( கனடா உதயனின் சிறப்பு தொடர் -பாகம் -01)
யாழ்ப்பாணம் செய்தியாளர் நடராசா லோகதயாளன்
ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தன்னைக் கூறிக்கொள்கிறது.
ஆம் 10 வயது மாணவர்கள் எவ்வித வசதியுமின்றி அன்றாடம் 12 கி.மீ தூரம் நடந்து சென்று கல்வி கற்பது அதிசயம் தானே?
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களை திருப்பியளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவாத ஒரு அரசு செயல்படுவதும் ஆசியாவின் அதிசயம் தானே?
தாய்நாட்டை நம்பி தமிழகத்தைவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்கள் நிர்க்கதியாக கைவிடப்பட்டுள்ளதும் ஆசியாவின் அதிசயம் தானே?
அதிசயங்களை அள்ளிவீசி மக்களை ஆச்சரியப்பட வைப்பதற்கு இலங்கைக்கு நிகர் யாருமில்லை என்பதில் யாரும் மாறுபட முடியாது தானே?
வெலி ஓயா ஒருபுறமும் பொபஸ்வேவா என அரசு உருவாக்கிய சிங்கள குடியேற்றங்களின் நடுவே எந்த ஒரு அடிப்படை வசிதிகளும் அற்றுத் தவிக்கும் 47 குடும்பங்கள் மட்டுமே வாழும் காஞ்சிரமோட்டை என்ற தமிழ்க் கிராமத்தின் அவலத்தைப் போக்க எவருமே முன் வரவில்லை என அப் பகுதி மக்கள் கண்ணீர் கதையாக கூறியதனை அடுத்து அந்த அதிசயத்தை கனடா உதயனுக்காக பிரத்தியேகமாக எடுத்து வரும் நோக்கில் கடும் மழை, சேர் சகதிகளிற்கு இடையே ஓர் பயணத்தை மேற்கொண்டேன்.
அந்த கிராமம் தொடர்பில் பூரண விளக்கம் கொண்டவரின் உதவியை நாடி அந்த இடத்தின் வரலாற்றையும் கேட்டறிந்தவாறு பயணித்தோம்.
இப்பகுதியிலுள்ள நாவல்பண்ணை பாடசாலைக்காக 107 ஆண்டுகளுக்கு முன்னர் (1915) 23 தனியாரிடம் காணி வேண்டி பாடசாலை அமைத்த உறுதி அந்த மக்களிடம் இன்றும் சான்றாக இருப்பது ஐயத்திற்கு இடமினிறி அதற்கு முன்பே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தமை நிரூபணமாகிறது. எனினும், இலங்கையில் நிலவிய போரும் அரசின் திட்டமிட்ட வலிந்த சிங்கள குடியேற்றங்களும் இக்கிராமத்தையும் சீரழித்தன.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவில் எல்லையோரம் உள்ள காஞ்சிரமோட்டையில் தற்போது வாழும் 47 குடும்பங்களிற்குகூட போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் அந்த மக்கள் மீண்டும் தமது கிராமத்தை கைவிட்டு வெளியேறும் மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மருதோடைக் கிராம சேவகர் பிரிவிலேயே இந்த காஞ்சிரமோட்டைக் கிராமம் உள்ளது.
வவுனியா நகரிலிஇருந்து 75 கிலோ மீற்றர் தொலைவிலும் புளியங்குளம் சந்தியிலிருந்து 27 கிலோ மீற்றர் தொலைவிலுமாக உள்ள கிராமமாகவுள்ள இந்த காஞ்சரமோட்டை விடியலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இங்கு வாழ்ந்த மக்கள் 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தின்போதும், 1990 மற்றும் 1995 ஆகிய காலங்களில் பகுதி பகுதியாக இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு பலர் வெளியேறியபோதும் 1994 ஆம் ஆண்டுக் காலப் பதிவுகளின்படி இங்கே 367 குடும்பங்கள் வாழ்ந்துள்ளனர்.
இவர்களில் அநேகர் அருகே இருந்த நாவலர் பண்ணையில் பணியாளர்களாகவும் வயல் விதைப்புகளிலும் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை முன்னெடுத்தனர்.
இறுதியாக 1995 ஆம் ஆண்டு அனைத்து மக்களும் இடம்பெயர்ந்த நிலையில் பல நூறுபேர் தமிழ்நாட்டிற்கும் சென்றனர். அவ்வாறு சென்ற மக்கள் போரிற்குப் பின்பு அனைத்தும் வழமைக்குத் திரும்பிவிட்டன, தாயகம் திரும்புங்கள் என்று விடுக்கப்பட்ட அழைப்புகளை நம்பி இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 47 குடும்பங்கள் 2016இல் தாயகம் திரும்பியுள்ளனர்.
தாயகம் திரும்பிய குடும்பங்களை அவர்களது சொந்தக் கிராமத்தில் குடியேற விடாது வனவளத் திணைக்களம் தடையாக இருந்தமையால் நீண்ட இழுபறிகளின் மத்தியில் அப்போதை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரது முயற்சியினால் 2017ஆம் ஆண்டு தமது சொந்த கிராமத்திற்கு திரும்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படி குடியேறியவர்களை நிம்மதியாக வாழ இன்று வரை வனவளத் திணைக்களம் விடவில்லை. மருதோடையில் இருந்து காஞ்சிரமோட்டை வரையான 6 கிலோ மீற்றர் வீதி இற்றைவரை மண் வீதியாகவே காட்சியளிக்கின்றது. சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் செம்மண் சாலையிலேயே இங்கே வாழும் பள்ளிச் சிறுவர்கள் தினமும் 12 கிலோ மீற்றர் தூரம் கால்நடையாகப் பயணித்தே கற்கின்றனர் என்கின்ற அதிர்ச்சியான தகவல் வெளி உலகிற்குத் தெரியாது. அத்தி பூத்தாற் போல் எப்போதாவது அவர்களிற்குச் சைக்கிளில் செல்லும் வாய்ப்பு கிட்டும்.
பத்து வயதே ஆன தரம் 5 வரை கற்கும் மாணவர்கள் மருதோடை அ.த.க.பாடசாலையிலும் அதற்கு மேல் ஒலுமடு மகா வித்தியாலயமும் செல்ல வேண்டும். இவ்வாறு கல்வி கற்கும் 17 மாணவர்கள் காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டாலே 7.30 மணிக்கு பாடசாலைக்குச் செல்ல முடியும். பின்பு மாலை 3 மணிக்கு பிறகே வீடு திரும்புவர் அதாவது ஒரு நாள் கற்றலிற்காக சுமார் 10 மணி நேரத்தை அவர்கள் செலவிட வேண்டியுள்ளது. பாடசாலை செல்லும் பிள்ளையையுடைய தகப்பன் என்ற வகையில் இது எனக்கு போர்க்காலச் சூழலையே தற்போதும் நினைவுபடுத்துகின்றது.
மாணவர்கள் தனித்துச் சென்று வரும் பாதையைப் பார்வையிட எண்ணி காலை 8.30 மணிக்கு அங்கு சென்றோம். அவ்வாறு செல்வதற்கு சற்று முன்னரே அப்பாதையினால் யானை சென்ற தடயமாக அதன் லத்தி (சாணம்) ஆவி பறக்க காணப்பட்டது. என்னுடன் வந்தவருக்கு அவரின் ஆவி பறக்கும் அளவிற்கு பயம் தொற்றிக்கொண்டது.
ஆனால், தமிழர்களுக்கே உரிய துணிச்சலுடன் இந்தப் பாதையின் ஊடாகவே 10 வயதுச் சிறுமி சர்வ சாதாரணமாக கால்நடையாகப் பயணித்து வந்ததுகொண்டிரு்தமை எம்மை வியப்பில் ஆழ்த்தியது. அவ்வாறு பயணிக்கும் வீதி 10 அடி அகலம்கூட இல்லை. அதன் இரு புறமும் பெரும் பற்றைகள் நிறைந்து காணப்படுவதனால் பகல் வேளையில் யானை ஒன்று நின்றால்கூட அடையாளம் காணமுடியாது. அவ்வாறான சூழலில் இரவு ஒரு அவலம் எனில் எவ்வாறு பயணிக்க முடியும் என்ற ஐயத்துடன் கிராமத்திற்குள் பிரவேசித்தோம்.
அங்கு மேலும் அதிசயங்கள் காத்திருந்தன.
இம்மக்களின் ஒரேயொரு வாழ்வாதாரமாக விவசாயம் மட்டுமே காணப்படுகின்றது. அதை அன்றாடம் வனவிலங்குகளின் அச்சத்திற்கு இடையிலேயே அவர்கள் முன்னெடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் அருகே காட்டுபூவரசங்கும், காஞ்சிரமோட்டை குளங்களின் கீழ் 600 ஏக்கர் வயல் நிலங்கள் உள்ளன. ஆனாலும் இந்த 47 குடும்பங்களிற்கும் சொந்தமாக வயல் நிலம் ஏதும் கிடையாது. ஏனையவர்களின் வயலிற்கு தினக்கூலியாகச் செல்ல வேண்டும் அல்லது அருகே 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு இவர்களிற்கு வழங்கப்பட்டு, இன்று தமது நிலம் என வனவளத் திணைக்களம் உரிமை கோரி சர்ச்சையில் உள்ள வயலில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வாழும் குடும்பங்களின் பயன்பாட்டிற்காக 4 கிணறுகள் மட்டுமே உள்ளன.
தற்போது இங்கு வாழும் 47 குடும்பங்களில் 5 குடும்பங்களின் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவற்றில் 25% பணிகள்கூட முடியாத நிலையிலேயே அந்த அடர்ந்த வனப்பகுதியில் உயிராபத்தில் குடியிருக்கின்றனர். அப்படி குடியிருக்கும் மக்களின் வாழ்வு அந்த மக்களிற்கு எவ்வளவு முக்கியமோ அதனைவிட ஒட்டு மொத்தமான தமிழ் இனத்திற்கே இன்று முக்கியத்துவம்பெற்று நிற்கின்றது.
எவ்வாறு அவர்களின் இருப்பு இனத்தின் இருப்பை காக்கின்றது?
காஞ்சிரமோட்டைக்கு அருகில் ஒரு திசையில் வெலிஓயா (மணலாறு) 2 கிலோ மீற்றர் தூரத்திலும் மறுபுறத்தில் போகஸ்வெ(அதன் உண்மை பெயர் அரசகுளம்) சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்திலும் உள்ள நிலையில் அக்க்கிராம்ம மண்வளைப்பு ஆபத்தை எதிர்நோக்குகிறது என்பது மேலும் அதிர்ச்சியளித்தது.
இனங்களுக்கிடையேயான எல்லையில் இருக்கும் இந்த மக்கள் குடியிருப்புக்கள் இன்றி, காவல் கொட்டகைகளை ஒத்த வடிவத்தில் எந்த ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இன்றி தமது காணியின் எல்லையைக்கூட அடையாளமிட முடியாதவர்களாகவே உள்ளனர்.
நான்கு பக்கமும் யானை, கரடி, பாம்பு, காட்டுப்பன்றி ஆகியவற்றின் அச்சத்திற்கிடையே வனப்பகுதியில் வாழும் இந்த மக்களிற்கு மின்சார இணைப்பைக்கூட வழங்க விடாது மின்சார சபை சுமார் ஒரு வருடமாக தடை போட்டு அந்த மக்களை இருட்டில் வைத்திருந்தனர்.
மருதோடையில் இருந்து காஞ்சிரமோட்டைக்கு செல்லும் வீதியில் சில மரங்கள் 25 வருடமாக பெரிய அளவில் வளர்ந்து நின்றபோது அவை வனவளத் திணைக்களத்திற்கு உரியவை எனவும் அவற்றை தறிக்க முடியாது என வனவளத் திணைக்களமும் அவற்றை அகற்றினாலே அங்கே மின்கம்பங்களை நாட்ட முடியும் என இலங்கை மின்சார சபையும் மாறி மாறி காரணங்களைக் காட்டி காலத்தை கடத்தும் அவலமும் நிலவியது.
இதன்போது 15ற்கும் மேற்பட்ட பாரிய மரங்கள் பாதையில் வருவதனால் அகற்றவே முடியாது என வனவளத் திணைக்களம் அடம்பிடித்தபோது இறுதியில் இ.மி.சபை நீண்ட ஆய்வின் பின்னர் 6 மரங்களை தறித்து உதவினாலே தம்மால் மின் இணைப்பை வழங்க முடியும் என்றனர். இதையாவது மேற்கொண்டு எவ்வாறானாலும் மின்சாரத்தைப் பெற்று வழங்க `நல்லாட்சி` எனச் சொல்லப்பட்ட ஆட்சியில் அவர்களிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் ஆகியோருடன் பிரதேச செயலாளர் பரந்தாமன் முயன்றனர். இருப்பினும் `நல்லாட்சி` அரசிற்கு ஆதரவளித்த கூட்டமைப்பிற்கு இங்கு மின்வசதியை ஏற்படுத்திக் கொடுக்க ஓராண்டானது என்று விமர்சனம் உள்ளது. அதற்கிடையே இக்கிராமத்திற்கு ஓரளவேனும் ஒளியைப் பெற்றுத்தர சூரிய மின்கலத்தின் உதவியுடனான வசதியை கனடாவாழ் நண்பர்கள் உதவியுடன் ப.சத்தியலிங்கம் ஏற்படுத்திக்கொடுத்தார்.
ஆனாலும், அவை போதுமானவையாக இருக்கவில்லை. மேலும் அந்த சூரியசக்தி மின்வசதியும் கூட எந்த வீட்டிற்கும் கிட்டாது பாதைகளிற்கே ஒளியூட்டியது என்பதும் அதிசயம் தானே?
(அதிசயங்கள் தொடரும் )