மாவீரர் நாள் இம்முறை தாயகமும் உட்பட உலகம் பூராகவும் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் அரசாங்கம் முதலில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்த முயற்சித்தது.எனினும் மக்கள் பின்வாங்கவில்லை. கட்சிகளும் பின்வாங்கவில்லை. செயற்பாட்டாளர்களும் பின்வாங்கவில்லை.அதனால் ஒரு கட்டத்தில் அரசாங்கம் தடுப்பதைக் கைவிட்டது. அதனால் அண்மை ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் தாயகத்தில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ரணில், மாவீரர் நாளை ஒப்பீட்டளவில் தடுக்காமை குறித்தும், அந்நாளில் திரண்ட மக்கள் தொகையை வைத்தும் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களில் முக்கியமான இரண்டைப்பற்றி இன்று இக்கட்டுரையில் பார்க்கலாம்..
முதலாவது, ரணிலின் லிபரல் ஜனநாய அணுகுமுறை தொடர்பான எதிர்பார்ப்புக்கள். இரண்டாவது மாவீரர் நாளில் திரண்ட மக்கள் தொகை.
பொதுவாக ரணிலின் காலத்தில் நினைவு கூரும் வெளி ஒப்பீட்டளவில் அதிகந்தான். இம்முறையும் அதுவே நடந்தது.அவர் அவ்வாறு நினைவு கூர்தலை ஒரு கட்டத்துக்கு மேல் தடுக்க முற்படாமைக்கு காரணங்கள் உண்டு. அவர் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு வரஇருக்கிறார். எனவே தனது நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். இது முதலாவது காரணம்.இரண்டாவது காரணம்,அது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமையும் பண்பாட்டு உரிமையும் ஆகும். அக்கூட்டு உரிமையை நிராகரித்து விட்டு ரணில் விக்ரமசிங்க வெளி உலகத்திற்கு தனது லிபரல் முகமூடியைக் காட்ட முடியாது. எனவே அவர் அதை அனுமதிக்க வேண்டியிருக்கிறது. மூன்றாவது காரணம்,அண்மையில் ஜேவிபி தன்னுடைய தியாகிகள் தினத்தை கொண்டாடியது. ஜேவிபி அவ்வாறு தன் தியாகிகளை நினைவுகூர முடியும் என்றால், ஏன் தமிழ் மக்களும், தமிழ்க் கட்சிகளும் அப்படிச் செய்ய முடியாது ? நாலாவது காரணம், துக்கத்தை கொட்டித் தீர்க்க விட்டால் அது வடிந்துவிடும். மாறாக அது அழுது தீர்க்கப்படாத விடத்து அது உள்ளுக்குள்ளேயே தேங்கி நின்று கோபமாக ஆவேசமாக மாறும். அது பின்னர் ஓர் அரசியல் சக்தியாகவும் மாற முடியும். ரணில் விக்கிரமசிங்க அதைத் தவிர்க்க விரும்புகிறார். எனவே அவர் மேற்கண்ட காரணங்களை முன்வைத்து நினைவு கூர்தலை ஒப்பீட்டளவில் அனுமதித்திருக்கிறார் என்பதே உண்மை.
இதை வைத்துக்கொண்டு ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடுவார் என்று கற்பனை செய்யத் தேவையில்லை. இதை இன்னொரு விதமாகச் சொன்னால், நினைவு கூர்தல் பொறுத்த அவருடைய லிபரல் முகம்தான் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு பாதகமானதும்கூட. ஏனென்றால் அவரிடம் ஒரு சமஸ்ரித் தீர்வு இல்லை என்று தெரிகிறது. கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் கேட்டதுபோல சமஸ்டிக்கு ஆதரவான ஒரு கூட்டு உளவியலை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய பொறுப்பு அங்குள்ள சிங்கள கட்சிகளுக்கு உண்டு. ஆனால் யாரும் அதைச் செய்யவில்லை. எல்லாருமே சமஸ்டியை ஒரு பிரிவினை கோரிக்கையாக ஒரு கெட்ட சொல்லாக தென்னிலங்கையில் உருவகித்து வைத்திருக்கிறார்கள். இப்பொழுது திடீரென்று சமஸ்டியை நியாயப்படுத்தி தலைகீழாக கதைக்க அவர்களால் முடியாது.
ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமல்ல சஜித் பிரேமதாசாவாலும் முடியாது. சஜித் பிரேமதாச கட்சித் தலைவராக வந்ததிலிருந்து ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகிறார். அது என்னவெனில் இனப்பிரச்சினைக்கு தீர்வு 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதுதான். அவர் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுதும் அதைத்தான் வலியுறுத்தினார். கடந்த வாரம் நாடாளுமன்றத்திலும் அவர் அதைத்தான் திரும்ப கூறினார். அந்த உரையாடல் நடந்தபொழுது நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவும் இருந்தார். அவர் கூறுகிறார் 13 பிளஸ் தருவதற்கு தான் தயார் என்று. இப்படிப் பார்த்தால் எதிர் தரப்பில் சஜித்தும் மகிந்தவும் கிட்டத்தட்ட ஓரிடத்தில் நிற்கிறார்கள். இவர்களை எதிர்த்துக்கொண்டு ரணில் ஒரு சமஸ்டி தீர்வை முன் வைக்க வேண்டும். அதற்கு வேண்டிய துணிச்சலும் அரசியல் திட சித்தமும் மக்கள் ஆணையும் அவருக்கு உண்டா ?
நினைவு கூர்தலில் அவர் ஒப்பீட்டளவில் லிபரலாக நடந்து கொண்டதை வைத்துக்கொண்டு அவர் தீர்வு விடயத்திலும் அவ்வாறு நடந்து கொள்வார் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கக் கூடாது.
இரண்டாவது உரையாடல், மாவீரர் நாளில் திரண்ட மக்கள் தொகையின் அடிப்படையிலானது. தன்னியல்பாக மக்கள் திரண்டார்கள்.எனவே ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்தினால், தமிழ்மக்கள் அதில் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற ஒரு உரையாடல்.அது உண்மை. அதனால்தான் உலகசமூகம் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு தயாராக இல்லை. ஒரு பொதுஜன வாக்கெடுப்பு எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் விருப்பத்தை பிரதிபலிப்பது. ஆனால் அதே சமயம் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா இல்லையா என்பதனை ஒரு மக்கள் கூட்டத்தின் விருப்பம் மட்டும் தீர்மானிக்காது. அதனை புவிசார் மற்றும் பூகோள அரசியல் நலன்கள்தான் இறுதியிலும் இறுதியாக தீர்மானிக்கின்றன.
ஒரு பொதுஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் மத்தியில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் என்றைக்குமே தயாராக இருக்காது. இந்தியாவும் தயாராக இருக்காது. மேற்கு நாடுகளும் இன்று வரை தயார் இல்லை. ஏனென்றால் ஒரு பொதுஜன வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் பிரிவினைக்கு கிட்ட வரும் ஒரு தீர்வுக்கு வாக்களிப்பார்கள். இதற்கு முன்நடந்த பல பொதுசன வாக்கெடுப்புகள் முன்னுதாரணங்கள் ஆகும். செழிப்பான ஜனநாயக பண்பாடு நிலவும் நாடுகளில் பொதுஜன வாக்கெடுப்புகள் நடக்கும் பொழுது மக்கள் சேர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக்களிப்பது உண்டு. உதாரணம் கியூபெக் மற்றும் ஸ்கொட்லாந்து. அதே சமயம் ஜனநாயகம், இனநாயகமாக சீரழிந்து காணப்படும் நாடுகளில், இன முரண்பாடுகள் ரத்தம் சிந்தும் ஒரு வளர்ச்சியை அடைந்த நாடுகளில், பொதுஜன வாக்கெடுப்புக்களில் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணம் தென் சூடான்,கிழக்குத் தீமோர் போன்றனவாகும். எனவே இலங்கை போன்ற இனநாயகம் நிலவும் நாடுகளில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்தினால் அது பிரிவினையில் தான் முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்தும் முடிவு என்பது தமிழ் மக்களை பிரிந்து போக அனுமதிப்பதுதான் என்று இந்தியாவுக்கும் தெரியும், மேற்கு நாடுகளுக்கும் தெரியும். அதனால்தான் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் மத்தியில் நடத்துவதற்கு உலக சமூகம் இன்று வரையிலும் தயார் இல்லை.
ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்ற முடிவை அந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவை வைத்து உலக சமூகம் தீர்மானிப்பது இல்லை. மாறாக அந்த பொதுஜன வாக்கெடுப்பின் விளைவுகள் தங்களுக்கு சாதகமாக வருமா இல்லையா என்பதனை பார்த்துத்தான் உலக சமூகம் அதற்கு ஒப்புக்கொள்கிறது.
இந்த அடிப்படையில் சிந்தித்தால் இலங்கை தீவில் மாவீரர் நாளில் மக்கள் கூடுவதை பார்த்தோ அல்லது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணிகளில் மக்கள் திரள்வதைப் பார்த்தோ உலக சமூகம் ஒரு பொதுஜன வாக்கெடுப்புக்கு சம்மதிக்க போவதில்லை. மாறாக நாடுகளின் புவிசார் மற்றும் பூகோள அரசியல் நலன்களின் நோக்கு நிலைகளில் இருந்தே ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படுகிறது. இலங்கை தீவில் அவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு மேற்கு நாடுகள் இன்று வரை தயார் இல்லை. இந்தியாவும் அதை அனுமதிக்கும் நிலையில் இல்லை.
இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க ஒரு தீர்வுக்கு தயார் என்று கூறுகிறார் தமிழ் மக்கள் எதைக் கேட்க வேண்டும் என்பதில் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றுபட்டு ஒரு முன்மொழிவை முன்வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கூடிக்கதைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்க முதல், தமிழ் மக்கள் ஒரு பொதுஜன வாக்களிப்பை கேட்க வேண்டும் என்ற ஆலோசனை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எனினும்,ரணில் விக்ரமசிங்க தமிழ்க் கட்சிகளை நோக்கி அழைப்பு விடுத்த பின்னரான அண்மை வாரங்களில் நடந்து வரும் உரையாடல்களைத் தொகுத்துக் கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்க் கட்சிகள் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பு என்று தெரிவு இதுவரை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதே அதுவாகும். ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நோக்கி உலக சமூகத்தின் கருத்தை உருவாக்குவதற்குத் தமிழ் மக்கள் இப்பொழுதை விடக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.
எனவே மாவீரர் நாளில் திரண்ட மக்களை வைத்துக்கொண்டு,அரசாங்கம் அதை ஒப்பீட்டுளவில் தடுக்கவில்லை என்பதை வைத்துக்கொண்டு, தமிழ் மக்கள் யதார்த்தத்திற்கு வெளியே போய் அளவுக்கு மிஞ்சிக் கற்பனை செய்யக் கூடாது. தமிழ் மக்களின் கூட்டுத்துக்கம் இப்பொழுதும் வலிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் அக்கூட்டுத்துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்கசக்தியாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நிரல் தமிழ் கட்சிகளிடம் இல்லை என்பதுதான் தமிழ் மக்கள் உடனடியாக உரையாட வேண்டிய ஒரு விடயம் ஆகும். 13 ஆண்டுகளின் பின்னும் காயங்கள் அறவில்லை. துக்கமும் தீரவில்லை. ஆனால் காலம் ஒரு சிறந்த மருத்துவன்.காலப்போக்கில் துக்கம் ஆறமுடியும்.காயங்களும் மாறக்கூடும். எனவே,அந்தத் துக்கத்தையும் காயத்தையும் அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டிய ஒரு மக்கள் கூட்டம் கடந்த 13 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறது என்ற கேள்வியை தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது.