வெளிநாட்டில் குடிபெயர விரும்பும் நபர்களுக்கு கனடா சமீப காலமாக கனவு தேசமாக விளங்கி வந்தது. காரணம் வெளிநாட்டினர், அகதிகளுக்கு அந்நாட்டு அரசு அடைக்கலம் குடியுரிமையை எளிதாக வழங்கி வந்தது. இதன் காரணமாக இந்தியா உட்பட பல உலக நாடுகளில் இருந்து அந்நாட்டில் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக அந்நாட்டின் உள்ளூர் வாசிகள் புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டவர்கள் குடிபெயர்வு காரணமாக கனடாவில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் வசிப்பதற்கு வீடுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வீடுகளின் தேவைகள் அதிகரித்துள்ளதால், சொத்து விலை மற்றும் வாடகை பன்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டினர் வீடு வாங்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி தந்தார்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்று ட்ரூடோ மீண்டும் பிரதமரானார். இந்நிலையில், கனடா அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அங்கு வெளிநாட்டவர் வீடு வாங்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. பெரும்பாலான நபர்களுக்கு இந்த தடை சட்டம் பொருந்தும் எனவும், தனித்துவமான அம்சங்களில் இதில் சில விதிவிலக்குகள் அளிக்கப்படும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக அந்நாட்டில் ரியல் எஸ்டேட் சந்தையில் வீட்டின் சராசரி விலை 8 லட்சம் கனடா டாலர் மதிப்பில் இருந்து 6.3 லட்சம் கனடா டாலராக ஒரே மாதத்தில் குறைந்துள்ளது. இருப்பினும் அந்நாட்டில் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய வீடுகளை கட்டும் தேவை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய வீட்டு ஆணைய ஆய்வின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 58 லட்சம் புதிய வீடுகள் கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.