ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை தொடங்கப் போகிறார் என்று தெரிகிறது. பெரும்பாலும் வரும் வாரம் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என்றும் தெரிகிறது. ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்ற படிமம் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. எனவே அவரை நம்பி ஏமாந்தோம் என்று இனிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் “நம்ப நட நம்பி நடவாதே” என்ற தமிழ் பழமொழிக்கு இணங்க தமிழ்த் தரப்பு ரணில் விக்ரமசிங்க மற்றும் மேற்குலகம் இந்தியா ஆகிய மூன்று தரப்புகளையும் நம்ப வைக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். வெளித் தரப்புகளையும் கொழும்பையும் நம்பவைப்பது என்பது,சரணடைவது அல்ல. யதார்த்தத்தை நோக்கி கனவுகளை வளைப்பதும் அல்ல. மாறாக கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்குரிய மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்துக் கொள்வதுதான்.
எனவே பேச்சுவார்த்தை மேசைக்குப் போக முன்பு,தமிழ்த் தரப்பு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்த் தரப்பு தன்னை எவ்வாறு தயார்படுத்துவது?
முதலாவதாக,பேச்சுவார்த்தைகள் ஒரு பொறியாக மாறுவதை தடுப்பதற்கு நிபுணத்துவ ஆலோசனையை பெறலாம். அதற்கு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கலாம். தமிழ் அரசியல் பெருமளவுக்கு சட்டவாளர்களின் அரசியலாகவே காணப்படுகிறது. சட்டம் ஒரு ஒழுக்கம்தான். சட்டம் தெரியும் என்பதற்காக எல்லாமும் தெரியும் என்று பொருள் அல்ல. பேச்சுவார்த்தை என்பது பல துறைகள் இணைந்த ஒரு கூட்டு ஒழுக்கம். அதனால் துறைசார் நிபுணர்களை ஒருங்கிணைத்து ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி, அந்த நிபுணர்குழுவின் ஆலோசனைப்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, தமிழ் மக்கள் ஒரு தரப்பாக தங்களுக்கு இடையே ஆகக்கூடிய பட்ச ஒன்றிணைவை ஏற்படுத்த வேண்டும்.ஒற்றையாட்சிக்கு எதிரான சமரசமற்ற ஒரு பொதுவான கோரிக்கையை முன்வைக்கும் விடயத்தில் தமிழ் கட்சிகள் தங்களுக்கு இடையே ஒன்றுபட வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விலகி நின்றால்,அதுவும் நன்மைக்கே. பேச்சுவார்த்தைகளின் போது ஏனைய கட்சிகள் கோரிக்கைகளை கைவிடும் ஒரு நிலைமை வந்தாலோ, அல்லது வெளி நிர்ப்பந்தங்களுக்கு சரணடையும் ஒரு நிலை வந்தாலோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்க்கும்,அம்பலப்படுத்தும். எனவே வெளியில் ஒரு கட்சி நிற்பதும் நல்லது. வெளியே நிற்கும் கட்சி கடுமையாக எதிர்க்கிறது, எனவே நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.அப்படி விட்டுக்கொடுத்தால் அது எங்களுடைய வாக்கு வங்கியை பாதிக்கும் என்று ஏனைய கட்சிகள்,அதைத் தமது பேர பலமாகப் பயன்படுத்தலாம்.எனவே,ஒரு கட்சி வெளியிலேயே நிற்குமானால் அதை எதிர்க்கணியமாகப் பார்க்கத் தேவையில்லை.
மூன்றாவதாக, பேச்சுவார்த்தைகளின்போது ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்த்தைக் கேட்க வேண்டும். அது மத்தியஸ்தமா அல்லது அனுசரணையா அல்லது வேறு எதுவுமா என்பதை அரசாங்கமும் தமிழ்த் தரப்பும் கலந்து பேசி தீர்மானிக்கலாம். ஆனால் ஒரு மூன்றாவது தரப்பின் கண்காணிப்பும் பிரசன்னமும் அவசியம். ஏனென்றால் இனப்பிரச்சினையின் வரலாறு தமிழ் மக்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் சிங்களத் தரப்போடு தமிழ்த் தரப்பு எழுதிக் கொண்ட உடன்படிக்கைகளில் ஒப்பீட்டளவில் நீடித்த காலம் நிலைத்திருந்த உடன்படிக்கைகள் இரண்டு. ஒன்று இந்தோ–ஸ்ரீலங்கா உடன்படிக்கை. இரண்டாவது ரணில்–பிரபாகரன் உடன்படிக்கை. இவ்விரண்டு உடன்படிக்கைகளின் போதும் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னம் இருந்தன. இந்திய இலங்கை உடன்படிக்கையின் போது அமைதிப்படை நாட்டுக்குள் இறங்கியது. ரணில் பிரபாகரன் உடன்படிக்கையை கண்காணிக்க ஸ்கன்டிநேவிய யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு இறக்கப்பட்டது. இந்த இரண்டையும் தவிர மூன்றாவதாக கூறக்கூடியது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட பொறுப்பு கூறலுக்கான 30/1 தீர்மானம். அது பொறுப்புகூறலுக்கு இலங்கை அரசாங்கத்தையும் பங்காளியாக்கியது. தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால் எங்கே பிசகியது என்றால், ஐநா ஒரு மூன்றாவது தரப்பாக முழுமையாக அங்கே செயல்படவில்லை என்பதில்தான். அதனால் அந்த உடன்படிக்கையை 2018இல் அந்த உடன்படிக்கையின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன காட்டிக் கொடுத்தார்.
மேற்கண்ட மூன்று உடன்படிக்கைகளிலும் ஏதோ ஒரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்திருக்கிறது. அதிலும் முதல் இரண்டு உடன்படிக்கைகளின் போதும் மூன்றாவது தரப்பின் மிகத் துலக்கமான பிரசன்னம் இருந்தது. எனவே மூன்றாவது தரப்பொன்றின் பிரசன்னம் இன்றி இலங்கைத்தீவில் பேச்சு வார்த்தைகள் நடக்கக்கூடாது. மூன்றாவது தரப்பு எது என்பதனை இரண்டு தரப்பும் கூடித் தீர்மானிக்கலாம். பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று ரணில் விக்ரமசிங்க அழைக்கத் தொடங்கியபோதே அவர் ஒரு விடயத்தை அதோடு சேர்த்து கூறுகிறார். என்னவென்றால் வெளித்தரப்பின் தலையீடு இன்றிப் பேசுவோம் என்று. அதைத் தமிழ்த் தரப்பு ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் போரில் வெற்றி பெறுவதற்கு அவர்களுக்கு வெளித்தரப்பு தேவைப்பட்டது. வெளித்தரப்பின் ஒத்துழைப்பின்றி அவர்கள் போரை வென்றிருக்கவே முடியாது.ஆனால் சமாதானத்துக்கு மட்டும் அவர்கள் வெளித்தரப்பு வேண்டாம் என்று கூறுகிறார்கள். இது ஒரு தந்திரம். இனப்பிரச்சினையை சர்வதேசமய நீக்கம் செய்யும் ஒரு தந்திரம்.
எல்லா இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் புவிசார் அரசியல் பிரச்சினைகள் தான். புவிசார் அரசியல் தலையீடுகள் இன்றி இனப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் அவ்வாறு தீர்க்கப்பட்ட பெரும்பாலான இனப்பிரச்சினைகளில் மூன்றாவது தரப்பின் தலையீடு இருந்திருக்கிறது. எனவே மூன்றாவது தரப்பின் பிரசன்னம் என்பது இங்கே ஒரு கட்டாயமான முன் நிபந்தனையாகும். அதை தமிழ்த் தரப்பு விட்டுக் கொடுக்கக் கூடாது.
அதிலும் இந்தியாவை அந்த மூன்றாவது தரப்புக்குள் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் அதற்குக் கீழ் வரும் முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், இந்தியா ஏற்கனவே இனப்பிரச்சினையில் தலையிட்டிருக்கிறது. ஏற்கனவே இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்கியிருக்கிறது. இரண்டாவது காரணம், இது இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் வரும் ஒரு நாடு. மூன்றாவது காரணம், இந்தியாவை மீறி நடக்கும் பேச்சுவார்த்தைகளில் ஒரு கட்டத்தில் இந்தியா குழப்பப்பார்க்கும். தன்னுடைய செல்வாக்கு மண்டலத்துக்குள் வெளிதரப்புகள் உள்நுழைவதை இந்தியா அசௌகரிகமாகவே உணரும். நாலாவது காரணம், இந்தியாவுக்கும் ரணிலுக்கும் இடையே இப்பொழுது காணப்படும் இடைவெளியை தமிழ்த் தரப்பு பயன்படுத்தலாம்.
அண்மை வாரங்களாக அந்த இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளில் ரணில் இறங்கி விட்டார். எனினும் தமிழ்த் தரப்பு இந்தியாவை உள்ளே கொண்டு வரவேண்டும் என்று கேட்பதன்மூலம் இந்தியாவுக்கும் ரணிலுக்கு இடையிலுள்ள இடைவெளியைக் கையாள முயற்சிக்கலாம். கடந்த ஆண்டு இந்தியா கூட்டமைப்பை டெல்லிக்கு வருமாறு கேட்டது.ஆனால் சம்பந்தர் பொருத்தமான, அறிவுப்பூர்வமான காரணங்களின்றி அதை நிராகரித்து விட்டார். இப்பொழுது இலங்கைத் தீவில் தமிழ்த் தரப்பும் இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை. சிங்களத் தரப்பும் இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை என்பதே உண்மை.
இந்தியா மீண்டும் கூட்டமைப்பை டெல்லிக்கு அழைக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது. கூட்டமைப்பாக அழைப்பு விடுத்தால் அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடும். தமிழ்த் தரப்பு தானாக முன்வந்து இந்தியாவை மத்தியஸ்தராக கேட்கலாம். அதன் மூலம் கொழும்புக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளியை எப்படிக் கையாளலாம் என்று யோசிக்கலாம். எனவே ஒரு மூன்றாவது தரப்பு வேண்டும். அதில் இந்தியா கட்டாயமாக உள்வாங்கப்பட வேண்டும். இது மூன்றாவது.
நாலாவது,பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பொழுது பேச்சுவார்த்தைக்கான நல்லிணக்கச் சூழலை ஏற்படுத்தும் விதத்தில் உடனடியாக செய்யக்கூடிய விடயங்களை,குறிப்பாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியான ரணில் தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய விடயங்களை செய்து முடிக்குமாறு கேட்கலாம். தமிழ்த் தரப்பு சமாதானத்தில் நம்பிக்கை கொள்வதற்கு அது மிக அவசியம்.
இந்த இடத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பலஸ்தீனர்கள் கூறும் ஒரு விடயத்தை தமிழ்த் தரப்பு தன் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். “நாங்கள் பீசாவை எப்படிப் பங்கிடுவது என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களோ அதாவது யூதர்கள்,பீசாவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்”. என்று.இது இலங்கைக்கும் பொருந்தும். பேச்சுவார்த்தைகள் நடக்கும் பொழுது நில அபகரிப்பு கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.நல்லெண்ணச் சமிக்கையாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்,நிவாரணம் கிடைக்க வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமல் செய்யப்பட வேண்டும்…..போன்ற விடயங்களை தமிழ்த் தரப்பு வலியுறுத்தலாம்.
இவ்வாறு பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை தமிழ்த் தரப்பு ஏற்றுக் கொள்ளலாம். பேசிப் பார்க்கலாம். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றது.அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, அதை ஒரு பரிசோதனையாக எடுத்துக் கொண்டு, தமிழ்த் தரப்பு அதில் ஈடுபடலாம்.அதன் பொருள் அதில் நம்பிக்கைகளை முதலீடு செய்யலாம் என்பதல்ல. மாறாக அரசாங்கத்தை அம்பலப்படுத்துவது. சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்துவது.இந்த அடிப்படையில் அதை ஒரு பரிசோதனையாக முன்னெடுக்கலாம். மக்களை நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொருத்தமான நிபுணத்துவ ஆலோசனையோடு ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும்பொழுது அதில் ஏமாற்றத்துக்கு இடமிருக்காது.