-நக்கீரன்
கோலாலம்பூர், ஜன.04:
ஜசெக செயல்மறவரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி.சிவக்குமார், சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பு வகிக்கத்தான் பொருத்தமானவரேத் தவிர, மலேசிய அமைச்சரவை உறுப்பினராகவோ அல்லது நலிந்த இந்திய சமுதாயத்தை அமைச்சரவையில் பிரதிநிதிக்கவோ கொஞ்சமும் தகுதி இல்லாதவறாகத் தெரிகிறார்.
இதை, அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த ஒரு மாதக் காலத்தில் தெளிவாக நிரூபித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் தன்னந்தனியராக இருக்கும் இவர், அடித்து ஆடி, இந்திய சமுதாயத்தின் தலைநாயகனாக விளங்குவார் என்று கருதினால், அப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பெல்லாம் இருந்தால், அதை மனதில் இருந்து இப்பொழுதே அடியோடு துடைத்து விடுங்கள் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக சிவக்குமார், இந்திய சமுதாயத்தை கைகழுவி வருகிறார்.
குறைப் பிரசவமாக கரைந்துபோன நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியிலும் ஒரு தமிழர், இப்பொழுது சிவக்குமார் பொறுப்பேற்றுள்ள அதேத் துறையைக் கேட்டு வாங்கினார். 2009-இல் அப்போது மனித வள அமைச்சராக இருந்தவரிடம் இந்திய சமுதாயத்திற்கு அரசாங்க பொதுத் துறை நிறுவனங்களில் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு விகிதத்தை நாடாளுமன்றத்திலேயேக் கேட்டுப் பெற்றார்.
இந்திய சமுதாயத்தின் மக்கள் தொகை விகிதாச்சார அளவில் சுமார் பாதி அளவுக்குத்தான் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் வாய்ப்பளிக்கப்பட்ட விவரம் அப்போது தெரியவந்தது; ஆனால், அடுத்த 10 பத்து ஆண்டுகளில் கேள்விகேட்ட இவரே அமைச்சரானபின் அதைப் பற்றி கொஞ்சமும் கருதவோ செயல்படவோ முனைப்பு காட்டவில்லை.
அமைச்சராகப் பொறுப்பேற்ற சமயத்தில் வேற்று கலாச்சாரத்தைப் பின்பற்றி தலைப்பாகை அணிந்துகொண்டதில் காட்டிய எழுச்சியும் உத்வேகமும், அரசாங்க பொதுத்துறைசார் வேலைவாய்ப்புகளில் இந்திய இளைஞர்களுக்-கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கருதவுமில்லை; செயல்படவுமில்லை;
பொதுவாக, ஜசெக-வினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து முழக்கம் எழுப்பத்தான் லாயக்கேத் தவிர, ஆளுந்தரப்பில் இருந்து செயல்படும் பாங்கு அவர்களிடம் இல்லை; காரணம், கடந்த அரை நூற்றாண்டு காலமாக எதிரணி அரசியல் நடத்தியே பழக்கப்பட்ட அவர்களுக்கு ஆளும் அணி அரசியல் புதிதாக இருக்கிறது; அதனால் தடுமாற்றமும் தொற்றிக்கொள்கிறது என்று அப்பொழுது ஒரு கருத்து பரவலாக பகிரப்பட்டது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்; இவர்களின் எதிரணி அரசியலுக்கு பொன்விழா கொண்டாட்டம் நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகையக் கருத்தை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் அதே ஜசெக பட்டறையில் புடம்பெற்ற சிவக்குமாரின் போக்கும் இப்பொழுது வெளிப்படுகிறது.
துன் சாமிவேலு காலத்தில் 4 துணை அமைச்சர்கள் இருந்தனர். நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி காலத்தில் தலைகீழ் மாற்றமாக நான்கு அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் இருந்தனர்.
கொல்லைப்புற ஆட்சிக் காலத்தில் ‘அதுவும் ஒன்று; இதுவும் ஒன்று’ என்று சுருங்கிப்போனது. அந்தக் கதைதான் இப்போதைய ஒற்றுமை அரசாங்கத்தி-லும் நீடித்துத் தொலைகிறது. தொலைந்து போகட்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, சிவக்குமார் ஏதாவது செய்வார் என்று பார்த்தால், இந்திய சமுதாயத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கு தான் பொறுப்பேற்க முடியாது; அந்தந்தப் பிரச்சினையை அந்தந்த அமைச்சரிடம் எடுத்துச் செல்லுங்கள்; அதைப்போல, மனித வள அமைச்சு சம்பந்தமாக எல்லா இனத்திற்கும் நான் பொதுவானவன்; காரணம், இது ஒற்றுமை அரசு, பிரதமரும் இதையேத்தான் சொல்லி வருகிறார் என்று பிரதமரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, கிளிப் பிள்ளையைப் போல சிவக்குமார் அடிக்கடி சொல்லி வருகிறார்.
உதாரணத்திற்கு நலிந்த இந்திய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைத் தேவைப்படுகிறது; தாமதப்படுத்தினால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை அவருக்கு ஏற்பட்டு, வேறு வழியில்லாமல் இவரை நாடினால், இவர் ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கிறது; மாறாக, சுகாதார அமைச்சரை நாடுங்கள் என்று சொல்லிவிட்டு இவர் கைகழுவினால் அதன் பொருள் என்ன?
அதைப்போல, ஒருவருக்கு சமூக நலத்துறையின் வாழ்க்கைச் செலவு உதவித் தொகை நின்றுபோகிறது என்று வைத்துக் கொள்வோம்; ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், சிவக்குமாரின் ஜசெக அலுவலத்தை நாட முடியுமா? மு.சரவணனாக இருந்தால் மஇகா வாசலிலாவது போய் நிற்கலாம்; சீனர்களின் ஆதிக்கம்மிக்க ஜசெக கட்சி அலுவலகம் மலேசியத் தமிழர்களுக்கு அந்நியப்பட்டு பல மாமாங்கம் ஆகிறது.
இத்தகைய நிலையில் அமைச்சர் என்ற முறையில் சிவக்குமாரை நாடினால், இதுக்கெல்லாம் நான் அமைச்சரில்லை; சமூக நலத்துறையை நாடுங்கள் என்று விரட்டி அடிப்பாரா?.
இன்னும், ஆலயங்களில் ஏற்பட்டுள்ள குருக்கள், இசைக் கலைஞர்கள், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான சிக்கலுக்கெல்லாம் சிவக்குமாரை நாடலாமா என்பதும் நாடினால் விரட்டி அடிப்பாரா என்பதும் புரியவில்லை.
இந்திய சமுதாயத்திற்கு நான் பொறுப்பல்ல; நான் பொறுப்பல்ல என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் இவர், உண்மையில் நாடாளுமன்றத்-திற்கு சபாநாயகராக நியமிக்கப்படக்கூட தகுதி பெற்றிருக்கிறார்; காரணம், நாடாளுமன்ற கட்டடத்திற்குள் ஏதாவது பிரச்சினை எழுந்தால், உடனே, நாடாளுமன்ற வளாகத்தில் ஏதாவது ஒரு மரத்தடியைப் பார்த்தோ அல்லது வாகன நிறுத்துமிடத்தைத் தேடியோ நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்திடும் ஆற்றல் இவருக்கு இருக்கிறது.
ஆனால், அமைச்சராக விளங்கமட்டும் தகுதி இல்லாதவர்.
உண்மையில், இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள அனைத்து சிக்கல்களையும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் சிவக்குமாரே எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று பிரதமரே சொல்லி இருப்பதாக வைத்துக் கொண்டாலும்கூட, சிவக்குமார் அதையெல்லாம் வெளிப்படுத்திக் கொள்ளாமல், இந்திய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரச்சினைகளைக் கேட்டுக்கேட்டுப் பெற்று, அவற்றை வாரந்தோறும் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் முன்வைத்து அவர்களின் பரிந்துரையையும் பெற்றால், அவர் ஒரு நல்ல மக்கள் நல செயல்பாட்டாளர்; சமூக ஆர்வலர் என்ற நிலையை எட்டுவார்.
மாறாக, நான் பொறுப்பில்லை; நான் மட்டும் பொறுப்பில்லை என்று கைகழுவுபவராக இருக்கும் சிவக்குமாருக்கு, எதிர் வரிசையில் அமர்ந்து கேள்வி கேட்கும் தகுதி மட்டுமே நிறைந்துள்ளது.