(29-12-2022)
கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்க திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகிறது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும் இந்தச் சமய நல்லிணக்கத் திட்டமானது அந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், சமய ஒற்றுமையை வளர்க்கவும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கருத்தமர்வுகள், களச்சுற்றுலாக்கள் ஊடாக சமய நல்லிணக்கம்
சமய நல்லிணக்க செயற்பாடுகள் பற்றிய கடந்த மாத செய்தியில் திட்டத்தின் நோக்கம், சமய நல்லிணக்க குழுக்கள் உருவாக்கம், மாவட்ட மட்ட ஆலோசனை குழு செயற்பாடுகள், அனர்த்த கால உதவிகள் முதலியன வெளியிடப்பட்டிருந்தன. இம்மாத செய்தியானது சமய நல்லிணக்க கருத்தமர்வுகள், களச்சுற்றுலா க்கள் பற்றியும், அதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் தாங்கி வருகிறது.
மனிதநேயம் அருகிவரும் இக்காலகட்டத்தில் மனிதநேயத்தின் ஊடாக சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் கறிற்றாஸ் வாழ்வுதயம் தமது இலக்கு கிராமங்களில் உள்ள சிறுவர்கள், இளையோர், சமய நல்லிணக்க குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து ‘மனித மாண்பு’ எனும் தலைப்பில் கருத்தமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
இக்கருத்தமர்வானது மற்றய சமயங்களையும், சமயத்தவர்களையும் மதிக்கவும், சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளவும் தூண்டியுள்ளது.
சமய மிதவாத போக்கில் சிலர் நமது சமுதாயத்தில் காணப்பட்டாலும் அதிகமானவர்களின் நடத்தையிலும், எண்ணக் கருக்களிலும், செயற்பாடுகளிலும் இக்கருத்தமர்வுகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமய நல்லிணக்க குழு உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு
அடம்பன் இலக்குக் கிராமத்தில் சமய நல்லிணக்க குழு உறுப்பினர்கள் தமது வீடு சந்திப்புகளின் போது ஒரு இஸ்லாமிய குடும்பத்திற்கு தமது செயற்பாடுகள் பற்றியும், சமய நல்லிணக்கத்தின் அவசியம் பற்றியும் விளக்கினார்கள். அக்குடும்பத்தின் தாய் இந்தக் குழுவில் உறுப்பினராக இணைவதற்கு விரும்பியபோது அவருடைய மூத்த மகன் அதை விரும்பவில்லை.
சில மாதங்களின் பிற்பாடு நோயின் காரணமாக அத்தாய் இறந்து விட்டதைக் கேள்விப்பட்ட சமய நல்லிணக்க உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். உணவுகளை சமைத்து வீட்டாருக்கும் உறவினர்களுக்கும் வழங்கினார்கள்.
இதனைக் கண்ட மூத்த மகன் ஓடிவந்து உறுப்பினர்களின் கரங்களைப் பிடித்து தான் பிழை செய்து விட்டதாக அழுதார். அம்மாவுக்கும் பதிலாக தான் இந்த நல்லிணக்க குழுவின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக வாக்களித்தார். முஸ்லிம் உறவுகள் நிறைந்திருந்த அந்த வீட்டில் தமது தாய்க்கு அனைத்து சமயங்களின் வழிபாடுகளையும் செய்வதற்கு அனுமதியளித்தார். வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும்போதே வாய்விட்டு அழத்தொடங்கினார்.
‘என் தாயே! இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் எனும் மூன்று கடவுள்களின் ஆசிகளைப் பெறும் பாக்கியம் பெற்றாயே’ என்று. கூடியிருந்த இஸ்லாமிய உறவினர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்கினார்கள். பலர் பாராட்டினார்கள். இவ்வாறு கருத்தமர்வுகள் உறுப்பினர்களின் வாழ்வியல் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளமை கண்கூடு.
சிறுவர்களுக்கான கருத்தமர்வு
‘மனித மாண்பு’ என்னும் தலைப்பிலான கருத்தமர்வானது சிறுவர்களுக்கு நடத்தப்பட்டபோது அவர்களுடைய எண்ணக் கருக்கலும் புதிய சிந்தனைகள் உருவாக்கப்பட்ட மையை அவதானிக்க முடிந்தது.
கருத்தமர்வு க்கு முன்பு யாருடைய சமயம் முதன்மையானது, பெரியது என்று கேட்கப்பட்டபோது இந்து சமயச் சிறுவர்கள் தமது சமயம்தான் புராதனமானது, பழையது, பெரியது என்றார்கள்.
இவ்வாறே, கிறிஸ்தவ சிறுவர்களும், இஸ்லாமியச் சிறுவர்களும் தத்தமது சமயங்களே பெரியது, முதன்மையானது என வாதிட்டார்கள். அவர்களின் பெற்றோர், சமயத் தலைவர்கள், நண்பர்கள், சமூகம் என்ற வட்டத்தால் ஊட்டப்பட்ட உள்ளீடுகளின் விளைவு என்பது சிறுவர்களின் பகிர்வுகளில் இருந்து புலனாகியது. கருத்தமர்வு ஊடாக சமயங்களுக்கு மேலாக ஒன்று உள்ளது என்பதை பிஞ்சுகள் வஞ்சமின்றி ஏற்றுக்கொண்டன.
‘மனிதம்’ என்பதுதான் மேலானது, முதன்மையானது என்போர் உங்கள் கரங்களை உயர்த்துங்கள் என்ற போது என்ன ஆச்சரியம் எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் அனைத்து சிறுவர்களின் கரங்களும் அக்கணமே உயர்ந்து கொண்டன.
தமது அனுபவப்பகிர்வு களை மேற்கொண்ட இஸ்லாமிய சிறுமிகள் தமது கட்டுப்பாடுகளையும், குறுகிய நட்பு வட்டத்தையும் தாண்டி இன்று தாம் அனைத்து சமய சிறுவர்களோடு உறவாடுவதும், நட்புக் கொண்டாடுவதும் தமது மனநிலை மாற்றத்தின் வெளிபாடு என்கிறார்கள்.
கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் செல்வதும், தீபாவளியின் போது இந்து நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதும், றம்ழான் கொண்டாட்டத்திற்கு அனைவரும் தமது வீடுகளுக்கு வருவதும் ஓர் மகிழ்ச்சியான தருணம் என்றும் இவர்களுடைய வருகை எங்களுடைய பெற்றோர், உறவுகள் மட்டத்திலும் மற்றய சமயங்கள் தொடர்பான நல்லெண்ணங்களை தோற்றுவித்துள்ளதாக பகிர்ந்துள்ளார்கள்.
களச்சுற்றுலா க்களும் சமய நல்லிணக்கமும்
சிறுவர்கள், இளையோர், பெரியவர்கள் சமய ஸ்தலங்களைத் தரிசிப்பதற்காக யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் முதலிய இடங்களில் உள்ள இந்துக் கோவில்கள், இஸ்லாமிய பள்ளிகள், பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த ஸ்தலங்களின் வரலாறு, வழிபாட்டு முறைகள், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள் பற்றி அந்தந்த சமயத் தலைவர்கள் விளங்கப்படுத்தினார்கள்.
இந்த அனுபவங்களைப் பற்றி மக்கள் பகிரந்துகொள்கையில் பலர் தம் வாழ்வில் முதற்தடவையாக ஏனைய சயமத் தலங்களுக்குள் கால் பதித்துள்ளார்கள். மறக்கமுடியாத இந்த அனுபவத்துடன் தாம் மற்றய சமயங்களை பற்றி ஆழமாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இதனால் மற்றய சமயங்கள் பற்றிய மதிப்பும், மரியாதையும், அக்கறையும் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். ஏனைய சமயங்களின் வழிபாடுகள் சடங்குகள் ஓர் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அனுபவங்கள் நிட்சயமாக சமய நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கும் என்பது வெள்ளிடை மலையான உண்மையாகும். சமய ஒற்றுமையை, ஐக்கியத்தை சீர்குலைக்க ஆங்காங்கே கட்டவிழ்த்துவிடப்படும் நிகழ்வுகள் இனி ஒருபோதும் சமய நல்லிணக்கத்திற்கு கலங்கள் விளைவிக்க இந்த மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பது நன்கு புலனாகிறது. இவர்களோடு கைகோர்க்கவும், இவர்களுடைய உறுதியான மனநிலையினை அனைத்து மக்களும், குறிப்பாக இவ் வாசகர்களும் கொண்டிருக்கவும் அழைப்பு விடுக்கப்படுகின்றது.
சமய முரண்பாடுகள் தணிக்கப்பட்ட, தடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்
சமய நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் பல முன்னெடுக்கப்பட்டாலும், முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதில் யாரோ சிலர் ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். இதன் சிறப்பு, வெற்றி என்னவென்றால் விசமிகளால் முன்னெடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் அவர்களுக்கு தோல்வியையே அளித்தது, மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இந்து, கிறிஸ்தவ சுருபங்கள் உடைக்கப்பட்டன.
அந்த வேளைகளில் சமூகத்தை தெளிவுபடுத்துவதிலும், ஐக்கியப்படுத்துவதிலும் சமய நல்லிணக்க குழுக்கள் வெற்றிகண்டன. கிறிஸ்தவர்கள் இந்துக்களின் சுரூபங்கள் நிறுவுவதற்கான இடங்களை வழங்கியுள்ள புரட்சிகரமான நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இது விசமிகளுக்கு நல்ல சாட்டையடியாக அமைந்தது. இதேபோன்று நானாட்டான் பிரதேசத்தில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அவதானித்த இந்துக்குருக்கள் உடனடியாக கத்தோலிக்க குருக்களுக்கு அறிவித்தார். இத்தகவல் குறித்த சமய நல்லிணக்கக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
உறுப்பினர்கள் ஒன்றுகூடி இதுபற்றிக் கலந்துரையாடியதுடன் மக்களுக்கு குறிப்பாக இளையோருக்கு தெளிவூட்டல் வழங்கியதுடன் வீடுகளிலும் இது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது. விசமிகள் எதிர்பார்த்ததுபோல் எந்தவிதமான முரண்பாடுகளும் ஏற்படவில்லை. மக்கள் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.
சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும், இருக்கும் நல்லிணக்கத்தை தக்கவைத்துக் கொள்ளவும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை கறிராஸ்-வாழ்வுதயம் முன்னெடுத்து வருவதை அனைவரும் அறிவோம். கருத்தமர்வுகள், களச்சந்திப்புக்கள், உறவுப்பாலம் நிகழ்வுகள், பொது விழாக் கொண்டாட்டங்கள், விளையாட்டு விழாக்கள் என பல நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்போடும், வழிகாட்டலோடும் இடம் பெறுவதுதான் வெற்றியின் மூலகாரணம்.