(மன்னார் நிருபர்)
(8-12-2022)
மடு பொலிஸ் பிரிவில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு ,அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்று (8) வியாழக்கிழமை (8) மீட்கப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-மடு பொலிஸ் பிரிவில் உள்ள இரணையிலுப்பைக்குளம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
-முறைப்பாட்டை அடுத்து மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மடு பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை(8) திருடப்பட்ட சுமார் 10 லட்சம் பெறுமதியான பொருட்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணையின் பின் சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.