சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
‘Light at the end of the tunnel’
நம்பிக்கையூட்டும் ஒரு சாத்தியம் இருக்கலாம் என்பதை உணர்த்தும் இந்த ஆங்கில பழமொழி பலருக்கு ஒரு ஆறுதலை அளிக்கும். நம்பிக்கையையும் மீறிய நம்பிக்கை என்றாலும் சில சமயங்களில் அத்தி பூத்தாற்போல் வரும் செய்திகள் இனி வழியில்லை என்று விழுந்து கிடப்பவனுக்கும் ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.
எண்ணமே வாழ்வு-நம்பிக்கையே வெற்றி என்பது தமிழர்களின் அடிப்படை சிந்தனைகளில் ஒன்று என்று எனது பாடசாலை நாட்களில் ஆசிரியர் கூறியது இப்போதும் நினைவில் உள்ளது. சுமார் 45 ஆண்டுகளிற்கு முன்னர் பாடசாலை கற்கையை நிறைவு செய்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்னர் சக ஆசிரியர்களிடம் பல வண்ணத்தில் இருக்கும் சிறிய `ஆட்டோகிராஃப் நோட்புக்கை அதில் ஆசிரியர்களின் வாழ்த்தை அவர்களின் கையொப்பத்துடன் பெற்று காலங்காலமாக அதைப் பாதுகாத்து வைக்கும் மரபு இன்றும் உள்ளது. அவ்வகையில் எனது தமிழாசிரியர் என்னை ஆசீர்வதித்து வாழ்த்திக் கையெழுத்திட்டு அதற்கு கீழே `எண்ணமே வாழ்வு-நம்பிக்கையே வெற்றி` அதை ஒரு நாளும் மறக்க வேண்டாம்…..வாழ்க…..என்று எழுதியிருந்தார். ஐயா சந்திரசேகர் எங்கிருந்தாலும் வணங்கி மகிழ்கிறேன்.
அப்படியான ஒரு நம்பிக்கையை தமிழ் ஊடகவியலாளர் ஒருவரும் மூத்த சட்டத்தரணி ஒருவரும் காணாமல் போனவர்களின் நெஞ்சங்களில் விதைத்துள்ளார்.
”தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை; இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள்” இப்படி ஒரு புது உருட்டை இராணுவம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஷ்குமார் கேட்டிருந்த கேள்வியொன்றிற்குப் பதிலளித்த போதே இலங்கை இராணுவம் இப்படி திருவாய் மலர்ந்துள்ளது அல்லது உளறியுள்ளது என்று கருதலாம்.
அதே போன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூத்த சட்டத்தரணி கே எஸ் ரட்ணவேல் அவர்கள் முன்னிலையாகியிருந்த வழக்கு ஒன்றில் வவுனியா மேல் நீதிமன்றம் முக்கியமானதொரு தீர்ப்பை அளித்திருந்தது. செல்லையா விஸ்வநாதன் என்கிற முன்னாள் போராளியின் மனைவி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே நீதிபதி மிகவும் முக்கியமான தீர்ப்பை அளித்திருந்தார். அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணையின் போது இராணுவத்தினரிடம் கையளித்துக் காணாமல் போன நபரை நீதிமன்றத்தில் முன்நிறுத்த வேண்டும் அல்லது அப்படிச் செய்ய முடியாமைக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இது இறுதிக்கட்டப் போரின் போது காணாமல் போனவர்கள் அல்லது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு அல்லது சரணடைந்த அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயத்தில் மிகவும் முக்கியமானதொரு தீர்ப்பாகும். இது காணாமல் போனவர்களைத் தேடும் உறவினர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கும். மேலும் பலருக்கு இந்த தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்” என்று மூத்த சட்டத்தரணி கே எஸ் ரட்ணவேல் ஊடகங்களிற்கு அப்போது கூறியிருந்தார்.
ஆட்கொணர்வு மனு ஒன்றின் மீதான விசாரணையிலேயே நீதிபதி அந்த தீர்ப்பை அளித்திருந்தார். அடுத்த விசாரணை அன்று இராணுவம் என்ன செய்யப் போகிறது என்ற பரபரப்பு நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது.
அவரைப் போலவே தமிழ் ஊடகவியலாளர் நிரோஷ்குமார் பல நெருக்கடிகளுக்கு இடையே சிறப்பான ஒரு பணியைச் செய்துள்ளார். இலங்கையில் மக்களுக்கு ஒரு ஒளிவிளக்காக-மிகவும் காத்திரமாக இல்லையென்றாலும்-தகவல் அறியும் உரிமைச் சட்டம் அண்மைக் காலத்தில் மிகுந்த பயனுள்ள ஜனநாயக ஒரு வழிமுறையாகவும் ஆயுதமாகவும் பயன்பட்டு வருகிறது. அந்த ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் மனங்களில் சிறிதளவேனும் நம்பிக்கையை அவர்கள் விதைத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சரணடைந்த விடுதலைப் புலிகள் குறித்து ஆதாரமான தகவல்களுடன் அதற்கான பதிலை இராணுவத்திடமிருந்து கோரியிருந்தார். அதற்கான பதிலை இழுத்தடித்த இராணுவம் பின்னர் இப்படியும் இல்லை அப்படியும் இல்லை என்று யாருக்கும் புரியாத ஒரு பதிலை அளித்தது. அற்புதமான அந்த பதில் தான் ”தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை; இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள்”
இந்த பதிலைக் கேள்விப்பட்டவுடன் எனக்குள் எழுந்த முதல் கேள்வி இராணுவம் அரசாங்கத்தின் ஒரு அங்கமா இல்லையா என்பதே! அடுத்ததாக எழுந்த கேள்வி என்பது இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற சமயத்தில் நானறிந்த வகையில் அங்கு அரசு என்றால் பொதுவாக அறியப்படுகின்ற சிவிலியன் அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இறுதிக்கட்டப் போரில் அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, ஐ நா, ஐ சி ஆர் சி, உலக உணவுத் திட்டம், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் 2009 ஜனவரி மாதம் தொடங்கி படிப்படியாக வெளியேற்றினார். அரச அதிகாரிகளும் பெரும்பாலானவர்கள் வெளியேறிவிட்டனர். சொற்ப எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மட்டுமே அங்கிருந்தனர். எனவே அவர்கள் `இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள்` என்று இராணுவம் கூறுவதன் அர்த்தம் என்ன?
அப்படி இராணுவம் கூறும்படி அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் அல்லது முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் சிவில் அதிகாரிகளிடம் சரணடைந்திருந்தால் அதற்கான முறையான பதிவுகள் இருந்திருக்கும் அல்லது இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அவை எங்கே? தமிழீழ விடுதலைப் புலிகள் அரச அதிகாரிகளிடமே சரணடைந்தார்கள் என்றால், அந்த அதிகாரிகள் பெயர்கள் மற்றும் அவர்கள் அப்போது என்ன பதவியில் இருந்தார்கள் என்பதெல்லாம் அரசிடம் இருக்கும்/ இருக்க வேண்டும். அது ஒன்றும் இரகசியமான தகவல் இல்லை. அப்படியிருக்கும் போது அதை அரசு ஏன் இதுவரை வெளியிடவில்லை? இப்படி ஏராளமான கேள்விகள் எழுவது இயற்கை.
சரி, இப்போது இராணுவம் கூறியிருக்கும் பதிலிற்கு மீண்டும் வருவோம். அதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஆட்கள் சரணடைந்தார்கள் என்பதை இராணுவம் மறுக்கவில்லை. இதுவரை காலமும் அதை வெளிப்படையாக இராணுவம் ஒப்புக் கொண்டதாக நான் அறியவில்லை. தம்மிடம் சரணடையவில்லை என்கிற வாதத்தையே மிகவும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் முன்வைத்துள்ளதாக இராணுவம் கருதுகிறது. ஆனால் அது `பொறியில் சிக்கிய எலியின் கதை` தான்.
இனி, ஆட்கள் சரணடையவில்லை அல்லது தங்களிடம் கையளிக்கப்படவில்லை என்கிற பழைய பல்லவியை இராணுவம் பாட இயலாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த தமிழ் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, ”பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில் முழுமையான ,சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் அதிகாரபூர்வமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையத்திற்கு அறிவித்துள்ளது.
முதலில் தகவல்களைத் தரவே இராணுவத்தரப்பு மறுத்துவிட்டது. அதேவேளை அந்த தகவலை வேண்டி பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டது. அங்கிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு சென்றது. பாதுகாப்பு அமைச்சு அந்த தகவல்கள் இலங்கை இராணுவத்திடமே இருப்பதாகக் கூறி இராணுவத்திற்கு அந்த விண்ணப்பத்தை அனுப்பியது. இதை பாதுகாப்பு அமைச்சு அளித்த ஒப்புதல் வாக்குமூலமாகவே பார்க்க வேண்டியுள்ளது. அதன் பிறகும் உரிய பதில் இல்லாததால் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து 1111/2022 என்ற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேல்முறையீடு, அந்த ஆணைக் குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்த்தன தலைமையில் இம்மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தான் `விடுதலைப் புலிகள் தம்மிடம் சரணடையவில்லை மாறாக அரசிடமே சரணடைந்தர் என்கிற `உண்மையை` போட்டுடைத்துள்ளனர்.
`பொறுப்பான` இராணுவம் கூறியுள்ளபடி 17ஆம் திகதியன்று அவர்கள் என்ன பதிலளிக்கப் போகிறார்கள் என்பதை தமிழுலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதேவேளை தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களில் வருவது போல் இராணுவம் ஒரு `டிவிஸ்ட்டையும்` வைத்திருக்கக் கூடும். போர் முடிந்த பிறகு புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டவர்களே சரணடைந்தவர்கள், புனர்வாழ்விற்கு பிறகு அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலதிகமாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்கள் வெளிநாடுகிளிற்குச் சென்றுவிட்டனர் என்று கூறும் வாய்ப்பும் உள்ளது என்று விவரமறிந்த வட்டாரங்கள் கனடா உதயனிடம் தெரிவித்தன. அதேவேளை இப்படியான தகவல்களைக் கோருவதும், அதை அளிப்பதும் `தேசியப் பாதுகாப்புடன்` தொடர்புடையது என்று கூறி, அரசு சட்ட மாஅதிபரிடம் கருத்துக் கேட்க முற்படலாம். அவரிடமிருந்து பதில் வர ஆண்டுக் கணக்கிலும் காலம் ஆகலாம்.
இறுதிக்கட்டப் போரானது `சாட்சியம் இல்லாத போராக` இருந்த நிலையில், `அரசிடம்` சரணடைந்தவர்கள், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்பதில் சரியான கணக்கீடுகள் இல்லை. சரணடைந்தவர்கள்/ கையளிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே அந்த எண்ணிக்கை தரவுகள் பேசப்படுகின்றன. எனினும் அந்த எண்ணிக்கை எவ்வளவு என்பது சரியாகவும் உறுதியாகவும் தெரியவில்லை.
பொருளாதார ரீதியில் இலங்கை மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், எந்தவொரு பன்னாட்டு உதவியும் மனித உரிமைகள் விஷயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவை. அதை இதுவரை இலங்கை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. போர்க்காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை எந்த வகையிலும் பொறுப்புக்கூறல் இல்லை. காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஓ எம் பி இதுவரை காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அண்மையில் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணித்த போது அவர்களுக்கு வரவேற்ப்பை காட்டிலும் எதிர்ப்பே அதிகமாக இருந்தது.
இப்போது `வாராது வந்த மாமணி` போன்று ஒரு நீதிமன்ற உத்தரவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒரு விண்ணப்பமும் ஓரளவேனும் உண்மையை அறிந்துகொள்ள உதவும் என்று பாதிக்கப்பட்டவர்களைப் போலவே நானும் நம்புகிறேன். ஆம், எனது தமிழாசிரியர் கூறியது போன்று எண்ணமே வாழ்வு- நம்பிக்கையே வெற்றி.