சிவா பரமேஸ்வரன் – லண்டன்
ஒப்பாரிக்கோச்சி, கசந்த கோப்பி, பஞ்சம் பிழைக்க வந்த சீமை, காலங்கள் சாவதில்லை போன்ற புத்தகங்களை வாசிக்க மனதில் தைரியமும் உறுதிப்பாடும் தேவை. அப்படியான வரலாற்றுப் பதிவுகள் 200 ஆண்டுகளாக நவகாலனித்துவ அடிமைகளாக இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் முதுகெலும்பு முறிய, ரத்தத்தை நீராக்கி, வியர்வையை உரமாக்கி உழைத்த மக்களின் கண்ணீர் கதைகளை எக்காலத்திற்கும் தாங்கி வரும் காவியங்களாகும்.
படிப்பவர்கள் அதிர்ச்சி மற்றும் வேதனையில் உறைந்து போவார்கள். இப்படியான படைப்புகளை வாசிக்கும் போது அவை புனைவுகள் இல்லை இடம்பெற்ற கொடுமைகளின் கதை என்கிற உண்மை புரியும். இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பிறந்து, வாழ்ந்து, உழைத்து, நாட்டிற்கு பன்னாட்டளவில் பெருமையும் அங்கீகாரமும் தேடித்தந்த சமூகம் இந்திய வம்சாவளியினர். அவர்களின் சொல்லொணா சோகக்கதைகளை அழியா காவியமாக்கியவர்கள் கோ.நடேசைய்யர், தெளிவத்தை ஜோசப், மு சிவலிங்கம், இராமையா சடகோபன், சாரல் நாடன் போன்ற பலர். அவர்கள் அனைவரின் ஒவ்வொரு படைப்பிலும் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம் ஆழமாக வெளிப்படும்.
இலங்கைக்கு இன்றைய நிலையில் சர்வதேசளவில் ஓரளவேனும் ஒரு பெயர் உள்ளது என்றால், அது அந்த மக்களின் உழைப்பில் விளைந்த `சிலோன் டீ` என்கிற வர்த்தக பெயரால் மட்டுமே. அதனையும் பார்க்க நாட்டிற்கு `மிகப்பெரிய` பெயரைப் பெற்றுக் கொடுத்தது உள்நாட்டு யுத்தமும் அத்துடன் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுமே ஆகும்.
அவ்வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்த்த சமூகத்தை மேம்படுத்துவதற்கான எண்ணம் ஏற்படுவதற்கே 200 ஆண்டுகள் ஆகியுள்ளன என்பதே ஒரு நாடு எந்தளவில் தனது மக்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இலங்கையில் போர்க் காலத்திற்கு முன்னர் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேறுவதற்கு அதன் தேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்த வருமானம் மட்டுமே முக்கிய காரணம். அதன் மூலம் நாட்டில் பல வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது வரலாறு. அந்தளவிற்கு தேயிலை நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டுத்தந்தது. அதன் மூலம் பெறப்பட்ட நிதியாதாரங்கள் மூலம் சாலைகள், கல்விக்கூடங்கள், போக்குவரத்து அபிவிருத்திகள், மருத்துவமனைகள் போன்ற பல விஷயங்கள் சாத்தியமாயின என்பதை வரலாற்றை ஆழமாக வாசிக்கும் போது உணர முடிகிறது. அதே போன்று அண்மைய காலங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி, சுற்றுலாத்துறை போன்றவையும் நாட்டின் வருமானத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செய்து வந்தன. எனினும் போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படாமை, ஸ்திரமற்ற ஆட்சி, தவறான கொள்கைகள், இராணுவமயப்படுத்தப்பட்ட நிர்வாகம், தேவைக்கும் அதிகமான இராணுவத்தினரின் எண்ணிக்கை மற்றும் அதன் காரணமாக ஏற்படும் தொடர்ச்சியான செலவினங்கள் போன்றவற்றைச் சமாளிக்க தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பும் கறுத்துப்போன அவர்களின் கைகளால் பறிக்கப்படும் தேயிலையும் மிக முக்கியமான காரணமாகும்.
ஆனால், அரகலய போராட்டத்தின் மூலம் பதவியிலிருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, இரானிடமிருந்து வாங்கிய கடனிற்காக லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை அடமானம் வைத்து தேயிலை மூலம் கடனை அடைக்க ஒப்பந்தம் செய்தார். ஒரு நாடு வாங்கிய கடனிற்கு ஒரு சமூகம் மட்டுமே எப்படிப் பொறுப்பாக முடியும்? அது நியாயமானதா என்று எவரும் கேட்க முன்வந்ததாக நான் அறியவில்லை. தமிழ் அரசியல்வாதிகள்-குறிப்பாக யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கு மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன? என்கிற என்கிற மனோபாவமே உள்ளது.
ராஜபக்சக்களின் ஆட்சி முடிவிற்கு வருவதற்கும் கோட்டா நாட்டைவிட்டு ஓடுவதற்கும் மின்வெட்டு மற்றும் அதனால் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் முக்கியமானதொரு காரணியாக இருந்தது. அத்துடன் சமையல் எரிவாயு, வாகனங்களிற்கான எரிபொருள் கிடைக்காமல் மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்றது போன்றவையே அரகலயவிற்கு தூண்டுதலாக அமைந்தது.
இந்திய வம்சாவளி தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார ரீதியிலான சவால்களும், பிரச்சனைகளும், சிறுமைப்படுத்தலும், தொடர்ந்து கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே. இன்று நாட்டில் பல மணி நேரங்கள் மின்வெட்டு என்பது வாடிக்கையாகியுள்ள நிலையில், மலையகத்தில் ஆரம்பக்காலம் முதலே நிலை மோசமாக இருந்துள்ளது .ஆனால் அது எவ்வளவு மோசமாக இருந்துள்ளது என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அவர்களின் சமூக-பொருளாதார நிலையை நேரில் கண்டறிந்து அதை பிபிசி தமிழோசைக்கு நிகழ்ச்சித் தொடராக தயாரிக்க மலையகத்தின் பல பகுதிகளிற்கு பயணித்து அவர்களுடன் தங்கி, உண்டு, அதிகாலை உடன் சென்று பெற்ற அனுபவம் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் “மலருமா மலையக மக்களின் வாழ்க்கை” எனும் 15 வார தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்தேன்.
இந்திய வம்சாவளி மலையக மக்களின் ஏராளமான பிரச்சனைகளிற்கு அப்பாற்பட்டு ஒரு கிராமத்திலுள்ளவர்கள் தொடக்கக் காலம் முதலே மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருவது எனக்குள் பெரும் தாக்கத்தையும் நெருடலையும் ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் அந்த தோட்டம் இருக்கும் இடம். இலங்கையின் முதலாவது நீர்மின் நிலையமான லக்சபானவிற்கு மிகவும் அருகிலுள்ள தோட்டம் சவுத் வனராஜா தோட்டம். அந்த கிராமத்தின் வழியாக மின்கம்பிகள் மூலம் நாட்டின் இதர பகுதிகளிற்கு மின்சாரம் எடுத்துச் செல்லப்பட்டாலும் அந்தத் தோட்டத்திற்கு மின் வசதி இல்லை. இதை அப்போது துணை அமைச்சராக இருந்த முத்து சிவலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பார்வைக்கு எடுத்துச் சென்றேன்.
இருவரும் அது குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். அவ்வகையில் மனோ கணேசன் அந்தத் தோட்டத்து மக்களை கொழும்பிற்கு அழைத்து வந்து உரியவர்களிடம் கூட்டிப் போய் எனது நிகழ்ச்சி ஒலிபரப்பான 100 நாட்களிற்குள் சவுன் வனராஜா தோட்டத்திற்கு மின்வசதி கிடைக்கச் செய்தார். அதை `தமிழோசையால் ஒளிர்ந்த மலையகத் தோட்டம்` என்ற தலைப்பில் நான் பிபிசி தமிழோசையின் இணையத்திற்கு மீண்டும் ஒரு கட்டுரையாக எழுதினேன்.
மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய இந்திய வம்சாவளி மக்களே நாட்டில் மிகவும் பின் தங்கியவர்களாக உள்ளனர். இதை அரசின் சமூக-பொருளாதார தரவுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் சமூக ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த மக்களே இலங்கையின் காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் அவ்வகையில் இலங்கைக்கு வந்து அடுத்தாண்டு (2023 ) இருநூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 200 ஆண்டுகளாக நவகாலனித்துவ அடிமைகளாகவே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் இவர்கள் தேசிய பொருளாதாரத்திற்கு ஆற்றியுள்ள பங்கினை அங்கீகரிக்க அதிகாரபூர்வமான மதிப்பீட்டை இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங கூறியுள்ளார். மிக மிக காலதாமதமாக அந்த முன்னெடுப்பு வந்திருந்தாலும், அதை வரவேற்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறுகிறார். ஆனால், அது அமைச்சரவை பத்திரம் தாக்கல் மற்றும் பேச்சுடன் நின்றுவிடாமல், ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த மதிப்பீட்டின் மூலம் இந்திய வம்சாவளி தமிழர்களின் வாழ்வு மேம்பட காத்திரமான திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் ரணிலிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் வாழ்க்கை மேம்பட இலங்கையின் பொருளாதாரம் இடங்கொடுக்கவில்லையென்றால், இந்தியாவின் உதவியை அரசு நாடிப் பெற வேண்டும், ஏனென்றால் இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசிற்கு இது தொடர்பில் தார்மீக பொறுப்புள்ளது என்று வாதிடுகிறார் மனோ கணேசன். அதில் நியாயமுள்ளதாகவும் நான் உணர்கிறேன். இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு அப்பால் பிரித்தானிய அரசிற்கும் இது தொடர்பில் ஒரு பொறுப்புள்ளது. தமது பொருளாதார நலனிற்காக இம்மக்களைத் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்துச் சென்றவர்கள் பிரித்தானியர்களே என்பதை யாரும் மறக்க முடியாது.
மலையக மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறியுள்ள ரணில், அதே நேரம் இலங்கையில் பல தசாப்தங்களாகப் புரையோடியுள்ள இனைப்பிரச்சனைக்கான தீர்வையும் தான் முன்னெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். 13ஐ மையமாக வைத்தே இதை அவர் செய்ய முயல்கிறார். இதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளிற்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். ஆனால் இனப்பிரச்சனைக்கன தீர்வு விஷயத்தில் அவர் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் உள்வாங்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது. அதேவேளை இலங்கையில் இதுகாலம் வரை மூவின மக்கள் வாழ்வதாகவும் அனைத்து அம்சங்களும் அவர்களை மையப்படுத்தியே இருந்த நிலையில், இப்போது மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை நாட்டில் நான்காவது இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
ஆனால், அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை தனது சுதந்திர தினத்தின் பவள விழாவை அனுசரிக்கவுள்ள நிலையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை காண வேண்டும் என்று ரணில் விரும்புகிறார். இதுவே தமக்கான கடைசி சந்தர்ப்பம் என்றும் அவருக்குத் தெரியும். அவரது அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது என்கிற யதார்த்தத்தை அவர் உணர்ந்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
எனினும், இன்னும் 40 நாட்களிற்கும் குறைவான காலத்தில் அவரால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் பங்கு பெறுவதிலேயே தமிழ் கட்சிகளிடையே உடன்பாடில்லை. வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன. அவர்களிடையே ஒற்றுமையில்லை என்பது சிங்கள ஆட்சியாளர்களிற்கும் தெரியும். அதுவே அவர்களின் பலமும் ஆகும். தீர்வை அளிக்க நாங்கள் தயார், ஆனால் அதற்கான பங்களிப்பைச் செய்ய தமிழ் கட்சிகள் தவறிவிட்டன என்கிற பரப்புரையை அவர்களால் செய்ய முடியும் என்பதை இரு தரப்பும் அறிந்துள்ளன.
உள்நாட்டுப் பிரச்சனைக்கு உள்நாட்டிலேயே தீர்வு என்கிற தென்னிலங்கை நிலைப்பாட்டை தமிழர் தரப்பு ஏற்க தயங்குகிறது. சர்வதேசம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் எண்ணுகின்றன.
இதற்கு அப்பாற்பட்டு ரணிலுக்கு ஐக்கிய(மில்லாத) தேசியக் கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. அவர் இன்னும் ராஜபக்சக்களின் கைப்பாவையாகவே உள்ளார் என்பதே யதார்த்தம். அவருக்கு இவர் தேவை, அவரை மீறி இவரால் எதையும் செய்ய முடியாது என்பதும் உண்மை.
இந்நிலையில் `பின்வாசல்` வழியாக, நேரடியாக மக்கள் ஆணையைப் பெறாமல், பொதுத் தேர்தல் மூலம் ஜனாதிபதியாகாமல், எதிர்பாராமல் அதிர்ஷ்ட சீட்டில் பரிசு விழுந்தது போல் பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க ஒரே நேரத்தில் பல தொப்பிகளை அணிந்துகொண்டு அனைவருக்கும் நல்லவராகக் காட்டிக்கொள்ள விழைகிறார்.