(மன்னார் நிருபர்)
(10-12-2022)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மதியம் (10) துவிச்சக்கர வண்டிகள் மற்றும் வாகன ஊர்தி பவனிகள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை சுற்றி துண்டுப் பிரசுர விநியோகங்கள் உடன் கவனயீர்ப்புப் பேரணி யாக வலம் வந்தது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வானது இன்று (10) காலை 10 மணியளவில் மன்னார் வலயக்கல்வி பணிமனை முன்பு ஆரம்பித்து மன்னார் நகரத்தை சுற்றி, பின் பிரதான வீதியூடாக முருங்கன், நானாட்டான் பஸ்தரிப்பு நிலையங்களை சென்றடைந்து வங்காலை ஊடாக மீண்டும் மன்னாரை வந்தடைந்தது.
இதன்போது ‘எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்’ ‘பேச்சு சுதந்திரம் கல்விக்கான உரிமை, மற்றும் சமூக பாதுகாப்புக்கான உரிமை’ ‘உலகில் உள்ள யாவருக்கும் உரிமைகள் சமமே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மனித உரிமைகள் தொடர்பாக எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.