யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அமெரிக்கா 9,300 தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன் FAO (Food and Agriculture Organization ) ஆல் வழங்கப்பட்டுள்ள இந்த உரமானது, முதற்கட்ட உதவி என்றும் அடுத்துவரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு விநியோகிக்கத் தேவையான யூரியா உரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
“அமெரிக்க மக்களால் வழங்கப்படும் இந்த உரமானது, இலங்கை விவசாயிகளுக்கு எதிர்வரும் மாதங்களில் எண்ணற்ற இலங்கை குடும்பங்களுக்கு உணவளிக்க உதவும்” என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங், கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற கையளிப்பு நிகழ்வில் தெரிவித்தார்.
“உரம் மாத்திரம் இலங்கையின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யாது என்பதை நான் அறிவேன், ஆனால் இந்தச் சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டின் ஒரு அம்சமே இந்த உதவியாகும். மொத்தத்தில், கடந்த ஆண்டில் சிறு வணிகங்களுக்கான புதிய உதவி மற்றும் கூடுதல் கடன்களில் $240 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அறிவித்துள்ளோம் – நாங்கள் அதைத் தொடர்வோம். இன்றைய உரம் போன்ற உதவிகள், இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தையும் உண்மையான அர்ப்பணிப்பையும் காட்டுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் உணவு நெருக்கடியைத் தவிர்க்கவும் அத்தியாவசிய உரங்களை வாங்குவதற்கு USAID மூலம் அமெரிக்கா $46 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது – அதில் ஒரு பகுதி இன்று வந்துள்ளது. இந்த நிதியுதவியானது கடந்த இரண்டு விவசாய பருவங்களில் குறைந்த விளைச்சல் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளுக்கு பண உதவியை வழங்கும். USAID மற்றும் அதன் கூட்டாளிகள் தங்கள் வேலையை கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் தேவையான வழிமுறைகளை வைத்துள்ளனர், உதவி அதன் நோக்கம் பெறுபவர்களைச் சென்றடைவதையும், பாதிக்கப்படக்கூடிய விவசாய குடும்பங்களுக்கு பலன்களை வழங்குவதையும் உறுதி செய்கிறது.
FAO Sri Lanka, உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், உரப் பாவனைத் திறன் மற்றும் சுற்றுச்சூழலின் நிலையான பாவனைக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதன் மூலம் விவசாயத் துறையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளது என அமெரிக்கா தூதர் கூறினார்.
மேலும் விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்கள் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்வதில் அமெரிக்க அரசாங்கம் மற்றும் FAO அவர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.