(மன்னார் நிருபர்)
(29-12-2022)
கிளிநொச்சியில் இயங்கி வரும் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிறுவனத்தின் அலுவலகம் நேற்று புதன்கிழமை (28) இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு காரியாலய தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பல களவாடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக குறித்த அமைப்பு நிர்வாகத்தினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை முறைப்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் இயங்கி வரும் குறித்த நிறுவனமானது கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை யுத்தத்தினாலும், இயற்கை மற்றும் தேசிய பேரிடரான கோவிட் தாக்கத்தினாலும் , தற்கால பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட கால உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடும் உரிமை ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தது.
அந்த வகையில் இச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்கள் சவால்களை எதிர் நோக்கியே மக்களுக்கான சேவையை வழங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை (28) மாலை 4.30 மணியளவில் அலுவலக வேலைகளை முடித்து அலுவலகத்தைப் பூட்டிவிட்டு பணியாளர்கள் சென்றிருந்தனர்.
. பின்னர் மறு நாளான இன்று வியாழக்கிழமை (29) காலை 9 மணியளவில் மீண்டும் அலுவலகப்பணிக்காக மீண்டும் திறக்கப்பட்ட போது குறித்த பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதன் போது அலுவலகத்தில் இருந்த 2 மடிக்கணணிகள், அலுவலக கணினி பொருட்கள், கண்காணிப்பு கெமராவின் (C.C.TV) கண்காணிப்பு பெட்டி, முக்கிய ஆவணங்கள் என்பன அலுவலகம் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச் செயற்பாடுகளானது எதிர் காலத்தில் தாம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள எமது பாதிக்கப்பட்டு மிகவும் தேவையுடைய மக்களுக்கு தாம் ஆற்றும் அளப்பெரிய சேவையை முடக்கும் நோக்கோடும் மக்களின் உரிமைசார் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் எமது குரலையும் குரல்வளையை யும் நசுக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாகவே அதை கருதுவதாக கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிறுவனத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் நபர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது டன் இவ்வாறு நாசகாரச் செயலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மக்களுக்காக சேவையாற்றும் எம்மைப் போன்ற சமூக சேவை அமைப்புகளும் அதன் பணியாளர்களும் அச்சுறுத்தப்படுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத துடன் இதுபோன்ற செயல்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிறுவனத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மேலும் தெரிவித்தார்.