-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.02:
மலேசியாவின் 15-ஆவது நாடாளுமன்றம் கண்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரே இந்திய அமைச்சராக வ.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான புதிய அமைச்சரவைப் பட்டியல், டிசம்பர் 2, முன்னிரவில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.
கடந்த பொதுத் தேர்தலின்போது, பிரதமர் பொறுப்பு வகிக்கிறவர் அமைச்சரவையில் எந்தப் பொறுப்பும் வகிக்கக்கூடாதென்று நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான அன்வார் அமைச்சரவையில் எந்தப் பொறுப்பும் வகிக்கமாட்டார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நிதி அமைச்சுக்கு பொறுப்பேற்றிருப்பது எவரும் எதிர்பாராதது.
28 அமைச்சர்களைக் கொண்ட இந்த அமைச்சரவை, நாட்டின் பொருளாதார மீட்சியையும் இனங்களுக்கு இடையேயான சமூக ஒருங்கிணைப்பையும் இலக்காகக் கொண்டுள்ளது.
நவம்பர் 19-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அணிகளின் பல்வேறு பேரம், மாற்றி மாற்றி அறிக்கை என இழுபறி நீடித்த நிலையில், தேர்தல் நடைபெற்று 5-ஆவது நாளில் மாட்சிமைக்குரிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா அன்வாரை பிரதமராக நியமித்தார்.
நவம்பர் 24-இல் நாட்டின் 10-ஆவது பிரதமராக பொறுப்பேற்ற அன்வார், தன்னுடைய தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் அமையும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் அன்வார் பிரதமராக பதவியேற்ற 9-ஆவது நாளில் இன்று புதிய அமைச்சரவைப் பட்டியலை அறிவித்தார்.
மலேசிய வரலாற்றில் முதல் முறையாக, தேசிய முன்னணியின் அம்னோ தலைவரான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி, சரவாக் மாநிலக் கட்சிக் கூட்டணி சார்பில் டத்தோஸ்ரீ ஃபடில்லா ஆகிய இருவரும் துணைப் பிரதமர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நம்பிக்கைக் கூட்டணியின் ஜனநாயக செயல் கட்சி(ஜசெக)யைச் சேர்ந்த வ.சிவக்குமார் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசிய அரசியலில் சிவக்குமாருக்கு குறிப்பிடத்தக்க இடம் இண்டு. ஒரு மாநில சட்டமன்றத்தில் சபாநாயகராக பொறுப்பு வகித்த முதல் இந்தியர் என்ற பெருமை சிவக்குமாருக்கு உண்டு.
2018 முதல் பேராக் மாநிலம், பத்து காஜா நாடாளுமனறத் தொகுதியில் இருந்து தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும் இவர், 2018 பொதுத் தேர்தலின்போது பேராக் மாநில சட்டமன்றத்திற்கும் தேர்வானார். துரோனாக் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிவக்குமார், அதே ஆண்டில் மக்கள் கூட்டணி சார்பில் மாநில சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டில், அந்த மாநில ஆட்சியில் கட்சிதாவிகளால் பெரும் சிக்கல் உருவானது. அரசியல் நெருக்கடி முற்றிய 2009 மார்ச் மாதத்தில், சட்டமன்றத்தினுள் நுழைய முடியாத நிலையில், சட்டமன்ற வளாக வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு மரத்தடியின்கீழ் சட்டமன்றத்தைக் கூட்டிய வரலாறு சிவக்குமாருக்கு உண்டு.
ஜசெக-வில் துணைப் பொதுச் செயலராக பொறுப்பு வகிக்கும் சிவக்குமார், சமூக அக்கறையும் ஜனநாயகப் பண்பும் நிறைந்தவர்.
மலேசிய மத்திய அரசில் மனித வள அமைச்சர் பொறுப்பு, சிவக்குமாருக்கு பிறந்த நாள் பரிசாக வாய்த்துள்ளது. 1970 டிசம்பர் 5-ஆம் நாள் எம்.வரதராஜு-எஸ்.கருணாகரி இணையருக்குப் பிறந்த இவர், தான் பிறந்த நாளான டிசம்பர் 5-இல் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
பன்னாட்டு இணைய ஊடகமான கனடிய உதயன் சார்பில் சிவக்குமாருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.