கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த பல குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக ஒரே வாரத்தில் சுமார் 107 சந்தேக நபர்கள் மீது ஒன்றாரியோ மாகாணப் பொலிசாரும் ரொறன்ரோ போன்ற பிராந்தியப் பொலிசாரும் பல வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் அறிவித்துள்ள பொலிசார் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தவறான பாலியல் தொடர்பு நோக்கத்துடன் இணையத்தை பயன்படுத்துதல் போன்ற குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொலிஸார் Maverick என்ற பெயரில் இணையத்தள திட்டமொன்றை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஒன்ராறியோ பொலிஸாருடன் 27 குழுக்கள் இணைந்து குறித்த திட்டத்தை முன்னெடுத்தது. இதில், அக்டோபர் மாதத்தில் மட்டும் 227 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த விடயமானது தங்கள் மாகாணத்திற்கு பெரிய வெற்றியைத் தந்துள்ளது என ஒன்றாரியோ மாகாண சட்டத்துறை நாயகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்
இந்த வழக்குகள் தொடர்பாக 168 தேடுதல் ஆணைகள் சமர்ப்பிக்கப்பெற்று , இந்த விடயம் தொடர்பில் 1,032 தடைசெய்யப்பட்ட உபகரணங்;களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், 107 நபர் மீது 428 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்சார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அநியாயமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது ஒன்றாரியோ வாழ் மக்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் மேலும் எமக்கு அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தாலும், ஒருமாத காலம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளதாக பொலிஸ் பிரிவுகளின் முக்கிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 61 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 60 சிறுவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.சிறுவ ர் துஸ்பிரயோகம் தொடர்பில் மேலும் 175 விசாரணைகள் தொடர்வதாகவும், எதிர்வரும் நாட்களில் வழக்குகள் நீதிமன்றங்களில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோ மாநகரில் மட்டும் 20 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 23 பேர் கைதாகியுள்ளதாகவும் அவர்கள் மீது 96 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களிடமிருந்து ஆபாச புகைப்படங்கள் ஆபாச சஞ்சிகைகள் உள்ளிட்ட 131 கருவிகளை கைப்பற்றியுள்ளதாகவும், இவர்களால் பாதிக்கப்பட்ட 22 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு அதில் 10 சிறுவர்களை பாதுகாப்பான காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.