( கனடா உதயனின் சிறப்புத் தொடர் -பாகம் -03)
யாழ்ப்பாணம் செய்தியாளர் நடராசா லோகதயாளன்
தீவு நாடான இலங்கையில் எதையுமே நேராகச் செய்வது சரிவராது என்பதே யதார்த்தமாக உள்ளது. எளிமையான விஷயங்களை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்பி மக்களுக்கு சிரமங்களை அளித்து மக்களிற்குத் தீர்வு காண முடியாத நிலையில் நாடு தத்தளிக்கிறது.
சிறிய விஷயங்களில் கூட இலங்கையில் தீர்வை எதிர்நோக்கியிருப்பது பகல் கனவாகவே தொடருகிறது. நேராக மூக்கைத் தொடுவதற்குப் பதிலாக தலையைச்சுற்றித் தொடும் நிலையே பல இடங்களில் காணப்படுகிறது. கட்டுரைகளிற்காகப் பல பகுதிகளிற்கு நேரில் பயணித்த போது இதைக் காண முடிந்தது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக காஞ்சுரமோட்டை கிராமத்தையும் அங்குள்ள மக்கள் சந்திக்கும் சவால்களையும் கூறலாம்.
அங்குள்ள மக்கள் 39 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வவுனியா நகரை 80 கிலோ மீற்றர் தூரம் பயணித்தே சென்றடையும் நிலையே உள்ளது. இது அந்த கிராமத்தில் மட்டும் அல்ல, அருகிலுள்ள பல கிராமங்களுக்கும் பொருந்தும் என்று அந்த மக்கள் அங்கலாய்த்தனர். சிறிய அலுவல்களிற்கு கூட அருகிலுள்ள நகருக்குச் சென்று வருவதே அவ்வளவு சிரமமானது என்றால், இதர விஷயங்களை பற்றி கூற வேண்டிய அவசியமில்லை.
இந்த கிராமத்தின் மூத்த பிரஜைகளைத் தேடிய சமயம் பொன்னம்பலம் ஜானகி என்ற 68 வயதான 6 பிள்ளைகளின் தாயார் இக்கிராமத்தின் 50 வருட சாட்சியாக உள்ளார் என்பதனை அறிந்து அவரை சந்தித்தேன். கிராமத்து சூழல்கள் குறித்தும் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
”எனது கணவரின் பூர்வீக இடமே இதுதான். நான் எனது 17 வயதில் திருமணமாகி இந்த ஊருக்கு வந்து 6 பிள்ளைகளையும் பெற்று வளர்க்குமளவிற்கு இந்த மண்ணே எமக்கு சீவியத்தை தந்த மண். இங்கே ஏற்பட்ட யுத்தமே எமது வாழ்வை மட்டுமல்ல எனது குடும்பத்தையும் சிதைத்து. நான் பெற்ற பிள்ளைகளில் இரு பிள்ளைகளை இந்த மண்ணுக்காக மாவீரர்களாகியும் விட்டனர்”.
அவரை சமாதானப்படுத்துவது சவாலாகவே இருந்தது. சோகப் பிழம்பாகக் காட்சியளித்தார் ஜானகி. தமிழ் மண்ணிற்காக அவர் தனது இரு மகன்களை மட்டுமல்ல, தனது கணவரையும் பறிகொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
”இறுதி யுத்த காலத்தில் ஓடி ஓடிக் களைத்து இறுதியாக இனி ஓடவே இடம் இல்லை என ஓய்ந்த சமயம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தறப்பாள் கொட்டகையின் கீழ் இருந்த சமயம் எறிகணை வீச்சில் படுகாயமுற்று வைத்திய வசதியின்றி அலைந்து 9 மாதங்களாக படுக்கையில் இருந்து இயலாமலேயே எனது கணவரும் உயிரிழந்து விட்டார்”.
காஞ்சுரமோட்டை கிராமத்தின் அவலங்களிற்கு சாட்சியமாக இருக்கும் ஜானகிக்கு அங்கு குடியிருக்க ஒரு வீடு கூட இல்லை. இவ்வளவிற்கு அவர் அந்த கிராமத்துடன் ஐந்து தசாப்தங்களாக தொடர்புபட்டவர். இரு பிள்ளைகளை நாட்டிற்கு அர்ப்பணித்த நிலையில், எஞ்சிய நான்கு பிள்ளைகளுக்கும் திருமணமாகியுள்ளது. தாயை தம்முடன் வந்திருக்குமாறு அவர்கள் வேண்டினாலும், ஜானகி தயங்குகிறார்.
”அவர்களோடு இருந்தால் சோறு தருவார்கள் ஆனால் எனது நிலம் இருக்காது. இந்த மண்ணை காக்க வேண்டும் என்றால் நான் இங்குதான் இருக்க வேண்டும். செலவிற்கு தோட்ட வேலை கிடைத்தால் போவேன் அத்தோடு சமுர்த்தி கொடுப்பனவு மட்டும் கிடைக்கும். இதை வைத்து சீவியம் போகுது. ஒழுங்கான வாழ்விற்கு ஏதும் இல்லை”.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கொடூர யுத்தம் பல்லாயிரக்கணக்கானவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது என்பதை உள்நாடும் உலகமும் அறியும். ஆனால் அதற்கான பொறுப்புக்கூறலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நியாயமும் வழங்கப்படும் விஷயத்தில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அழுதவண்ணம் புலம்புகின்றனர்.
போர் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், தமிழ் மக்களிற்கு-அதிலும் குறிப்பாக இன்னும் தமிழர் தாயகப் பகுதியில் வாழ்ந்து வரும் ஜானகியைப் போன்றவர்களுக்கு மண் என்பது தமது உயிரிலும் மேலானதாக உள்ளது.
”இந்தக் காஞ்சுரமோட்டையில் இருந்து 3 தடவை இடம் பெயர்ந்து மீண்டும் மீண்டும் சொந்த மண்ணுக்கே வந்துள்ளேன். எனது உயிரும் இதே காஞ்சுரமோட்டையில்த்தான் போக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்”.
அவரது குரலில் உறுதிக்கு அப்பாற்பட்டு போர் முடிந்த பிறகு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்பவர்கள் தம்மைப் போன்றவர்களை எப்படி கைவிட்டனர் என்பது குறித்தும் அவர் மிகவும் வருந்தினார். அவர் கூறிய விஷயங்களை மறுக்க இயலவில்லை.
”தமிழ் மக்கள் வாழ வேண்டும், வாழ்ந்தவர்களின் நினைவு வேண்டும், எம்மை காட்டி அரசியல் செய்பவர்களுக்கும் பல நாடுகளில் ட் அடைக்கலமும் கோருபவர்களிற்கு எம்மை திருப்பியும் பார்ப்பதற்கான மனமே கிடையாது. நாம் ஏதோ நாடோடிகள் அல்லது காட்டு வாசிகள் போன்று வாழ்கின்றோம்” என்றவர் அதற்கு மேல் பேச முடியாதவாறு கண் கலங்கி நின்றார்.
காஞ்சுரமோட்டை மக்கள் தமது எந்த தேவைக்கும் வவுனியா நகருக்கே செல்ல வேண்டும். காலையில் சென்றால் மாலை திரும்பும் பேருந்துகள் இரவு 7 மணியை தாண்டியே மருதோடையை அடையும். மருதோடையில் இறங்கி கால் நடையாக வீடு செல்ல இரவு 8 மணியை தொட்டு நிற்கும். இவ்வாறு கால் நடையாக பயணிக்கும் 5 அல்லது 6 கிலோ மீற்றர் பாதையும் பெரும் காடுகளைக் கொண்ட பாதை. பெரிய யானை நின்றாலே தெரியாத பாதையில் கரடி, சிறுத்தை மற்றும் பாம்பு எது இருந்தாலும் ஏறி மிதித்த பின்புதான் தெரியும்.
அதை இரவு நேரத்தில் அங்கு நான் உணர்ந்தேன். அந்தச் சூழல் மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அங்கு வனவிலங்குகள் எந்நேரமும் யாரையும் தாக்கக் கூடும் என்பது யதார்த்தமானது.
வனவிலங்கு அபாயத்திலிருந்து தற்காப்பாக இருந்து கொள்வதற்காக மருதோடையில் இருந்து காஞ்சுரமோட்டை வரையும் உள்ள சுமார் 140 மின் கம்பங்களில் வெறும் 10 மின் விளக்குகள் அதாவது அரை மைலிற்கு ஒன்று பொருத்தி தந்தால்கூட இரவு ஒரு அவசரம் என்றால் பயணிக்க முடியும். ஆனால் கண் திறப்பார் யாரும் இல்லை என்கின்றனர். நாடே பல மணி நேர மின்வெட்டால் அவதியுறும் போது, இவர்களின் நிலையை எண்ணிப்பார்க்கவே கவலையாகவுள்ளது.
தற்போது காஞ்சுரமோட்டையில் இருந்து வவுனியாவிற்கு பயணிக்க 80 கிலோ மீற்றர்தூர பாதையினையே அவர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனாலும் மருதோடையில் இருந்து வெடிவைத்தகல் கிராமத்தின் ஊடாக சேமமடு வழியாக வவுனியா நகரை அடையவும் ஓர் வீதியும் உண்டு. இந்த வழியாகப் பயணித்தால் வவுனியா நகரை வெறும் 39 கிலோ மீற்றரில் சென்றடைய முடியும். ஆனால் போகவே முடியாதவாறு இரு பெரும் தடைகள் அங்கு உள்ளன. முதலாவது அவர்கள் போகும் பாதையை இக்கிராமங்களில் வாழும் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு அது குறைவு என்பதனால் 40 கிலோ மீற்றர் பாதைக்கு அதிக நிதியை ஒதுக்க அரசு தயங்குகிறது.
இதேபோன்று இரண்டாவது தடையாக இருப்பது மக்கள் நடமாட்டம் குறைந்தமையினால் இப்பாதையில் பகல் நேரத்திலும் யானைகள் நிற்கின்றன. இவற்றின் காரணமாகச் சேதமடைந்த பாதையால் எந்த வாகனமும் பயணிப்பது கிடையாது. இப்பாதையைச் சீரமைத்தால் தமது கிராமம் மட்டுமன்றி மருதோடை வரை உள்ள கிராமங்களும் நன்மை அடைவது மட்டுமல்லமால் அயலில் உள்ள சிங்கள மக்களும் போய் வாருவார்கள் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் பொபஸ்வேவாவிற்கான பாதையும் இலகு படுத்தப்படும். அவ்வகையிலாவது அப்பாதை சீரமைக்கப்படுமா என்று மக்கள் ஏங்குகின்றனர்.
இவர்களைக் கடந்து சென்ற சமயம் சுமார் 40 ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு பெண்மணியைக் கண்ட போது அவரிடம் பேச்சுக்கொடுக்க முயன்றோம். ”யார் என்ன கேட்டு எப்படிச் செய்திகள் வந்தாலும் இதுதான் எமது வாழ்வு. அதனால் இதில் நின்று பேசி நான் எனது நேரத்தைக் கடத்தவும் விரும்பவில்லை யாரையும் நம்பவும் தயார் இல்லை” என கூறியவாறே சென்றுகொண்டிருந்தார்.
சுப்பையா விஸ்வநாதன் இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியா சென்று மீண்டும் தாயகம் திரும்பியவர். அவருக்கு வயது 48. எதிர்பார்ப்புகளுடன் நாடு திரும்பினாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது என்கிறார் விஸ்வநாதன்.
”1990ஆம் ஆண்டு இங்கிருந்து இரண்டாவது தடவை இடம்பெயர்ந்த சமயம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றேன் அங்கேயே திருமணமும் செய்தபோதும் 28 ஆண்டுகளும் அகதி என்ற அடைமொழியின் கீழேயே முகாம் வாழ்க்கையில் எந்தவொரு எதிர்காலமும் இன்றி சுதந்திர நடமாட்டமும் இல்லாது வாழ்ந்தோம். எமது நிலை எமது பிள்ளைகளிற்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக என்ன சிரமத்தை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என்ற நிலையில் 2018ஆம் ஆண்டு தாயகம் திரும்பினேன். தாயகம் திரும்பினேன் என்று கூறுவதா அல்லது காட்டுக்கு திரும்பினேன் எனக் கூறுவதா என்று விளங்கவில்லை. அவ்வாறான ஒரு அவல வாழ்வையே வாழ்கின்றோம். எமக்கென்று ஒரு நிலம் உண்டு என நம்பி வந்தோம் இங்கே நிலம் மட்டும்தான் உண்டு வேறு எவையுமே இல்லை. அரைகுறையாக போட்ட வீடு, காட்டின் நடுவே வாழ்க்கை, வெறும் அரை ஏக்கர் நிலமே வாழ்வாதாரம், இத்தனைக்கும் மத்தியில் பொருளாதார சுமை தாங்க முடியவில்லை. பேசாமல் மீண்டும் தமிழகத்திற்கே சென்று விடுவோமா என்ற சிந்தனையே எழுகின்றது”.
வாழ்வாதாரத்திற்காகச் சிறு வெதுப்பகத்தை அமைத்தும் பார்த்தார் விஸ்வநாதன். ஆனால் அது சில மாதங்கள்கூட இயங்கவில்லை. அதன் கூரைகள் சேதமடைந்து விட்டன. அதனைச் சீர் செய்ய அவரிடம் பணம் இல்லை. இதனால் மழை நீரில் வெதுப்பக அடுப்பும் அழிவடைந்து விடும் அவலம் காணப்படுகின்றது. இதனால் போட்ட முதலும் கரையுமோ என்ற ஏக்கம் அவரை வாட்டுகிறது. வெதுப்பகத்தை இயக்கினால் உற்பத்தியைச் சந்தைப்படுத்த மோட்டார் சைக்கிள் இல்லையென்றாலும் ஒழுங்கான சைக்கிள் கூட அவரிடம் இல்லை. அப்படியான நெருக்கடியில் எப்படி வாழ்வது என்று கேட்டார்.
அதற்கான பதில் என்னிடமில்லை.