– கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி விளக்கமறியலில்
(மன்னார் நிருபர்)
(29-12-2022)
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பேசாலை பொலிஸ் நிலைய வாகன சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி (09-01-2023) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை(29) மாலை உத்தரவிட்டார்.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய்-(வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில்,படுகாயமடைந்த நிலையில்,வீதியால் சென்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்ட நிலையில் இன்று வியாழக்கிழமை (29) மாலை குறித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனத்தின் பொலிஸ் சாரதியை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பொலிஸ் சாரதியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் சடலப் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.