கதிரோட்டம் 09-12-2022 வெள்ளிக்கிழமை
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான கால நிலையைக் காரணம் காட்டி மக்களைப் அச்சமடையச் செய்யும் ‘வேலை’யை ஊடகங்கள் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளுத. எனினும். இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளில் மாசடைந்த காற்று வீசுவதாலும் குளிரும் காற்றும் மழையும் சேர்ந்து பூமியைத் தாக்குவதால் போதிய வசதிகளற்ற வீடுகளில் வாழ்ந்து வருபவர்களும் வீடற்றவர்களாக வீதியோரங்களில் குடிசைகள் அமைத்து வாழ்பவர்களும் எவ்வாறான துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதை நாம் விபரிக்கத் தேவையில்லை.
நாம் முன்னர் ஒரு இடத்தில் குறிப்பிட்டது போன்று அரசியலில் எதிரிகளாக இருப்பவர்கள் தாங்கள் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற மறைமுகமான உடன்படிக்கைகளின் படியே தங்கள் அரசியல் நகர்வைச் செய்கின்றார்கள். இதனால் பாதிப்புக்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அரசியல்வாதிகளும் அரசியல் பதவிகளில் உள்ளவர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். சட்டங்களில் எழுதி வைத்தது போன்று அரசியல் இருப்பு என்பது எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றி விடும்.
உதாரணத்திற்கு. மோசமான ஆட்சியை நடத்திய கோட்டாபாயவை நாட்டை விட்டு விரட்டிய போராட்டக்காரர்ள் அடுத்த நகர்விற்காக காத்திருக்கையில் ஏற்கெனவே அரசியல்வாதிகளால் ‘எழுதி வைக்கப்பட்டிருந்த சட்டங்கள்’ ரணில் என்னும் மக்கள் ஆதரவு இல்லாத ஒரு ‘தோல்வியாளரை’ ஜனாதிபதியாக்கியது. தொடர்ந்து, நாட்டை விட்டு தப்பிச் சென்ற ‘தலைவர்’ திரும்பிச் சென்றபோது. அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வசதியான வாழ்க்கை என்பன வழங்கப்பட்டுள்ளன. இவைதான். ஆரசியல்வாதிகள் தங்களுக்கென்றே எழுதி வைத்துள்ள சட்டங்கள். இதன் பலனை அவர்கள் தங்கள் இறுதிக் காலம் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதே நிதர்சனம்.
எமது வாராந்த கட்டுரையாளர் வி.தேவராஜ் அவர்கள் இவ்வாரம் எழுதியுள்ள கட்டுரையானது இலங்கையில் ஆட்சி பீடத்தில் மக்கள் ஆதரவு எதுவுமின்றி அமர்ந்திருக்கும் ஜனாதிபதி என்ற ஆட்சியாளர் அங்கு மக்களை எச்சரிக்கும் விதம் மற்றும் அரசின் அடக்குமுறைகளை ஆயுதங்கள் ஏந்திய இராணுவம் பொலிஸ் போன்ற அரச பயங்கரவாதப் படைகளை கொண்டு அடக்க முனைவதையும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
தற்போது அரசின் அடக்குமுறைகளையும் அநியாயங்களையும் எதிர்த்து போராடத் துடிக்கும் உண்மையான போராளிகளை பயங்கரவாதம் என்ற பேரில் தண்டிக்க முயல்கின்றதை எமது கட்டுரையாளர் விபரமாக எழுதியுள்ளார். ரணில் என்னும் நரிக்குணம் கொண்ட ஒரு பொய்யான தலைவரை மக்களுக்கு இனங்காட்டும் வகையில் தேவராஜ் அவர்களின் எழுத்துக்களும் போர்க்குணம் கொண்டவையாகவே காணப்படுகின்றன.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட உடனேயே. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களின் நலன்களைக் கவனிக்க ஒரு குழுவை நியமித்தார்! ஆனால் தற்போது ஐ.தே.கவும் மொட்டுக் கட்சியினரும் இணைந்து;போராட்டக்காரர்களை நசுக்குகின்றனர். இது என்ன நியாயம் என்று கேள்வி கேட்கின்றார்.
ஆனால் இவ்வாறான நியாயங்கள் நிறைந்த கேள்விகளை எழுப்பும் தமி;ழ். சிங்கள மற்றும் ஆங்கில மொழி பத்திரிகையாளர்கள் இலங்கையில் அனைத்துப் பகுதியிலும் குறி வைக்கப்படுகின்றார்கள். மக்களின் குரலா ஒலிக்கும் அவரது குரல்கள் மக்களை அனைத்து கஸ்டங்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கம் கொண்டவை. ஆனால் பிரிந்து நிற்பது போன்று மக்களுக்கு காட்டிவிட்டு ஆட்சி என்னும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்பவர்கள் உண்மையில் ‘தேசத்திற்கான தலைவர்கள் அல்ல’ என்பதை அனைவரும் அவர்களுக்கு புரிய வைக்க முயல வேண்டும்