமும் கடல் இருப்பதனால் அதனைத் தேர்வு செய்தேன்” எனத் தெரிவித்த மாணவி சிறீவித்தியா போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான குறும்படத் தயாரிப்பு போட்டியில் பரிசையும் வென்ற மாணவியாவார்.
இந்த ஆவணப்படம் 25 ஆயிரம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்ததோடு இதனைத் தொடர்ந்து பல ஆவணப்படங்களை ஆய்வு மூலமும் வெளியிட வேண்டும் என்பதே விருப்பமாகவுள்ளது எனவும் அந்த `அய்யர்` வீடுப் பெண் கூறினார்.
இதேநேரம் ஆழக்கடலின் ஆபத்து அறியாது அதில் நீராடச்சென்று மரணித்துப்போன மூன்று சகோதரர்களின் கதை சொல்லும் ‘செம்மலையின் கண்ணீர்` கதையைத் தயாரித்து ஆவணப்படுத்திய கல்கி ஜெகநாதன் என்னும் முள்ளியவளையைச் சேர்ந்த மாணவியிடமும் பேச்சுக் கொடுத்தேன்.
”இந்த கதை தனது மனதை பாதித்த காரணத்தினால் தேர்வு செய்ததாகவும் அதேநேரம் இது எதிர்கால இளைஞர்களிற்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இருக்கும் என்று கருதியே இந்த விடயத்தை தேர்வு செய்தேன் என்றார். மேலும் இதே போன்று விழிப்புணர்வு ஆவணங்கள் தயார் செய்வதை எதிர்பார்க்கின்றேன். ஆனால் அதற்கான ஒத்துழைப்புக்களே முக்கியமானது” என்றார்.
பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நீர்வேலி வாழை உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிப் பேசும் ‘வாழைக்குலைச் சங்கம்’, என்னும் ஆவணத்தை உருவாக்கிய பி.துலக்ஷா தனது படைப்பிற்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ந்தார்.
”எனது பல்வேறு தேவைக்குச் சென்று வந்த சமயம் இதை கண்ணுற்றேன். இதிலிருந்த தனித்துவம் கருதி இதனை ஆவணமாக்க எண்ணி 3 வார கால முயற்சியில் இதனை உருவாக்கினேன். இதனையே தொடர்ந்தும் செய்ய விரும்பினாலும் கற்றல் காலத்தில் இலங்கையிலேயே உள்ள ஒரேயொரு வாழைக்குலை உற்பத்தி சங்கத்தின் கதையை ஆவணப்படுத்தினோம்”.
இது ஒரு புறம் எனில் ஆவணப்படத்தைத் தயாரிக்க நண்பரின் கமராவும் ஒரு மடிக் கணினியின் உதவியுடன் மட்டுமே மேற்கொண்டதாகவும் அந்த வாய்ப்புகளைப் பெற பொருளாதார நெருக்கடி இடமளிக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் துலக்ஷா.
போரின் பின்னர் மாணவர்களின் முயற்சியில் வெளியான கதையில் மலையகத்தின் அவலங்களை அல்லது தேவைகளை எடுத்துக்கூற முனையும் 3 கதைகளில் `மைதானம்` திறமையாகத் தயார் செய்யப்பட்டுள்ள போதிலும் மிகத் தரமான தலைப்பின் கதையை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. தமது சமூகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த ஆவணத்தை மேலும் சிறப்பாக எடுக்க முடியாமல் போயிற்று என்று அதை உருவாக்கியவர் வருந்தினார்.
அரங்கில் இருந்த பலரின் கவனத்தை வாழைக்குலைச் சங்கம் வெகுவாக ஈர்த்ததை அவதானிக்க முடிந்தது. நாட்டில் `ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு` என்று சவால்களுக்கு இடையே செயற்படும் அந்த கூட்டுறவுச் சங்கத்தின் கதை ஆவணப்படுத்தப்பட்டிருந்த விதம் தரமாகவும் பாராட்டும்படியும் இருந்தன. அதில் ஒரு தனித்துவம் இருந்ததை உணர முடிந்தது.
இதிலே அனைத்தும் மாறுபட்ட எண்ணமும் வேறுபட்ட கதைகளாக இருந்தபோதும் மூன்று இடங்களினது கதைகளைக் கருத்திட்ட மூன்று மாணவர்களை இங்கே இணைத்துள்ளோம்.
மாணவர்களின் ஆவணப் படங்கள் வெளியீடு தொடர்பில் ஊடக கற்கைத்துறை பேராசிரியரான ரகுராமுடன் உரையாடி அவரது எண்ணவோட்டங்கள் மற்றும் கருத்தை அறிந்தேன்.
”மாணவர்களின் முயற்சிக்கு மட்டுமே நாம் வழிகாட்டியாக இருந்தோமே அன்றி அவர்களின் உருவாக்கம், கதை தேர்வு அத்தனையும் மாணவர்களிற்கே உரியது. அத்தோடு இந்த ஆவணப்படங்கள் வெறுமனே தரத்தை மட்டும் கருதியிருந்தால் முன்கூட்டியே பரிசீலித்து உணர்வுகளிற்கு முன்னுரிமை அளித்திருக்க முடியும். ஆனால் மாணவர்களின் வளர்ச்சியை சுய ஊக்கத்தையும் கருதியதனால் எந்தவொரு மாணவர்களின் முயற்சியிலும் எமது பங்கு இருக்கவில்லை” என்றார்.
கடந்த காலத்தில் இதேபோன்று உருவாக்கிய ஆவணப் படத்தில் 2016 உருவாக்கிய யாழ் சர்வதேச திரைப்பட விராவில் சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான விருதை தமது மாணவரான திருச்செல்வம் திவாகர் பெற்றுக்கொண்டார் எனவும் பேராசிரியர் ரகுராம் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் காட்சிப்படுத்திய பிறைநிலா கிருஸ்ணராயாவின் `நாங்களும் இருக்கிறம்` கதை பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைச் சர்வதேச திரைப்பட விழாவிற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் பகிர்ந்து கொண்டார்.
”இவ்வாவணப் படங்களின் காட்சிப்படுத்தில் இடம்பெற்ற 14 ஆவணப்படங்களில் 12 ஐ தயாரித்தவர்கள் பெண்கள் என்பது அவர்கள் அனைத்து துறைகளிலும் சீரிய வகையில் சிறப்பாக முன்னேறி வருவதை பறைசாற்றுவதாக இருந்தது. இதேநேரம் இந்த மாணவர்களிற்கு தற்போது தேவையாக இருப்பது அவர்கள் உருவாக்கிய ஆவணப் படங்களைக் காட்சிப் படுத்தும் காட்சிக்கூட வசதிகளே ஆகும்” என்றார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது படைப்பாற்றலை தமது பொருளாதார சக்திக்கு உட்பட்டு காட்சிப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், அவர்களின் ஆழ்மனதிலுள்ள ஏக்கங்களையும் என்னால் உணர முடிந்தது. போருக்குப் பின்னரான காலத்தில் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கிறது என்பதை அவர்களின் படைப்புகள் எடுத்துக்காட்டுவதாகவே உள்ளன.
இந்த மாதிரியான ஆவணப்படுத்தலை வெளிநாடுகளிலும் காட்சிப் காட்சிப்படுத்த விருப்பினாலும் அதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.
புலம் பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாகக் கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் இந்த மாணவர்களுக்குப் பொருளாதார உதவிகளை `ஸ்கொலர்ஷிப்` வாயிலாக அளித்தால் அது அவர்களுக்கு ஊக்கத்தையும் மேலும் படைப்பு ஆக்கத்தையும் அளிக்கும்.
உதயன் வாசகர்கள் இவர்களைப் போன்ற படைப்பாளிகளை ஊக்குவித்து தாயகத்தில் நிலவும் பிரச்சனைகள், தேவைகள், நெருக்கடிகள் போன்றவைகளை மேலும் சிறந்த படைப்புகள் மூலம் வெளிக்கொண்டு வந்து பாரிய பங்களிப்பை அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை பலரின் மனதிலும் உள்ளது.