( கனடா உதயனின் சிறப்புத் தொடர் -பாகம் -02)
யாழ்ப்பாணம் செய்தியாளர் நடராசா லோகதயாளன்.
இலங்கையில் இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே காலநிலை சீரற்று உள்ளது. அதிகரித்த மழை, கடும் குளிர் ஆகியவற்றுடன் தொடரும் மின் வெட்டுக்கள், மழை காரணமாக ஏற்கெனவே மோசமாக இருந்த சாலைகள் மேலும் மோசமடைந்ந்து மக்களின் அவதிகளை அதிகரித்தன.
தலைநகர் கொழும்பு தொடங்கி வடக்கே யாழ்ப்பாணம் வரை இதன் தாக்கம் இருந்தது. பல மாவட்டங்களில் இந்த அசாதாரணமான சூழல் காரணமாக ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.
அப்படியான சூழலில் காஞ்சுரமோட்டை கிராமத்திலுள்ளவர்கள் சிந்திக்க முடியாத அளவிற்கு எப்படி படுமோசமான சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்பதை இந்த தொடரின் முதல் பகுதியை வாசித்தவர்களால் ஓரளவிற்கு அறிய முடியும்.
இந்நிலையில் அந்த காட்டின் நடுவே தற்போது நிலவும் குளிரில் வாழ முடியாது தவிக்கும் தமது வீடுகளைச் சீர் செய்து தாருங்கள் என காஞ்சுரமோட்டை கிராம மக்கள் கோரிக்கை என்னிடம் கோரிக்கை வைத்தனர். என்னால் இயன்ற உதவியை செய்ய முயல்கிறேன் என்று கூறுவதைத் தவிர என்னால் இம்மக்களுக்கு என்ன செய்துவிட முடியும்?
கனடா உதயனின் சிறப்புத் தொடர்களுக்காக அவர்களைக் காணச் சென்ற போது அவர்களின் அவல நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது என்றே தோன்றியது. அங்கு நான் சிந்திய கண்ணீர்த் துளிகளே அதற்கு சாட்சி.
காஞ்சுரமோட்டையில் 41 குடும்பங்கள் 2017ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டாலும் எந்த அடிப்படை வசதியும் கிடைக்காத காரணத்தினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்பு இற்றைவரை 3 குடும்பங்கள் மீண்டும் கடல்வழியே தமிழகத்திற்கே சென்று விட்டனர்.
இந்த கிராமத்தின் மிகவும் உச்சபட்ச வாகனம் என்பது சைக்கிள் மட்டுமே. எப்படியான அவசர நிலை என்றாலும் அவர்களுக்கு சைக்கிளே கதி.
இதனால் ஒரு தாய் தனது க.பொ.த உயர்தரம் கற்கும் மகளை புதுக்குடியிருப்பில் வாழும் தனது சகோதரியின் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக அரபு நாடு ஒன்றிற்கு தொழில் தேடிச் சென்று விட்டார்.
இங்கு தற்போது வாழும் 17 குடும்பங்களின் 71 அங்கத்தவர்கள் மட்டுமே வாழ்கின்றனர். அவர்களில் ஒருவர் 3 பிள்ளைகளின் தந்தை 35 வயதான சுப்பிரமணியம் தியாகராசா. “நான் 1987 ஆம் ஆண்டு நுவரேலியாவில் பிறந்து 2012 இல் மீண்டும் வவுனியா வந்தேன். 2017ஆம் ஆண்டு காஞ்சிரமோட்டைக்கு வந்தேன். தற்போது எனது தந்தைக்கு 72 வயதாகியுள்ளது. தோட்டச் செய்கை மூலம் வாழ்வாதாரத்தை முன்னெடுக்கிறேன். உளுந்தும் மிளகாயும் பயிர் செய்கிறேன். பிறந்து 22 நாட்களேயான கைக்குழந்தையின் பால்மாவிற்கான வருமானமானமே போதாமல் உள்ளது. இந்த ஆண்டு ஒருபோதுமே இல்லாத குளிரில் குழந்தையும் தாயும் பெரும் நெருக்கடியின் மத்தியில் வாழ்கிறார்கள். நான் இரு ஆண்டுகளின் முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றினால் தொழிலில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்”.
பொதுவாக அந்த கிராமத்தின் நிலைமை இதனைவிட மோசமாகவுள்ளது. வனவிலங்குகளின் அச்சம் காரணமாக பகல் நேரத்தில்கூட சிறிவர்களைத் தனியே வீட்டில் விட்டு எங்குமே செல்ல முடியாது. இதற்காக பெரியவர்களும் வீட்டில் நிற்க வேண்டும் அல்லது இரண்டு மூன்று வீடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதியில் மின்ஒளி இருந்தாலும் காஞ்சுரமோட்டை- மருதோடை வீதியில் 5 கி.மீ தூரம் முழுமையான இருளிலேயே காணப்படுகின்றது.
மாலை 6 மணியிக்கு பிறகு அந்த கிராமத்தில் ஊரடங்குச் சட்டம் தானாகவே நடைமுறைக்கு வரும். வீதியில் படையினருக்குப் பதிலாக யானைகள் நடமாட்டம் காணப்படும். இதற்கும் அப்பால் குழு மாடுகளை நாயாலும் விரட்ட முடியவில்லை. குழு மாடுகள் நாயை விரட்டி வரும். தொகையாக வரும் குழு மாடுகள் வயல்களை நாசம் செய்யும் சமயம் யானை வெடியைப் போட்டால் பின்பு யானை வரும்போது வெடி இல்லாத நிலை ஏற்படும்.
சனின்குமார நிரோசனிக்கு வயது 2.1 கையில் 18 மாத பிள்ளை. ஒருகையில் பிள்ளையும் மறுகையில் தண்ணீர் வாளியுடன் அவர் செல்வதைக் கண்டேன்.
”தற்போது கணவர் தொழிலிற்காக வவுனியா சென்று வரவேண்டியுள்ளது. 18 மாத குழந்தையுடன் எந்தவொரு தேவையானாலும் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மருதோடைக்கு நடந்தே சென்றுவர வேண்டும். தற்போது 21 வயதானாலும் 14 வயதிற்கு பிறகு பாடசாலையும் செல்ல முடியவில்லை. அதனால் எந்த தொழில் முயற்சியும் கிடையாது”.
அரசு கூறிய வாக்குறுதியும் நிறைவேற்றபடவில்லை என்றும் அவர் கூறினார். “2017ல் இந்த காட்டிற்குள் வந்த எமக்கு 2019ஆம் ஆண்டு அரசு வீட்டுத் திட்டம் ஒன்றை தருவதாக வாக்குறுதி அளித்தமையினால் மகிழ்வுடன் அத்திவாரம் இடப்பட்டது. இன்றுவரை வீடு எழும்பவில்லை. தற்போது சிறு பிள்ளையுடன் இரவில் பாம்பு, பூச்சியை நினைத்தே பாதிநாள் நித்திரை இல்லை. இனியாவது வீடு வருமா என்ற ஏக்கத்திலேயே வாழ்நாள் கழிகின்றது”
நீண்ட காலம் இக்கிராமத்தில் வாழ்ந்து வருபவர் 68 வயதான பண்டாரம் கதிரமலைக்கு 4 பிள்ளைகள்.
”விவசாயத்தை மட்டுமே நம்பி வாழுகின்றோம். நிலம் உண்டு நீர் இல்லை, கால் உண்டு சைக்கிள் இல்லை, மகன் உண்டு கல்வி இல்லை, பிள்ளையை பெற்றேன் ஆனால் இருவர் உயிரோடு இல்லை என்ற அவலத்தில்தான் இன்றும் உயிர் வாழ்கின்றோம் என்பதனைவிட உயிரை கையில் பிடித்து வைத்திருக்கின்றோம்”. இடம் பெயர்ந்து சென்ற இவரது மூத்த மகனை 2006ஆம் ஆண்டு செட்டிக்குளத்தில் வைத்த்து இராணுவம் வலிந்து பிடித்துச் சென்றது. இன்றுவரை அவரது மகன் குறித்த தகவல் இல்லை.
தற்போது நெருக்கடி காலத்தில் இங்குள்ளவர்கள் காலை உணவு இல்லாது மதியம் சோறு வடித்து இரு நேரமும் அதையே உண்டு சீவிக்கிறனர்.
இந்தப் பகுதி ஒரு வனவிலங்கு சரணாலயம் போன்றுள்ளது. காலையில் சிறுத்தை, இரவில் கரடி மற்றும் யானை மட்டுமல்லாது பாம்பு, தேள் போன்றவையின் அச்சத்தின் மத்தியில் அங்கு வாழ்வும் முடியாமல் வேறு இடங்களுக்கு செல்லவும் முடியாமல் அவர்கள் அங்கு தவிக்கின்றனர்.
”அதிகாரிகளிடம் இதனை எடுத்துச் சொன்னால் மாதம் ஒரு யானை வெடி தருவார்கள் எஞ்சிய நாள்களில் நாம்தான் வெடிக்க வேண்டும். நாம் வாழும் பிரதேசத்தின் காரணமாக எமது உறவுகள்கூட எமது அவலத்தை போக்க திரும்பி பார்க்கவில்லை” என்று அவர் மனம் வருந்தினார்.
இவ்வாறு வாழும் மக்களில் இரு குடும்பங்கள் வளர்த்த மாடுகளில் 4 மாடுகள் இந்த மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட குளிரில் இறந்தன. மருதோடையில் இருந்து வந்து செல்லும் வாகனம்கூட தற்போதைய மழையில் வீதியில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக கிராமத்திற்கு வர முழுமையாக மறுக்கின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு பாதணியும் அணிந்து செல்ல முடியாமல் கையில் தூக்கிச் சென்று பாடசாலையில் கால் கழுவிய பின்பு அணியும் அவலமே நிகழ்கின்றது.
அப்படியான அவலத்தின் மத்தியில் வாழும் அவர்களுக்கு சைக்கிளிற்கு கூட வழியில்லை. குளிர் காலத்தில் வைத்திய வசதியும் இல்லை. அசாதாரணமாக காலநிலையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள எந்த வழியும் அவர்களுக்கு இல்லை. ”முதியவர்கள் 8 பேருக்கும் ஓர் போர்வை. அதேபோன்று மாணவர்களிற்கு நுளம்பு வலை போன்றவற்றை வழங்கினால்கூட உணவு இல்லாது போனாலும் ஏதோ படுத்துறங்க முடியும். ஆனால் அரசு தரும் சமுர்த்தியை மட்டுமே நம்பியுள்ளோம்” இது 71 வயது மூதாட்டியின் வேதனை.
தற்போது நாட்டில் நிலவும் குளிரினால் நகரின் மத்தியிலேயே மாலை 7 மணி எனில் மக்கள் வீடுகளிற்குள் முடங்கும் நிலையில் இவர்களின் நிலையை வார்த்தைகளால் எடுத்துக்கூற இயலாது. அவர்கள் செய்த ஒரு பாவம் இந்த நாட்டில் பிறந்தது தான் என்பது போலுள்ளது அவர்களின் வாழ்க்கை.
மருதோடையில் இருந்து காஞ்சுரமோட்டை வரையான வீதியானது நெடுங்கேணி ( வவுனியா வடக்கு) பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி. இதனை செப்பனிட அந்த சபையில் நிதியில்லை. 5 கிலோ மீற்றருக்கு கல் அடுக்கி தார் வீதியாக மாற்றி அமைப்பதானால் தற்போதைய சூழலில் 2 கோடி ரூபா இல்லை என்று அரசு கூறுவதால் அடுத்த சில ஆண்டுகளிலும் இப்பாதை சீர் செய்யப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றே கிராம மக்கள் வருந்துகின்றனர்.
அதேநேரம் யானைக்கு வேலி அமைக்க வேண்டுமென்றால் அது சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரை அமைக்கப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பு இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு தினமும் யானை விரட்டுவதே பெரும் பணியாக உள்ளது. மழைக்காலத்தில் விறகை எதிர்த்தும் யானைகளை விரட்ட முடியாது. இதனால் அவலம் மட்டுமல்ல அச்சத்துடனான வாழ்வே இக்கிராமத்தின் நிலையாகவுள்ளது.
”முன்னர் எல்லாம் நாள் ஒன்றிற்கு 1,500 ரூபா கூலி வேலைக்குப் போனால் ஒரு நாள் செலவீனத்தை ஓரளவேனும் ஈடு செய்யலாம் இன்றோ ஒரு கிலோ மாவு 300 ரூபா ஒரு அங்கர் 1,260 ரூபா ஒரு றாத்தல் பாண் 200 ரூபா எதனை வாங்க முடியும்”?
குழந்தைகளிற்கோ முதியவர்களிற்கோ எந்த சுகயீனம் என்றாலும் மருத்துவமனைக்கு சென்றால் கடையில் வாங்கவும் என்று துண்டு எழுதி தருகின்றனர். அதனை வாங்க அவர்களிடம் பணம் இல்லை. இங்கு ஏதாவது சாதமான அம்சம் இருக்குமா என்று தீவிராம ஆராய்ந்து தேடினாலும் ஏமாற்றமே மிஞ்சியது. இவர்களின் நிலை அரசிற்கு தெரியாதா அல்லது தெரிந்தும் கண்கட்டி வாய்மூடி மௌனமாக இருக்கிறார்களா என்று தெரியாது. செய்திகளை சேகரிக்க அங்கு செல்வதே ஆபத்தான அனுபவமக இருக்கும் போது, அங்கு வாழும் மக்கள் எப்படியான சூழலில் வாழ்கின்றனர் என்பதை அறிய முடிந்தது.
கால் வயிறு கஞ்சிக்கு கூட வழியில்லாமல், ஆபத்துக்களுக்கு இடையே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படியொரு கிராமம் இலங்கையில் உள்ளது ஆட்சியாளர்களுக்கு தெரியுமா?