தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியம்(IFTF-Canada) அனைத்துலக மருத்துவ நல அமைப்பு(IMHO-USA) இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK)எனும் அமைப்புக்களினால் தென்மராட்சி கல்விவலயத்தில் திறன் பலகைகளினூடான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வலயக் கல்விப்பணிப்பாளரின் கோரிக்கைக்கமைவாக இவ்வமைப்புக்களால் 10 பாடசாலைகளுக்கான திறன்பலகைகள்,குறும்தூர ஊடக எறியற் கருவிகள், மடிக்கணினிகள், ஆசிரியர்களுக்கான விரலிகள் வழங்கப்பட்டது மட்டுமன்றி 40 இற்கும் மேற்பட்ட மேற்குறித்த பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விப்புலம் சார்ந்த இவ்வலய உத்தியோகத்தர்கள் அனைவருக்குமான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி அணியினரென இரு குழுக்களாக்கப்பட்டு ஈதக்சலாவ வளவார் குழாத்தினால் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சியாக திட்டமிடப்பட்டு இரு நாள் பயிற்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலைகளில் திறன்பலகை மூலம் கற்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.மூன்றாம் நாள் பயிற்சியில் இணையவழி பயன்பாடு மற்றும் மாணவரின் சிந்தனைக் கிளரலினூடான சிறந்த செயலூக்க கற்பித்தல் முறைகள் விளக்கப்படவுள்ளன.
இவற்றை வலுப்படுத்து முகமாக கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை மற்றும் எழுதுமட்டுவாழ் கணேசா வித்தியாசாலையில் கல்வி பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. இ.வரதீஸ்வரன், வலயக்கல்வி பணிப்பாளர் திரு.த. கிருபாகரன்,பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.மு. ஜெகதாஸ்,உதவிக்கல்வி பணிப்பாளர்கள்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் IMHO-USA அமைப்பின் வதிவிட பணிப்பாளருமாகிய திரு.சு.கிருஷ்ணகுமார் ஆகியோரின் பிரசின்னத்தில் திறன் வகுப்பறைகள் உத்தியோக பூர்வமாக சென்ற வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலைதோறும்
திறன்பலகை செயற்பாடுகளை மதிப்பிட்டு அறிக்கை சமர்ப்பிக்கும் பணி இவ்வலயத்தின் தகவல் தொழில்நுட்ப ஆசிரிய ஆலோசகர் திருமதி.உ.சிவநங்கை அவர்களிடம் வலயக்கல்வி பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ளது.பாடசாலைகளுக்கும் தமது அன்றாட செயற்பாடுகளை வெளிப்படுத்த வாட்ஸ்அப் குழுமமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பானதோர் விடயமாகும்.