-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.28:
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கு.தேவேந்திரன் இரண்டாவது தவணைத் தலைவராக டிசம்பர் 27-இல் நடைபெற்ற சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கனடிய பருவ-இணைய ஊடகமான உதயன் சார்பில் முதற்கண் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.
கோலாலம்பூரின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ரோயல் சிலாங்கூர் கிளப்-இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்தச் சங்கம், தற்பொழுது 9-ஆவது ஆண்டை எட்டியுள்ளது.
அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பில் இருந்து மானியத் தொகையைப் பெற்று பங்கு போட்டுக் கொள்வதைத் தவிர இந்த அமைப்பிற்கு வேறொன்றும் தெரியவில்லை. அதுவும், புதிய உறுப்பினர்களை இதில் இணைத்துக் கொள்வதில்லை. தொடக்கத்தில் பதிவான உறுப்பினர்களை மட்டும் தற்காத்துக் கொண்டு, வேறு எந்த முற்போக்கு நடவடிக்கையும் பார்வையும் அற்ற நிலையில்தான் இந்தச் சங்கம் நகர்கிறது.
ஆண்டுக்கொரு முறை கலைநிகழ்ச்சி-விருந்தோம்பலுடன் குடும்பதின விழா நடத்தியதும் கொரோனா பரவலால் நின்றுபோனது. ஏழை எளிய பத்திரிகையாளர்களுக்கு பண்டிகைக் காலங்களில் நிதி உதவி அளிப்பது அணுகூலமாகத்தான் இருக்கும்; ஆனாலும், அதைக் கடந்து எழுச்சிபெறும் வகைக் குறித்தும் சிந்திக்க வேண்டுமல்லவா?
இந்த ஒன்பது ஆண்டுகளில் ஏறக்குறைய 150 பேர்தான் இதில் உறுப்பியம் பெற்றுள்ளனர். தமிழ் ஊடகத்தினர் அனைவரையும் இணைத்து-அரவணைத்துக் கொண்டு ஒரு வலிமைபெற்ற அமைப்பாக உருவாக வேண்டும் என்றோ தேசிய வங்கி ஊழியர் சங்கத்தைப் போன்று தேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் என உருமாற்றம் அடைய வேண்டும் என்ற முற்போக்கு முனைப்போ இல்லாத அமைப்பாகத்தான் இது செயல்படுகிறது.
நாடு முழுவதும் வட்டார செய்தியாளர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய ஈடுபாடும் அக்கறையும் இல்லாமல் இந்த 9 ஆண்டுகளில், இந்த அமைப்பு ஒரு மண்டல அமைப்பைப் போல சுறுங்கிக் கிடக்கிறது.
உண்மையில், மலேசியத் தமிழ் ஊடகத்தைச் சேர்ந்த, குறிப்பாக அச்சு ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
மிகக் குறைவான ஊதியம், மிகக் குறைந்த விடுமுறை நாட்கள், வார விடுமுறை என்பதையே அறியாத வாழ்க்கை என பற்பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் தமிழ்ப் பத்திரிகையாளர்களை முதலாளியர் தரப்பு பொதுவாக மதிப்பதில்லை; கிள்ளுக்கீரையென அலட்சியம் காட்டுகின்றனர்.
ஏறக்குறைய 2 மாதங்களுக்கு முன், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேரத்தில் ஒரு பத்திரிகை நிருவாகம் மிகவும் தாமதமாக ஊதியம் வழங்கியது.
அக்டோபர் 24-இல் தீபாவளி என்ற நிலையில், நாட்டில் உள்ள மாதச் சம்பள ஊழியர்கள் அனைவரும் மாதத் தொடக்கத்திலேயே முதல் மாத ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு, பண்டிகைக் கால போனஸ் என்னும் ஊக்கத் தொகையையும் பெற்று தீபாவளிக்கு ஆயத்தமாகி வந்த நிலையில், ஒரு பத்திரிகை நிருவாகம் செப்டம்பர் மாத சம்பளத்தை அக்டோபர் 14-ஆம் நாள் பிந்நேரத்தில்தான் வழங்கியது.
இது பச்சையான அக்கிரமம்; ஊழியர்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், இன்று கிடைக்குமா? சம்பளம் நாளைக்காவது கிடைக்குமா என்று ஒன்றும் புரியாமல் ஒவ்வொரு நாளும்-ஒவ்வொரு பொழுதும் பரிதவித்த வேதனை, சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.
இவர்களில், இல்லத்தரசிகளின் நிலை மிகமிக அவலமானது. இதைப் பற்றி இந்த சங்கம் வாயேத் திறக்கவில்லை. இந்த முறைகேடு குறித்து, அரசாங்கத்தின் கவனத்திற்காவது தெரியுமா என்றால் அதுவும் தெரியவில்லை.
21-ஆம் நூற்றாண்டில், சரியாக குறிப்பிட வேண்டுமென்றால், 2008-இல் ஒரு செய்தியாளர், அவர் பணிபுரிந்த பத்திரிகை முதலாளியிடம், ஆயிர வெள்ளி சம்பளம் போதவில்லை; இன்னம் கொஞ்சம் கூட்டித் தர முடியுமா என்று கேட்டதற்கு, குளிரூட்டி அறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இது போதும் என்று மறுமொழி கூறப்பட்டது.
சம்பந்தப்பட்ட செய்தியாளர், செய்தி எழுதும்போதுதான் அலுவலகத்தில் இருப்பார். மற்ற வேளைகளில், செய்தி சேகரிப்பதற்காக, மழை-வெய்யில்; இரவு-பகல் என கருதாமல் வெளியில்தான் சுற்ற வேண்டி யிருக்கும் என்பதை அந்த பிற்போக்கு முதலாளி கருத்தில் கொள்ளவில்லை.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோது, தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் உருவாகவில்லைதான்; ஆனால், உருவானபின், 2016 ஜனவரி 6-ஆம் நாளில் ஒரு பத்திரிகை மூடப்பட்டது. அதில் வேலை பார்த்தவர்களுக்கு அன்று மாலையில் தெரிவிக்கப்பட்டு, நாளை முதல் பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பத்திரிகையை மூட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதை டிசம்பர் 31-இல் செய்திருக்கலாம்; அத்துடன், அதற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாவது பத்திரிகையை நிறுத்தப்போவது குறித்து அறிவித்து இருந்தால், அங்கு வேலை செய்தவர்கள் அடுத்த மாதம் முதல் மாற்று வேலைக்கு முயற்சி செய்ய ஏதுவாக இருந்திருக்கும். ஆனால், புது ஆண்டும் புது மாதமும் தொடங்கியிருந்த வேளையில் திடீரென்று நிறுத்தினால், குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தடுமாறி நிற்பார்களே என்ற அக்கறையும் கடமை உணர்வும் அந்த நிருவாகத்திடம் இல்லாமல்போனது.
இதைவிடக் கொடுமை, ஊதியத்தில் வெட்டிய ஈபிஎஃப் என்னும் ஊழியர் நல நிதி, சொக்சோ கட்டணம் உட்பட எதையும் இன்றுவரை செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.
காரணம், தமிழ்ப் பத்திரிகை பணியாளர்கள் என்றால் பொதுவாக எல்லா நிருவாகங்களுக்கும் அத்தனை அலட்சியம்;
இன்னொரு நாளேடு, நாட்டின் மூத்த நாளிதழ் என்ற மகுடத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது. அதை நிருவகித்தவர்கள், அந்தப் பத்திரிகை மூலம் அடைந்த பயன் சொல்லி மாளாது; ஆனாலும், இன்னும் 5 ஆண்டுகள் நடத்தினால், அந்த நாளிதழ் நூற்றாண்டை எட்டுமே என்பதையும் தங்களுக்கு ஏதும் சிரமம் இருந்தால், அதைத் தொடர்ந்து நடத்துவது குறித்து மாற்றியும் யோசிக்காமல் பொட்டென நிறுத்திவிட்டனர். இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கானவர்கள்; இவர்களுக்கெல்லாம் வாழ்வில் என்ன நீதி கிடைக்கப்போகிறது?
இவை யாவும் மாதிரிக்கு ஒன்று-இரண்டு; அவ்வளவுதான். இப்படி யெல்லாம், ஏராளமான பாதிப்பை ஏராளமான தமிழ்ப் பத்திரிகை பணியாளர்கள் எதிர்கொண்டுதான் வருகின்றனர்.
இதைப்பற்றி யெல்லாம் புகார் சொல்லவோ அல்லது நாடுமுழுவதும் பாதிக்கப்படும் தமிழ் ஊடகக் குடும்பத்தினர் அண்டி நிற்கவோ, குறைந்த-பட்சம் தங்களின் சங்கடத்தை எடுத்துக்கூறவோ ஒரு அலுவலகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற முனைப்பு தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திடம் இல்லை. மிகக் குறைந்த அளவில் ஒரேவோர் ஊழியரைக் கொண்டாவது ஒரு அலுவலகம் சிறிய அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம், இதன் தலைவர்களுக்கு ஏற்படவில்லை. பொறுப்பில் உள்ள ஒரு சிலரிடம் தொடர்புகொள்ள முயன்றால், எத்துணைத் தடவை அழைத்தாலும் எடுப்பதில்லை; பேசுவதில்லை; ஒருவேளை, அந்த நேரத்தில் அவர்களுக்கு பேச முடியாமல் இருந்தால், பின்னராவது அழைக்க வேண்டுமே என்ற பொறுப்பும் சம்பந்தப்பட்டவர்களிடம் இல்லை.
கிடைக்கின்ற நிதி எதுவாயினும் பாதியைப் பயன்படுத்திக் கொண்டு, மீதியை சேமித்து ஓர் அறவாரியத்தை சிறிய அளவில் தொடங்கலாம்; தவிர, மாதந்தோறும் இதன் உறுப்பினர்களிடம் ஒரு நாளைக்கு ஒரு வெள்ளியென நிர்ணயித்து, மாதந்தோறும் 30 வெள்ளியை வசூலித்து ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கலாம்.
தமிழ்ப் பத்திரிகையாளர்களில் செய்தியாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு கல்வித் தகுதி என்னவாக இருந்தாலும், ஐந்து ஆண்டு சேவைக்குப் பின், அவர்கள் ஊடகத்துறையில் பட்டயக் கல்வி அல்லது இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு ஏதுவாக பொது பல்கலைக்கழங்கங்களில் குறிப்பிட்ட அளவிற்கு இடம் கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம்.
எவ்வித சலுகையும் அணுகூலமும் இன்றி தமிழ்ப் பத்திரிகைத் துறையில் உழைப்பவர்கள், 50 ஆண்டுகளை எட்டியபின் அல்லது பணியிலிருந்து விலகியபின் அவர்களுக்கு மாதந்தோறும் உதவி நிதி வழங்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம்.
இவ்வாறெல்லாம் திட்டமிட்டு, புதுப்புது பாங்குடன் வெவ்வேறு முனைப்பு காட்டி தமிழ்ப் பத்திரிகைக் குடும்பத்தினரின் எதிர்கால அரணாக விளங்க இந்த சங்கம் இனியாவது அகலக் கால்வைத்து ஆழமான நடவடிக்கையை முடிக்கிவிட்டால், அதனால் ஆயிரக் கணக்கானோர் பயன்பெறுவர் என்பது திண்ணம்.
கடந்த முறை வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட தயாளன் சண்முகம், இந்த முறையும் தலைவர் பொறுப்பிற்கு களம் இறங்கினார். தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்குமான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தயாளன் சொன்ன கருத்து நெஞ்சைத் தொட்டது.
தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த முறை கூட்டம் நடைபெறும்போது சங்கத்தின் சொந்தக் கட்டடத்தில் நடைபெறும் என்றும் விடுபட்டிருக்கும் அனைவரையும் உறுப்பினராகச் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கைக் குழுமத்தின் மேலாளருமான தயாளன் தெரிவித்தார்.
ஜெயபக்தி மாளிகையில் நடைபெற்ற இத்தேர்தலில் சொற்ப வாக்குகள் பெரும்பான்மையில் தேவேந்திரன் வென்றதைக் கருதும்பொழுது போட்டி கடுமையாக இருந்ததை ஊகிக்க முடிகிறது.
வென்றபின் கருத்துரைத்த தேவேந்திரன், வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் எல்லாம் உறுப்பினராவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்; தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு 2 தவணை என நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில் அடுத்த முறை தான் போட்டியிடாமல் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வேன்; பத்திரிகைத் துறையில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அரசாங்க உதவி நிதி பெற முயல்வேன்; தேர்தல் முடிந்துள்ள நிலையில் இனி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாக செயல்படுவோம் என்றெல்லாம் மக்கள் ஓசை நாளிதழ் ஆசிரியர்களில் ஒருவரான தேவேந்திரன் கருத்துரைத்தார்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
துணைத் தலைவராக மலேசிய நண்பனின் நா. பார்த்தீபன், துணைச் செயலராக மலேசிய நண்பனின் ஆர்.குணா செயலவை உறுப்பினர்களாக தமிழ் மலரின் ரவி முனியாண்டி, கா. தர்வின் ஆகியோர் புதிய நிருவாகியராக அடுத்தத் தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக தமிழ் லென்ஸ் ஊடகத்தின் வெற்றி விக்டர், பொருளாளராக கிறிஸ்ட் ஆகிய இருவரும் வேட்பு மனுத்தாக்கல் இடம்பெற்ற டிசம்பர் 7-இல் போட்டியின்றி தேர்வாகி இருந்தனர்.
நிறைவாக, மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களின் சிந்தைக்கு ஒன்று: இருமுறை வெற்றி வாய்ப்பைத் தவறிவிட்ட தயாளன், அடுத்த முறை போட்டியின்றி ஒருமனதாக வெற்றிபெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால் நன்று என்பது அந்த ஒன்று!