வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- டிசம்பர் 31க்குள் 13ஐ முழமையாக அமுல்படுத்தி நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டட்டும்.
- தமிழர்தரப்பில் நிபுணத்துவக் குழுவும்உள்வாங்கப்பட வேண்டும்
இன விவகாரத் தீர்வுக்கான பேச்சு வார்த்தை ‘தேனீர் விருந்து தேனிலவாக‘ மீண்டும் மாறிவிடக் கூடாது என எதிர்பார்த்தவர்கள் பலர்.துரதிஸ்டவசமாக பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்பே விவாகரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது.
இது எதிர்பார்த்ததொன்றே. தமிழரசுக்கட்சியும் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவும் ஏற்படுத்திய அரசியல் நாடகம் இவ்வளவு வேகமாக பிசுபிசுத்துப் போகும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என கூறுவதற்கில்லை.
- 13க்கு சமாதிகட்டும் இலங்கையின் நகர்வு
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட அவர்கள் 1987 இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு அப்பால் இன்றைய கள நிலவரத்திற்கேற்ப புதிய உடன்படிக்கை அவசியம் என ஏற்கனவே இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தப் புதிய உடன்படிக்கை 13வது திருத்தத்திற்கு சமாதிகட்டி எழுதப்படப் போகும் புதிய உடன்படிக்கையாகும்.அதனையே இலங்கை எதிர்பார்க்கின்றது.
அதாவது இந்தியாவின் பிடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்கும் ஒரு உபாயமாகும். 1987 இலங்கை இந்திய உடன்படிக்கை 13வது சட்ட திருத்தம் என்பன தமிழர் விவகாரத்தை மையமாகக் கொண்டு இந்தியா இலங்கையில் தலையீடு செய்கின்றது.1987 ஒப்பந்தத்திற்கு அப்பால் சென்றுவிட்டால் இந்தத் தலையீடு இருக்காது என்பது இலங்கையின் எதிர்பார்ப்பு.
- மாவட்ட அபிவிருத்தி சபை நோக்கி சிங்களத் தரப்பு
இந்த ஒரு பின்னணியிலேயே ஜனாதிபதி வடக்கு தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த அதேவேளையில் தற்போது மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார்என அறிவித்துள்ளார். அதாவது மாகாண சபை முறைமையில் இருந்து கீழிறங்கி மாவட்ட அபிவிருத்தி சபை நோக்கி அதிகாரப்பரவலாக்களை ஜனாதிபதி நகர்த்த முற்படுகின்றார். 1981இல் அறிமுகப்படுத்தப்பட்டு தோல்விகண்ட மாவட்ட அபிவிருத்தி சபைக்கு புத்துயிர் அளிக்க ஜளாதிபதி வரலாற்றில் பின்னோக்கி பயணிக்க முயல்கின்றார்.
- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்மொழிவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட சபையை அமைக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இது நல்லது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நாங்கள் இதற்கு முழுமையாக ஆதரவளிப்போம்‘ என்று நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபாலசிறிசேனபதிலளித்துள்ளார்.
- பந்துகள் வழங்கிய கதை
உதை பந்தாட்ட விளையாட்டில் அணைத்து வீரர்களுக்கும் பந்து வழங்கிய கதையாக தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் மைத்திரிபால சிறிசேனவின் முன்மொழிவை ஆமோதித்துப் பேசுகின்றார்.
- கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்க முடிவு
இன விவகாரத்துக்கான தீர்வுகுறித்த அழைப்பு விடுத்தமையினால் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற் கூறிய நிலைப்பாடு ஆச்சரியத்துக்குரியதல்ல. கடந்த காலங்களில் இவ்வாறான பல சம்பவங்களை தமிழ் மக்கள் கண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை கூட்டமைப்பு நடத்தியது. பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெறுவதாக அடிக்கடி செய்திகளும் வெளிவந்தன. இந்தப் பேச்சு வார்த்தையின்போது கிராம சபைகளுக்கு மேல் அதிகாரப்பரவலாக்கள் இல்லை என்ற நிலைப்பாட்டை அரசதரப்பு தெளிவாகக் கூறியிருந்த நிலையிலும் தொடர்ந்தும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக அவ்வேளையில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக பல சுற்றுக்களைக் கடந்தது.இறுதியில் பேச்சு வார்த்தை ஒரு அங்குலம்தானும் நகரவில்லை என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக நகர்வுகளை மேற் கொள்வதும் பிறகு ஏமாற்றுவதும் வழமை. அதேபோல் தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்களத்தரப்புகள் மாகாண சபை முறைமையில் இருந்து மாவட்ட அபிவிருத்திசபைக்கு வழிகாட்டி நிற்கின்றனர்.
- ஆளும் தரப்புக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வார்த்தை தேவை
தற்போதைக்கு சிங்கள ஆளும் தரப்புக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வார்த்தை தேவை. ரோவின் தலைவருடனான பேச்சு வார்த்தையின்போது இது பேசு பொருளாக அரசதரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
- இன விவகாரத் தீர்வு நோக்கிய பயணத்தில்
- *1990 களில் மங்கள மூனசிங்க குழு அறிக்கை
- *2000 ஆம் ஆண்டின் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலமைப்பு வரைவு
*2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பல இன நிபுணர் குழுவொன்று நடைமுறைப்படுத்தப்பட்ட அறிக்கையை சமர்பிக்கவில்லை.
*அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழு (APRC, )அறிக்கை. 2010 அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது.
*2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் செயல்முறைக்கு புத்துயிர் அளிக்க முயன்றது
*2016 இல் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஒரு அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது என அணைத்துமே ஆரவாரத்துடன்தான் ஆரம்பித்தன.
ஆனால் இறுதியில் இவை அணைத்தும் புஸ்வானமாகியதுதான் கதை.
- நூலகத்தில் ஆவணப்படுத்தவே அறிக்கைகள்!
இந்த அறிக்கைகள்குறித்து ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது அரசதரப்பில் இருந்து ‘அந்த அறிக்கைகள் நூலகத்தில் ஆவணப்படுத்தி வைப்பதற்கானவை‘ என பதில் அளித்தார்.
- ஏனவே பேச்சு வார்த்தை நடைபெறுவதாயின் அது வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். பேச்சு வார்த்தையின் போக்கு முடிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
- கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தலைமைகளுடன் நிபுணத்துவம் கொண்ட தமிழ் புத்திஜீவிகளும் பேச்சு வார்த்தைகளில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை சம அளவில் இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களித்தாலும் வெற்றி பெறும். வாக்களிக்காவிட்டாலும் வெற்றி பெறும். ஆனால் அரச தரப்பைப் பொருத்து ‘கூட்டமைப்பும் ஆதரவு‘ என்ற பட்டயம் வேண்டும் அவ்வளவுதான்.
- சிங்கள இராஜதந்திரம் பதுங்குவது பாய்வதற்கே.
- தமிழர்களை அழிப்பதற்கு எந்தப் பேயுடனும் கூட்டுச் சேர சிங்களத் தரப்பு தயங்காது.
- 2030க்குள் தாயகக் கோட்பாட்டை தகர்த்துவிடுவதே திட்டம்.
- தென்னிலங்கை மக்களின் நியாயமான கோரிக்கைக்கே பயங்கரவாத முத்திரை குத்தி இரும்புக் கரம் கொண்டு அடக்கும் ஆளும் வர்க்கம் இன விவகாரத்துக்கு டிசம்பர் 31க்குள் தீர்வு கண்டுவிடுவார்களா என்பதுகுறித்து இவர்களது நல்லெண்ண சமிக்ஞைகளுக்காக அரசியல்வாதிகள்போல் ஜோசியர்களிடம் போகத் தேவையில்லை.
- ஏனெனில் கடந்தகாலங்களில் இனவிவகாரத் தீர்வுகுறித்த நகர்வுகளில் இவர்கள் வெளிப்படுத்திய நல்லெண்ண சமிக்ஞைகள் உத்தரவாதங்கள் வாக்குறுதிகள் என அணைத்துமே இலவம் பஞ்சைப்போல் ஊதித் தள்ளப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன.
- இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர் மாத்திரமல்ல இந்தியா மற்றும் சர்வதேசமும்தான்.
- எனவே டிசம்பர் 31க்குள் 13ஐ முழமையாக அமல்படுத்தி சிங்கள ஆளும் வர்க்கம் நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டட்டும்.