2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே மெய்நிலை ஆகும்
பன்னாட்டு நாணய நிதியம் தரும் சிறிய உதவி கடனைத் தீர்க்கப் போதாது. அது 2.8பில்லியன்கள் மட்டும் தான்.ஆனால் நாட்டின் மொத்த கடன் தொகை 57 பில்லியன்கள். எனவே கடன் வாங்கி கடனை அடைக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கங்கள் கடன் வாங்குவது இதுதான் முதல் தடவையும் அல்ல. இதற்கு முன் பதினாறு தடவைகள் கடன் வாங்கியி ருக்கின்றன. அதில் ஏழு தடவைகள் பன்னாட்டு நாணய நிதியத்தோடு பொருந்திக் கொண்ட உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்நிலையில் கடனை வாங்கிக் கடனை அடைக்கலாம் என்பதற்குமப்பால் கடனே இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கடன் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது என்றால் பிச்சை எடுக்காத ஒரு நாட்டை கட்டியெழுப்புவது என்றால் ஒரே ஒரு வழி தான் உண்டு. அது இனப்பிரச்சினை தீர்ப்பதுதான். இனப்பிரச்சினைதான் நாட்டை கடனாளியாக்கியது. கடன் வாங்கி,கடன் வாங்கி யுத்தம் செய்தார்கள். வாங்கிய கடனில் வெடிமருந்து வாங்கி கடனைக் கரியாக்கினார்கள், தமது சொந்த மக்களையே கொன்று குவித்தார்கள். இப்பொழுது மீள முடியாத கடனில் நாடு சிக்கிவிட்டது.
இவ்வாறாக கடன் வாங்கி அல்லது பிச்சை எடுத்து யுத்தம் செய்த ஒரு நாடு இப்பொழுது பிச்சை எடுப்பதற்காக சமாதானம் செய்கிறது என்பதுதான் நூதனமான ஒரு மாற்றம். ஆனால் பிச்சை எடுத்து செய்த யுத்தம் உண்மையானது. பிச்சை எடுப்பதற்காக செய்யும் சமாதானம் உண்மையானதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.
உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ தந்திரமாகவோ அல்லது விசுவாசமாகவோ பேச்சுவார்த்தைகள் நடக்கப்போகின்றன என்பது மட்டும் தெரிகிறது.கடந்த 75 ஆண்டுகளாக இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இப்பேச்ச வார்த்தைகளில் சிங்களத் தலைவர்கள் மாறியிருக்கிறார்கள். தமிழ்த் தலைவர்களும் மாறியி க்கிறார்கள். இதில் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் மாறாமல் இருந்த ஒரே தலைவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்தான். இப்பொழுது கடந்த 13 ஆண்டுகளாக சம்பந்தர் பேசி வருகிறார்.
கடந்த நூற்றாண்டுகால அனுபவத்தின்படி பேசுவதற்கு புதிதாக விடயங்கள் கிடையாது. ஒரே ஒரு விடயத்தில் துணிச்சலான முடிவை எடுத்தால் சரி. நாட்டின் ஒற்றை ஆட்சி கட்டமைப்பை உடைத்து ஒரு கூட்டாட்சி கட்டமைப்பய் உருவாக்கத் தயாராக இருந்தால் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். ஆனால் அந்த அடிப்படை விஷயத்தை விவாதிப்பதற்கு சிங்களக் கட்சிகள் தயாரா என்பதே இங்குள்ள பிரதானமான கேள்வியாகும். அவ்வாறு இதயமான ஒரு பிரச்சினையை விவாதிப்பதற்கு தயாரற்ற சிங்களக் கட்சிகள் காலாகாலமாக வெவ்வேறு தலைப்புகளில் தீர்வுகளை முன்வைத்து வருகின்றன என்பதே கடந்த 75 ஆண்டுகால அனுபவம் ஆகும்.
ஒரு சமஸ்ரித் தீர்வுக்குத் தயாரற்ற சிங்களத் தலைமைகள் தொடக்கத்தில் தாம் ஒப்புக்கொண்ட உடன்படிக்கைகளில் இருந்து பின்வாங்கினார்கள். உடன்படிக்கைகளை கிழித்து எறிந்தார்கள். அதன்பின் இந்திய இலங்கை உடன்படிக்கையின்போது இந்தியாவை தம்வசப்படுத்தி மாகாண சபை என்ற தீர்வை முன்வைத்தார்கள். அது ஒற்றை ஆட்சி கட்டமைப்புத்தான். அதன் பின் திருமதி சந்திரிகாவின் காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்க அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அந்த தீர்வின் வரைபை நெருப்பிட்டுக் கொளுத்தினார்.ஆனால் அந்த தீர்வும் சமஸ்டி அல்ல. அதுவும் ஒற்றை ஆட்சியை துணிச்சலான விதங்களில் உடைத்துக் கொண்டு வெளியே வரவில்லை. அதன்பின் கடந்த 2015ல் இருந்து 2018 வரையிலும் ரணில் விக்ரமசிங்கவும் கூட்டமைப்பும் இணைந்து ஒரு தீர்வை நோக்கி உழைத்தார்கள்.சம்பந்தர் பிரிக்கப்பட முடியாத பிளவுபடாத ஒரு நாட்டுக்குள் அந்த தீர்வு காணப்படும் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். இப்பொழுதும் கூறுகிறார். அதேசமயம் சிங்கள மக்களுக்கு அரசாங்கம் “எக்கிய ராஜ்ய” என்று கூறியது. அதுவும் சமஸ்டி அல்ல. அதாவது, சிங்கள அரசியல்வாதிகள் சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்கத் தயாரற்ற காரணத்தால் வெவ்வேறு பெயர்களில் சமஸ்ரியல்லாத தீர்வு முன்மொழிபுகளை முன்வைத்து வருகிறார்கள் என்பதே கடந்த 75 ஆண்டுகால அனுபவம். இப்பொழுது ஆரம்பித்திருக்கும் பேச்சுவார்த்தைகளில் நிலைமையும் அதுதான் என்றால் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முறியும்.
அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் ஜனாதிபதி கட்சி இல்லாத ஒரு தலைவர். அவர் தனது அரசியல் எதிரிகளின் பலத்தில் தங்கியிருக்கிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் ராஜபக்சகளின் வேட்பாளராக களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. எனவே ராஜபக்சக்களை மீறி ஒரு தீர்வைத் அவர் தர மாட்டார். ராஜபக்சக்கள் 13பிளஸ்தான் தங்களால் தரக்கூடிய தீர்வு என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். சஜித் பிரேமதாசவும் 13ஐ முழுமையாக அமல்படுத்துவதே தமது தீர்வு என்று கூறுகிறார். இப்படிப் பார்த்தால் 13ஆவது திருத்தத்தை தாண்டக்கூடிய ஒரு நிலைமை தென் இலங்கையில் இல்லை.அவ்வாறு பதின்மூன்றாவது திருத்தத்தை தொடர்ந்து வலியுறுத்துவதன்மூலம் சிங்களத் தலைவர்கள் இந்தியாவையும் தம்பசப்படுத்தலாம்.
கடந்த சில வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை அதிகம் நெருங்கி செல்கிறார்.அவர் பதவியேற்ற காலத்தில் இருந்ததைவிடவும் இப்பொழுது அவருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு ஒப்பீட்டளவில் சுமூகமாகி வருகிறது. இந்தியாவை திருப்திப்படுத்தும் விதத்தில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியாவின் அதானி குழுமத்திடம் அவர் சில வாரங்களுக்கு முன் ஒப்படைத்தார்.பலாலி விமான நிலையத்தை மறுபடியும் திறந்துவிட்டார்,காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே ஒரு பயணிகள் போக்குவரத்து சேவையும் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்திலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதில் இந்திய நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ் கலாச்சார மையத்தை ஒரு இந்திய தலைவர் வந்து திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்தியப் பிரதமர் மோடி வருவார் என்று கூறப்பட்டது. பின்னர் இந்திய ஜனாதிபதி வருவார் என்று கூறப்பட்டது. இப்பொழுது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வந்தாலும் அது ஒரு கோலாகலமான விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அவ்வாறு இந்திய கலாச்சார மையத்தை திறக்கும் விழாவை இலங்கையின் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக ஒழுங்கமைப்பதன்மூலம் அரசாங்கம் இந்தியாவையும் சமாளிக்கலாம் சிங்களக் கட்சிகளையும் சமாளிக்கலாம்.எனவே கடந்த சில வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை நோக்கி முன்னெடுக்கும் நகர்வுகளைத் தொகுத்துப்பார்த்தால் அவர் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பை மறைமுகமாக பெற முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.
13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த போகிறோம் என்று அரசாங்கம் கூறுமாக இருந்தால் அது இந்தியாவுக்கும் விருப்பமாகத்தான் இருக்கும். எனவே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் 13-வது திருத்தத்தை தாண்டுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. அப்படித் தாண்டினாலும் தாண்டாவிட்டாலும் நிச்சயமாக ஒற்றையாட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வராது என்பது மட்டும் தெரிகிறது.
அதாவது வெளிப்படையாக ஒரு சமஸ்டி தீர்வை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமை தென்னிலங்கையில் இப்பொழுதும் இல்லை. ஆயின் தமிழ் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? பேச்சுவார்த்தைகளில் பெயரால் குறைந்தபட்சம் பின்வரும் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். முதலாவதாக, அரசியல் கைதிகளை விடுவிக்கலாம். இரண்டாவதாக காணிகளை ஆகக் கூடிய மட்டும் விடுவிக்கலாம். மூன்றாவதாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கலாம். இப்படிப்பட்ட சிறிய உடனடித் தீர்வுகளைத்தான் பெறலாம். நிரந்தரத் தீர்வை பெறுவதென்றால் சிங்கள பௌத்த அரசியல்வாதிகள் உண்மையான பௌத்தர்களாக மாற வேண்டும்.