“தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சியினரும் இணைந்து கூட்டமைப்பின் புதிய தலைவரைத் தெரிவு செய்வார்களென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைமைகள் தொடர்பில்
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது உடல் வலிமை குறைந்து இருந்தாலும் அவருடைய அனுபவம், அவருடைய ஆற்றல், அவர் வெளியிடும் சொற்கள் எப்போதும் வலிமையுடையவையாக இருக்கின்றன.
தந்தை செல்வாவும் தனது நீண்ட கால வரலாற்றில் உண்ண முடியாமல், நடக்க முடியாமல், உரத்துப் பேச முடியாமல் இருந்த போதிலும் தமிழ் மக்கள் அவரை அங்கீகரித்திருந்தார்கள். இறுதி வரைக்கும் அவர் அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தார். தமிழரசுக் கட்சியில் அவர் தலைவராக, செயலாளராக, பெருந்தலைவராகக் கூட இருந்துள்ளார். ஜனநாயக வழியில் அந்தப் பதவிகளுக்கு அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனாலும், எங்களுடைய தமிழரசுக் கட்சியிலே ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது,
இப்போதும் அது நடக்கப் போகின்றது. கட்சியில் தந்தை செல்வா போல், யார் தலைவராக இருந்தாலும் ஓராண்டு அல்லது ஈராண்டுகளுக்கிடையில் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கமைய நடைபெறுகின்ற மாநாடுகளில், நாங்கள் அடுத்தடுத்த தலைவர்களையும் தெரிவு செய்து வந்திருக்கின்றோம். ‘ என்றார்.
மாவை சேனாதிராஜாவின் இந்த கருத்து தொடர்பாக கொழும்பு பத்திரிகையாளர் ஒருவர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு எழுதிய குறிப்பு ஒன்றில் “மாவை சேனாதிராஜா தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக வருவதற்கு தான் ஆசைப்படுகின்றார். அவரது நோக்கங்கள் இரண்டு ஒன்று . தான் வட மாகாண சபையின் முதல்வராக வரவேண்டும். அதற்கான முயற்சியின் முதல்வடிவம் தான் . முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்க வேண்டும் என்ற அறிவிப்பைச் செய்தது’ என்று தெரிவித்துள்ளார்.