மன்னார் நிருபர்
(04-12-2022)
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (ஐக்கிய இராச்சியத்தின்) நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் , கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் அருட்தந்தை நவரட்ணம் அடிகளார் தலைமையில் நேற்று சனிக்கிழமை (3) மாலை மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய மண்டபத்தில் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் கல்வி ரீதியில் ஊக்குவிப்பு தேவைப்படும் 51 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி உதவி வருடம் தோறும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் வழங்கி வைக்கப்படும் நிலையில் 2023 ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு பெறும் மாணவர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவிலிய ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்கலாநிதி கிறிஸ்ரி ரூபன் பெர்னாண்டோ அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிறிஸ்தவ வாலிபர் முன்னணி (YMCA) அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.