வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- பேச்சு வார்த்தைகளின் பெறுபேறுகள் தமிழ்த் தலைமைகளின் எதிர்கால அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும்!
‘ஒரு புதிய ஆணையை உடனடியாக வழங்க வேண்டும்… 74 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் ஆட்சியைநிறுவுவதற்கானபோராட்டத்தைநாங்கள்தொடங்குகிறோம்‘ என்று தென்னிலங்கை தனது அடுத்த கட்ட போராட்டத்தை பிரகடனப்படுத்தி நிற்கின்றது. இது இன்னொரு ‘அரகலயாக்களின் புரட்சிக்கான‘ அரைகூவலாக உள்ளது.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கசிங்க அவர்கள் இந்த அரைகூவலுக்கு மத்தியில்
- அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பது
- 7-8 % பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தல்
- FDI களை $3 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிப்பது
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்திற்கும் மேலாக சர்வதேச வர்த்தகத்தில் அதிகரிப்பு செய்தல்;
- 2023 முதல் 2032 வரையிலான புதிய ஏற்றுமதியிலிருந்து
- $3 பில்லியன் வருடாந்திர வளர்ச்சியை நோக்கி நகர்தல்;
- அடுத்த பத்து ஆண்டுகளில் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்;குதல் என வரவு செலவுத் திட்டத்தின்மூலம் அடைய உள்ள இலக்காக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நிர்ணயித்துள்ளார்.;
ஜனாதிபதியின் பொருளாதார இலக்கு நோக்கிய பயணத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் இடையில் ஒரு பொதுவான சமூக உடன்பாடு ஏற்படுத்தப்படாவிட்டால் இந்த லட்சிய இலக்குகளை அடைய முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் மக்கள் ஆணை இல்லாத ஒரு ஜனாதிபதியின் அழைப்புக்கு ஒட்டுமொத்த தேசமும் எழுச்சிபெற்று அவரின் பின்னால் அணிவகுத்து நிற்குமா என்பது கேள்விக்குறியே.?
- தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
மேற் கூறிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்துசாதகமான பதில் கிடைத்துள்ளது. பேச்சுவார்த்தை 13ஆம் தகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடலில் கெவிந்து குமாரதுங்க தவிர்ந்த ஏனையோர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என இணக்கம் தெரிவித்துள்ளனர். அது ஒரு பெரிய விஷயம்என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
- 35 ஆண்டுகளுக்குப் பிறகும் 13ஐ நடைமுறைப்படுத்த முடியவில்லை.
‘1987ல் தான் 13வது அரசியலமைப்பு திருத்தம் கையெழுத்தானது. இப்போது 2022ஆம் ஆண்டிலும் 13ஐ அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். 35 ஆண்டுகளுக்குப் பிறகும் இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதுதான் இந்த நாட்டின் உண்மை நிலை.
இதற்கு தீர்வு காண்போம் என்று பொய் கூறினால் இம்முறையும் வடபகுதி இளைஞர்கள் கடந்த காலங்களை போன்று போராட்டத்திற்கு செல்வார்கள். இது ஆயுதப் போராட்டம் அல்ல அமைதிப் போராட்டம். ஆனால் அது வடக்கின் அரசியலை முற்றாக தலைகீழாக மாற்றிவிடும். அப்படி நடந்தால்இ புதிய குழுவுடன் இந்தப் பிரச்னை குறித்து பேச வேண்டியிருக்கும். அதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் கண்டிப்பாக பேசித் தீர்க்க வேண்டும்‘ என்றார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் கடந்த காலத்தைப் போன்று கடினமான முயற்சியாக மாறாமல் இருப்பதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்திக்கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி இந்த மூன்று தசாப்த கால பிரச்சினையில் எந்தளவுக்கு உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதும் முக்கியமான கேள்வியாகும்.
அதேவேளையில்; ஜனாதிபதி தங்கியிருப்பது மக்கள் ஆணையில் அன்றி பொதுஜன பெரமுனவின் நாடாளு மன்றத்தின் எண்ணிக்கையின் பலத்தினாலாகும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டதும் மொட்டுவின் பலத்தினாலாகும். இந்தப் பலம் தனக்குக் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கு உண்டு. இதனை வைத்தே அவர் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
அதாவது அடுத்த சுதந்திர தினத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறியிருப்பது,வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டதை அரசியல் தீர்விலும் பிரதிபலிக்க முடியும் என்ற நம்பிக்கையிலாகும்.
. தற்போதைய நெருக்கடியைக் கையாள்வதற்கு நாட்டை ஒன்றிணைப்பதற்கு அரசியல் தீர்வே அடிப்படையான ஒன்றாகத் தோன்றினால்,நாடு ஒன்றுபட்டால் ஒழிய நாட்டுக்கு எதிர்காலமோ விமோசனமோ இருக்காது என்பதை நாடும் மக்களும் மாத்திரமல்லகுறிப்பாக ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் உணர்ந்தாக வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு எதிர்காலமோ ,மீட்சியோ இருக்காது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி கூற வேண்டும். இனவிவகாரத்தில் தென்னிலங்கை கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவித்தாக வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளன. ஏதோ ஒருவகையில் அடுத்தடுத்து நாடு தேர்தலை எதிர் நோக்கியுள்ள நிலையில் மாத்திரமல்ல சர்வதேசத்தின் அழுத்தம் இனவிவகாரத்திற்கு தீர்வு கண்டாலே நாட்டைத் தூக்கி நிமிர்த்த முடியும் என்ற நிலை தென்னிலங்கை சக்திகளை இனவிவகாரத் தீர்வு நோக்கிய வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உற்பட தமிழ்த் தலைமைகளும் கட்சிகளும் தடம் மாறாமல் அதேவேளையில் தடுமாராமலும் இருப்பார்களாயின் ஒன்றில் தமிழர் விவகாரத்தில் தீர்க்கமான முடிவினை எட்டலாம் அல்லது தென்னிலங்கை அரசியல் சக்திகளை தென்னிலங்கை மக்களின் முன்பும் சர்வதேச சமூகத்தின் முன்பும் மீண்டும் ஒரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியதாக இருக்கும்.
இலங்கை சமூகத்தின் பிளவுபட்ட தன்மை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முன்மொழியப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காணப்பட்டது.
- 1957 இல் பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தம்.அது கிழித்தெறியப்பட்டது
- 1965 இல் டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
- 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் ஓரளவு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது.
- சந்திரிகா குமாரதுங்கவின் 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் எரிக்கப்பட்டது.
- மகிந்த ராஜபக்சவின் காலத்தில் 2010 ஆம் ஆண்டு சர்வகட்சிப்பிரதிநிதிகள்குழுமுன்மொழிவுகள்அரசாங்கத்தால் கூட பரிசீலிக்கப்படவில்லை.
- 2015 ஆம் ஆண்டு சிறீசேனா–விக்கிரமசிங்க அரசாங்கத்தால் பல முன்மொழிவுகள் கொண்டு வரப்பட்டன.
- இலங்கை சமூகத்தின் பிளவுபட்ட தன்மை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முன்மொழியப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காணப்பட்டது.
மேற் குறிப்பிட்ட விடயங்கள் அணைத்தும் வரலாறு. இவைகளுக்கும் அப்பால் பேச்சுவார்த்தை என காலம் கடத்தப்பட்ட தோல்வி வரலாறுகள் ஏராளம்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன விவகாரத்துக்கான தீர்வுகுறித்த பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளார்.
- மஹிந்த ராஜபக்ஷ – பொதுஜன பெரமுன
போர் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு ’13 பிளஸ்‘ தீர்வை வழங்குவதாகக் கூறினார். அதன்பின்னர் தலைவர்கள் செய்ததெல்லாம் 13வது திருத்தம் பற்றி பந்தை கடத்துவதுதான்.
இந்த ஒரு பின்னணியிலும் தற்போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ’13 பிளஸ்‘ என்றே கூறுகின்றார்.
- சஜித் அணியினரும் பச்சைக் கொடி
- தேசிய விவகாரத்தில் ஜேவிபி;
தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் ஜே.வி.பி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தாங்களாகவே பிரிவினையை கோரவில்லை என்பது ஜேவிபிக்கு நன்றாகவேத் தெரியும்.
ரோஹன விஜேவீர தோட்டத் தொழிலாளர்கள் மீதான தனது உணர்வுகளில் இனவாதி என்பதும்இ இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் மீது அவருக்கு எந்த அனுதாபமும் இல்லை என்பதும், மகிந்த ராஜபக்சவுடன் இனவாதக் கூட்டணியை உருவாக்கிய ஜே.வி.பி தலைமை அல்லது தற்போதைய பெரும்பாலான ஜே.வி.பி தலைவர்களுக்குத் தெரியும்.
- வடக்கு கிழக்கு மாகாண இணைந்த அலகை சோமவன்ச உடைத்தார்.
இவ்வாறு ஜேவிபியின் கடந்த கால வரலாறு தமிழர்களுடன் ஒட்டாத உறவாகவே இருந்து வந்துள்ளது. தற்போதும்கூட ஜேவிபி தமிழர்களுடன் கொள்கையளவில் நெருங்கி வந்ததாக இல்லை.
- மலையக மக்கள் குறித்து ஜேவிபி ஆழமாகப் பேசுகின்றது. ஆனால் மலையக மக்களின் தேசியரீதியிலான வகிபாகம் என்ன என்பதுகுறித்து ஜேவிபி வெளிப்படையாகப் பேச வேண்டும்.
- அதேபோல் இன விவகாரத் தீர்வு குறித்தும் முஸ்லிம் மக்களின் தேசியரீதியிலான வகிபாகம் குறித்தும் பேச வேண்டும்.
இது இலங்கையின் தேசிய அரசியலில் ஜேவிபியின் புதிய பிரவேசத்திற்கு வழிவகுக்கும்.
மொத்தத்தில் இனவிவகாரத்தக்கான தீர்வு என்பது தீர்வின்றி சுவரில் அடித்த பந்தாக மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் தலையிலேயே வந்து விழுகின்றது. தென்னிலங்கை அரசியல்வாதிகளின் ஆதரவு எதிர்ப்பு என்பது அவர்களின் கண்ணாமூஞ்சி விளையாட்டே அன்றி வேரொன்றும் இல்லை. ஏனெனில் ஆட்சியில் இருக்கும்போது இன விவகாரத் தீர்வுக்கு ஆதரிப்பதாக பாசாங்கு காட்டுவதும். ஏதிர்கட்சியில் இருப்போர் எதிர்ப்பதும் வழமையான சம்பவங்களாகும். இதுதான் தென்னிலங்கை அரசியலின் வரலாறு. எனவே எவரும் தென்னிலங்கை அரசியலில் புனிதர்கள் அல்ல.
தற்போதும்கூட நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக் காண நாட்டின் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படும் வரையில் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுவதில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையிலும் தமது எதிர்கால அரசியல் நலன் கருதியுமே இனவிவகாரத்தில் அரசியல் கட்சிகளை இறங்கிவர வைத்துள்ளன.
- ஆற்றைக் கடக்கும்வரை அண்ணன் தம்பி
இந்த மாற்றமும் ஆற்றைக் கடக்கும்வரை அண்ணன் தம்பி ஆற்றைக் கடந்தபின் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை மீண்டும் உருவாகுவதாக இருக்கக்கூடாது.
தமிழ்த் தலைமைகள் ரணில் – மஹிந்த கூட்டணியின் அரசியல் நலன்களுக்காக பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழ் மக்களை பலிக்கடா ஆக்கிவிடக் கூடாது. தமிழ்த் தலைமைகளின் சமரசம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளுக்கு சமாதி கட்டுவதாகவும் இருக்கக் கூடாது.ஏதும் நடைபெறின் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த கோபமும். தமிழ்த் தலைமைகள் மீதே திரும்பும்.
ராஜித சேனாரட்ன கூறியதுபோல் அமைதிப் போராட்டம் வேறு எவருக்கு எதிராகவும் அல்ல தமிழ்த் தலைமைகளுக்கு எதிரானதாகவே அமையும். மொத்தத்தில் தமிழர் விவகாரத்தக்கான தீர்வுகுறித்த பேச்சு வார்த்தைகளின் பெறுபேறுகள் தமிழ்த் தலைமைகளின் எதிர்கால அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதாக அமையும்.
Email : vathevaraj@gmail.com