(சிறப்புக் கட்டுரைத் தொடரின் இறுதிப் பாகம்;- 06)
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
இலங்கையில் தமிழர்கள் மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல மிருகங்களிடமும் நீண்ட காலமாகச் சிக்கித் தவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக யானையிடம் அவர்கள் சிக்கி சின்னபின்னமாகி உயிரையும் உடைமைகளையும் இழந்து நிர்கதியாக நிற்பதெல்லாம் வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்.
அண்மையில் தென்னிலங்கையில் தமிழர்கள்பால் பற்றுள்ள ஒரு மூத்த செய்தியாளர் மற்றும் செயற்பாட்டாளரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னார், “மல்லி, நாட்டிலுள்ள தமிழர்களின் துன்பங்களுக்கு காட்டிலுள்ள யானைகள் மட்டுமல்ல நாட்டின் அரசியல் யாப்பில் `யானை பலத்தைக் கொண்டு` மாற்றங்களைக் கொண்டு வந்தது யானை தானே! 83 கலவரங்களும் யானையால் தானே ஏற்பட்டது, அதேபோன்று சிங்கம் சரியாக நான்கு கால்களில் நின்றிருந்தால் நாட்டில் அவலங்கள் தோன்றியிருக்காதே. சிங்கம் சீறியதாலும், யானை பிளிறியதாலும் தானே உறுமலும் ஏற்பட்டது என அடுக்கிக்கொண்டே போனார்.
இந்த கட்டுரைத் தொடரின் இறுதி பாகத்தை எழுத ஆரம்பித்த போது அவர் கூறியது நினைவிற்கு வந்தது.
முல்லைத்தீவு மாவட்டம் அரச இயந்திரங்களால் அவலத்தை சந்திக்கும் அதேநேரம் வன விலங்குகளாலும் அவலத்தையே சந்திக்கின்றன. போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் இன்னும் தமது வாழ்வாதாரங்களை முற்றாக மீட்டெடுக்காத மக்களுக்கு `பட்ட காலிலேயே படும்-கெட்ட குடியே கெடும்` என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதர்களால் மட்டுமின்றி வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.
தென்னிலங்கையின் அநுராதபுரம், புத்தளம் ஆனைமடுவ, மொனராகலை போன்ற பகுதிகளில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிகளிற்குள் ஊடுருவி நாசம் செய்யும் யானைகளை மயக்க ஊசி அடித்து வாகனங்களில் ஏற்றிவரும் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் அவற்றினை முல்லைத்தீவின் எல்லைப் பகுதிகளிலும் வவுனியா வடக்கு நெடுங்கேணியை அண்டிய பிரதேசத்திலேயே இறக்கி விட்டுச் செல்கின்றனர்.
அதனைக் கேட்டால் குழப்பம் விளைவிக்கும் யானைகளை காடு மாற்றி விட்டால் குழப்பத்தை ஏற்படுத்த மாட்டாது என்கின்றனர். இப்படியான ஒரு விளக்கத்தை கேட்கவே சிரிப்பாகவுள்ளது. எந்த விலங்கினமும் தனது அடிப்படை குணாம்சங்களை மாற்றிக்கொள்ளாது என்கிற அடிப்படை புரிதல் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு இல்லையோ என்கிற கவலை எழுகிறது.
சிங்கத்தை இடம் மாற்றி வீட்டில் வைத்துப் பராமரித்தால் அது இடியப்பமும் பிட்டும் சாப்பிட்டு சாந்தமாக இருக்குமா என்ற கேள்வி எனக்குள்ளேயே எழுகிறது. அப்படித்தான் உள்ளது யானைகளை காடு மாற்றிவிடும் எண்ணமும் உள்ளதாக எனக்குள் தோன்றுகிறது.
முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணிப் பகுதியில் ஊருக்குள் மட்டுமன்றி, வைத்தியசாலைக்குள்ளும் உட்புகும் நிலையில் யானைகள் உள்ளபோதும் எந்தவொரு யானையினையாவது வேறு காட்டிற்கு மாற்றி விட்டீர்களா என மக்கள் கேட்கும் கேள்விக்கு எந்த அதிகாரிகளிடமும் பதில் இல்லை.
சரி, யானைகளை இடம்மாற்றி தராவிட்டால் யானை வேலியாவது அமைத்து தாருங்கள் என 10 ஆண்டுகளாகக் கோரியும் இன்றுவரை பலன் கிட்டவில்லை என்று காடுகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்கள் வாழும் வெலிஓயா, பொபஸ்வேவாவை பாதுகாக்க முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவைச் சுற்றி கொக்குத்தொடுவாய் கடல்நீர் ஏரியை அண்டிய பகுதியில் இருந்து ஆண்டாங்குளம் வன ஒதுக்க எல்லை ஊடாக ஒதியமலை,தனிக்கல் வழியாக அரியகுண்டான் மற்றும் கம்பிலிவெவவின் எல்லைவரை 25 கிலோ மீற்றருக்கு யானைப் பாதுகாப்பு வேலி அமைத்து சிங்கள மக்கள் காக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
”இது சிங்கமும் யானையும் செய்யும் கூட்டுச் சதியல்லவா?” என்று எல்லையோர கிராமவாசிகள் ஆவேசமாகக் கேட்கின்றனர்.
இதேசமயம் தென்பகுதியில் பல்வேறு தேவைகளிற்காக வளர்க்கப்படும் யானைகள் வயது முதிர்ந்தால் அல்லது மதம் கொண்டால் அவையும் வாகனம் மூலம் ஏற்றிவரப்பட்டு இரவு வேளைகளில் வடக்கு காடுகளிலேயே இறக்கும் அவலம் இன்றும் தொடர்வதாகவும் மக்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி முல்லைத்தீவு மாவட்டத்திலே -1962 ஆம் ஆண்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் இரண்டுமே ஒரே நிர்வாக மாவட்டமாக இருந்த காலத்திலேயே இரு மாவட்டத்திலும் -105 இடங்களை மட்டும் உரிமைகோரிய தொல்லியல் திணைக்களம் தற்போது முல்லைத்தீவில் மட்டும் 164 இடங்களை தமது இடங்கள் என்று கூறி உரிமை கோருகின்றனர்.
இத்தனை அவலங்களின் மத்தியிலும் அதிலிருந்து மீண்டு அபிவிருத்தி அல்லது வளர்ச்சி அடையத் தவிக்கும் அந்த மாவட்ட மக்களிற்கு போதிய வளங்கள் இருந்தபோதும் வாய்ப்புக்கள் இன்றியே தவிக்கின்றனர்.
மாவட்டத்தின் மிகப் பெரும் தொழிற்சாலையான கூழாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்திற்கு முன்னதாக முழுமையாக இயங்க வைக்கும் வகையில் அதன் திருத்தப் பணிகள் ஆரம்பித்து விட்டதாக மாவட்ட அரச அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.
மாவட்ட அரச அதிபர் கூறியபடி எல்லாம் திட்டமிட்டபடி முன்னேறி அந்த தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கினால், அதனால் யார் பயனடைவார்கள்-அந்த மாவட்டம் அல்லது வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள தமிழ் மக்களா அல்லது அவர்களுக்கு போதிய தகுதிகள் இல்லை என்று கூறப்பட்டு இதை ஒரு சாட்டாகக் கொண்டு தென்னிலங்கையிலிருந்து யானைகளைக் கொண்டு இறக்கிவிடுவது போன்று ஆட்களையும் கொண்டுவந்து இறக்குவார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அதேவேளை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாகத் திகழும் கொக்குளாய் , கொக்குத்தொடுவாய் , கருநாட்டக்கேணி போன்ற கிராமங்களில் 1983ம் ஆண்டிற்கு முன்னர் சுமார் 3 ஆயிரம் தமழ்க் குடும்பங்கள் வாழ்ந்த நிலையில் போர் முடிந்த 12 ஆண்டு கடந்துவிட்ட பின்னர் இப்போது ஆயிரத்திற்கும் குறைவான குடும்பங்களே உள்ளன மற்றும் அப்பகுதியின் அபிவிருத்தியை எவருமே கண்டுகொல்லவில்லை. அவர்களுக்காக குரல் கொடுக்கவும் யாருமில்லை என்று வருந்துகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் கூட தங்களது தேவைகளை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை போதியளவில் எடுப்பதில்லை என்று என்னிடம் பேசிய போது கண்ணீருடன் தெரிவித்தனர்.
இப்போது இந்தப் பகுதியை வடக்கு மாகாணத்தின் எல்லையாகப் பாதுகாக்க போராடும் அதேநேரம் மறுபுறத்தில் நெருங்கி அண்மித்து வரும் சிங்களக்குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் கிராமங்களாகவும் இருக்கும் இந்த கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் மாகாணத்தின் இருப்பை நிலை நிறுத்திக் காக்கவேண்டும் என்பதற்காக இன்றும் எல்லையில் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராட்டங்களை எதிர்கொண்டே வருகின்றனர். தமிழர்கள் தாயகப் பிரதேசத்தை காக்க வேண்டும் என தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் இருந்து குரல் எழுப்பினாலும் தாயகத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக எல்லைக் கிராமங்களில் எந்த அடிப்படை வசதிகளும் அற்று வாழும் இந்த மக்களைத் திரும்பிப் பார்க்கத் தவறுகின்றனர்.
இதேநேரம் நாட்டின் ஏனைய வளமான பகுதிகளிற்கோ அல்லது வெளிநாடுகளிற்குச் செல்லும் சந்தர்ப்பமோ அற்ற இவர்கள் பிறரின் உதவியின்றி தமது அடிப்படை வாழ்வியலையேனும் கொண்டு செல்ல மாவிலங்கம் வெளியில் உள்ள வயல்ப் பிரதேசத்தில் வயல் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் முடியாதவாறு சிங்கள மக்களின் தொழில் முயற்சி தடையாகவுள்ளது. அதாவது அருகே உள்ள சிங்கள மக்கள் தமது வாழ்வாதாரமாக ஆயிரக் கணக்கான பன்றிகளை வளர்ப்பதனால் தமது விவசாயம் அழிவடைவதாக விவசாய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தின் தமிழர் பிரதேசமான முகத்துவாரத்தில் அத்துமீறி வசிக்கும் தென்னிலங்கையர்கள் தமது வாழ்வாதாரமாக அதிக பண்றிகளை வளர்க்கின்றனர். அவ்வாறு வளர்க்கும் பண்றிகளை மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பான முறைகளில் வளர்ப்பது கிடையாது. அவற்றை பட்டிகளில் அடைத்து வளர்க்காமல் திறந்த இடங்களில் வளர்ப்பதனால் அவை இரவு பகலின்றி எவ்வேளைகளிலும் மக்கள் நடமாட்டப் பகுதிகளிற்குள்ளும் வாழ் விடங்கள் நோக்கியும் படை எடுக்கின்றன. இந்த வகைப் பன்றிகள் வளர்ப்பு இனத்தைச் சேர்ந்தமையால் மக்கள் நடமாட்டத்திற்கோ அல்லது நாய்களிற்கோ அஞ்சுவது கிடையாது.
”இவற்றின் காரணமாக 24 மணிநேரமும் காவல் இருக்கவேண்டிய நிலைமையில் உள்ளோம். காட்டுப் பண்றிகள் எனில் இரவுவேளைகள் மட்டுமே நடமாடும் . அவையும் மனித நடமாட்டம் அல்லது நாய்களின் நடமாட்டத்தை கண்டால் அகன்றுவிடும் . ஆனால் இங்கே சிங்களவர்கள் வளர்க்கும் பன்றிகளை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனால் வயல் நிலங்களும் விதைக்க முடியவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர்”.
மேலும் இந்தப் பன்றிகள் சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படுவதால், நோய் பரவும் வாய்ப்புகளும் அதிகமாகவுள்ளன என்று வைத்தியர்கள் அச்சப்படுகின்றனர். அவ்வாறு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு அது பரவினால் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழ் மண்ணில் வலிகளையும் அவலங்களையும் மட்டுமே சுமந்து வாழும் இப்பகுதி மக்களின் துயரைத் துடைக்கும் பணிக்கு யார் பொறுப்பு, அதிலும் குறிப்பாக பன்றிகளின் தொல்லை தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்தினரிடம் கேட்டால் நாம் அதனால் எழும் பிரச்சனைகள் தொடர்பிலும் அதன்மூலம் தொற்று வருத்தம் ஏதும் ஏற்படுகின்றதா என்பதனை மட்டுமே பார்வையிடமுடியும் என்கின்றனர். பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டால் ”எமது பொதுச் சுகாதார உத்தியோகத்தர் கண்காணிக்கின்றார். சுகாதார முறைமையும் வளர்ப்பு முறையும் அறிவுறுத்தப்படுகின்றது என்கின்றனர்”. ஆனால் இங்கே எந்த முறைமையும் பின்பற்றப்படுவதாகத் தெரியவே இல்லை என மக்கள் கூறுகின்றனர்.
நாம் எல்லையில் நெருக்கடிகளையும் வன விலங்குகளின் அச்சத்தையும் சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்பையும் தடுத்து உயிரை துச்சமாக எண்ணி வாழ்வதனாலேயே இன்றும் இப் பிரதேசம் சிங்களத்தால் முழுமையாக விழுங்கப்படவில்லை. இருப்பினும் எம்மை போன்று அடுத்த சந்ததியும் இவ்வாறு நெருக்கடியை சந்திக்க விரும்பாது விட்டால் இன்னும் 10 வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டமும் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டமாக மாறும். நாம் வாக்களிப்பவர்களும். வெறுமனே வாய் கிழிய கத்துபவர்களாகவே இருப்பர். எம்மை தூக்கிவிடுவதற்கு மட்டும் யாரும் இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
முல்லைத்தீவு மக்களின் துன்பங்களும் துயரங்களும் முடிவில்லா தொடர்கதை போன்றவை. கனடா உதயன் மூலம் அவற்றை வெளியுலகிற்கு கொண்டு வந்து ஓரளவேனும் அவர்களுக்கு விமோசனத்தைத் தேடித்தருவதே இந்த தொடரின் நோக்கமாக இருந்தது. எனினும் ஐந்து வாரங்கள் தொடர்ச்சியாகக் கட்டுரை வெளியாகி அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சில நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது அதனால் அந்த மக்களின் அவலங்கள் ஏராளம் என்றாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த தொடரை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 01
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 02
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 03
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 04
சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்: 05