‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் புகழாரம்
“யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தொடர்ச்சியாக அந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவருமான ‘கோப்பாய் சிவம்’ என்ற புனைபெயரைக் கொண்ட சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் சமய அறிவி;யலையும் சமூக அறிவியலையும் சமாந்தரமாக தனது கைகளில் எடுத்துக் கொண்டவர்எ அத்துடன் அவற்றை தொடர்ச்சியாக நன்கு மதித்தும் பேணியும் வருபவர். இவ்வாறான ஒரு படைப்பாளியையோ அன்றி பேச்சாளரையோ அன்றி எழுத்தாளரையோ இவரோடு ஒப்பிட்டுச் சொல்வதும் மிகவும் சிரமமான ஒரு காரியமாகும்”
இவ்வாறு புகழாரம் சூட்டினார் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவருமான லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள்.
சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய ‘ ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா. கடந்த 25ம் திகதி திங்கட்கிழமை கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தின் நிர்வாக சபைத் தலைவர் திரு சு. முத்துராஜலிங்கம் (முத்து) தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிவாச்சாரியப் பெருமக்களும் ஏனைய துறை சார்ந்த பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
அங்கு நட்புரை வழங்கிய லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள் தொடர்ந்து தனது உரையில்
“யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வருகை தரும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கு பயணித்து சமய உரைகளையும் சிவாகம பணிகளையும் செவ்வனே ஆற்றிவருபவருபவர் தான் சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் அத்துடன். யாழ்ப்பாணத்தில் ‘கோப்பாய் சிவம்’ என்ற பெயரில் படைப்பிலக்கியத் துறையில் கடந்த40 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்டவருமான சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் தற்போது கூட சமய அறிவியலையும் நெறிகளையும் எவ்வாறு மதிக்கின்றாரோ அந்தளவிற்கு சமூகம் சார்ந்த படைப்புக்களையும் தொடர்ச்சியாக வாசித்து வருகின்றார் என்பதை அறிந்து அவரை நான் வாழ்த்துகின்றேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து வெளியீட்டுரை ஆற்றிய டாக்டர் சிவஶ்ரீ சோமாஸ்கந்தக்குருக்கள் அவர்கள் நூலையும் நூலாசிரியரையும் விதந்து பாராட்டிசபையோருக்கு விளங்கும் வண்ணம் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சைவப் பெருமக்களுக்கு பயன் தரும் வகையில் படைக்கப்பட்ட சிவாகமங்கள் மற்றும் சமயக் கிரியைகள் ஆகியவை தொடர்பாக மக்களுக்கும் மற்றும் சிவாச்சாரியப் பெருமக்களுக்கும் உள்ள சந்தேகங்களைப் போக்கும் முயற்சிகளில் பலரும் துணிந்து ஈடுபடுவதில்லை. நான்கு திசைகளிலும் எதிர்ப்புக்கள் கிளம்பும் என்பதால் அவ்வாறு அவர்கள் முன்வருவதில்லை. ஆனால் இவ்வாறான காரியங்கள் சைவைப் பெருமக்களின் சமய ஈடுபாட்டுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் துணிந்து தனது கருத்துக்களை தனது உரைகளில் தெரிவித்தும் நூல்களின் மூலம் பதிப்பித்தும் வெளிக்கொணர்ந்து வரும் சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்களை நான் பாராட்டுகின்றேன்” என்றார் அவர்.
பேராசிரியர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் அறிமுக உரையாற்றும் போது. ஊ’சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய ‘ ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் எமது சமயத்தவர்களின் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று என குறிப்பிட்டார்.
நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் தனது உரையில் சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய இந்த அரிய நூலை படைப்பதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நான் அறிவேன். ஏடுகளில் பதியப்பட்டவையாக இருந்த சைவம் சார்ந்த உண்மைகளையும் விபரங்களையும் எழுத்துவடியில் மீளவும் படைத்து அவற்றை அச்சில் பதிப்பித்து எமக்கு அளித்துள்ளார். அதற்காக அவர் எத்தனை மணித்தியாலங்களை அல்லது நாட்களை செலவு செய்திருப்பார் என்பதை நான் அறிவேன்.
நூலாசிரியர் அவர்கள் எழுதிய சமய நூல்கள் பல தமிழ் நாட்டில் பல வோதாகம பாடசாலைகளில் பாட நூல்களாகவும் சான்றுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நான் அறிந்து பெருமைப் படுகின்றேன். உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள பிள்ளையார்பட்டி ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பிச்சைக் குருக்கள் அவர்கள் தலைமையில் அங்கு சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்களின் நூல் வெளியீட்டு விழா ஆலயத்தின் வேதாகம பாடசாலையில் நடைபெற்றது என்பதையும் நான் பெருமையோடு பகிர்ந்து கொள்கின்றேன்” என்றார் தொடர்ந்து நூலின் பிரதிகளை பல அன்பர்கள் விருப்பத்தோடு பெற்று மகிழ்ந்தார்கள். இறுதியில் சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்களின் பதிலுரையும் இடம் பெற்றது.
செய்தியும் படங்களும் சத்தியன்