ஜெகதீஸ்வரன் டிஷாந்த்
மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் 23-12-2022 இரவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது
மல்லாவியில் இருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தனது செய்கை நிலத்தை பார்வையிட்டு, வீதியின் மறுபுறத்துக்கு மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் போலீசார் தெரிவித்தனர்
சிறுநீரக நோயாளியினை ஏற்றிக்கொண்டு அவசர ஒலியினை எழுப்பிக்கொண்டு வந்த மல்லாவி நோயாளர் காவுவண்டியுடனேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது
விபத்தில் படுகாயமடைந்த நபர் மற்றுமொரு நோயாளர் காவுவண்டி ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் விபத்தில் சேதமாகிய மல்லாவி நோயாளர் காவு வண்டியில் இருந்த நோயாளர் மற்றும் நோயாளர் காவுவண்டியின் சாரதி ஆகியோர் 1990 இலக்க அவசர சேவை ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பார ஊர்திகள் சங்க முகாமையாளராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்