ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலய மஹா கும்பாபிஷேகம் இவ்வருடம் மத்திய பகுதியில் நடைபெற மும்முர ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் மக்களின் பக்திபூர்வ ஆர்வத்தால் கும்பாபிஷேக நிகழ்வுகள் களைகட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இதேவேளை நாட்டில் செல்வச்செழிப்பு, அமைதி, மகிழ்ச்சி நிலவவேண்டுமென கும்பாபிஷேக நிகழ்வுகளின் ஓர் அம்சமாக மக்கள் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை புதுச்செட்டித் தெருவையும், ஜெம்பட்டா வீதியையும் இணைத்து பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயம். மக்கள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் நாளை பக்தி பூர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.
ராதாகிருஷ்ண ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ராஜகோபாலர் வடிவத்தில் ராதையுடன் இணைந்த ராதா ராஜகோபாலரும், ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா, கிருஷ்ண சைதன்யர், கௌரநித்தாய் ஆகியோரும் எழுந்தருளுவர். மூலமூர்த்தியாக விளங்கும் ராஜகோபாலர், இந்தியா-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 1982 ஆம் ஆண்டு வருகை தந்து, பிரதிஷ்டா சிரோன்மணி ஸ்ரீலஸ்ரீ விஸ்வநாத குருக்களால் பிரதிஸ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வாத்சல்ய குழந்தையாக ஆட்சி புரிந்து 1990ஆம் ஆண்டு அங்கிருந்து வருகை தந்த ஸ்ரீமதி ராதா ராணியுடன் இணைந்து ராதா ராஜா கோபாலராக திருக்கல்யாணம் கண்டு அருளினார்.
ஜகந்நாத், சுபத்ரா, பலராம் மூவரும் ஜகந்நாத் ஷேத்திரத்திலிருந்து வரவழைக்கப்பட்டு, 1996ஆம் ஆண்டு ஸ்ரீல பிரபுபாதாவின் நூற்றாண்டு விழாவன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, பீடத்தில் எழுந்தருளினர்.
இவர்கள் 1999 ஆம் ஆண்டு முதன் முதலாக கொழும்பு புதுச்செட்டித் தெருவில் இருந்து இரதயாத்திரையாகப் புறப்பட்டு வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபம் வரை சென்று, அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து மீண்டும் வருகை புரிந்தனர்.
நாட்டில் அமைதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட இந்த இரத யாத்திரை, தொடர்ந்து 2017ஆம் ஆண்டு வரை விமர்சையாக நடந்து வந்தது. எதிர்வரும் காலத்தில் பகவான் அகிலாண்ட நாயகன் திருவருளுடன் கும்பாபிஷேகம் கண்டு, ஸ்திரமாக நிலை கொண்ட பின், இந்த இரதயாத்திரை மீண்டும் தொடர்ந்து நிகழ வேண்டும் என்பதே பக்தர்களின் ஆசையும் எதிர்பார்ப்புமாகும்.
புதிதாக அமையும் ஆலயத்தில் கலியுக அவதாரமாகிய ஸ்ரீ கிருஷ்ண சைத்தன்ய மஹாபிரபுவும், அவரது அன்புக்குரிய நித்தியானந்த பிரபுவும் கௌர நிதாய் வடிவில் ராஜகோபாலரின் ஒரு பக்கத்தில் எழுந்தருளுவர்.
புதுச்செட்டித்தெரு வாயில் வழியாக ஆலயத்துக்கு வரும்போது முதலில் நாம் காண்பது ஆஞ்சநேயர் திருவுருவம். இலங்கையை வாலில் இட்ட தீயால் எரித்தவர், ஆனால் வாலில் இருந்த வெப்பம் அவரை சுடவில்லை – குளிர்ச்சி தந்தது.
ராமபிரானின் சேவையில் பதிவிரதா தர்மத்தை கடைபிடித்த சீதா பிராட்டியைக் கண்டுபிடித்து, பின் அரக்கர்களை அழித்து, தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற, ராமபிரானுக்கு தலையாய பணி செய்தவர்ஆஞ்சநேயர். அவரைப் பார்த்து திரும்பும் பொழுது, இராமர் சந்நிதி காணப்படுகின்றது. இராமர் சந்நிதிக்கான திரு உருவங்களும் வெங்கடேஸ்வரர் சந்நிதிக்கான திருவுருவங்களும் கட்சிலா விக்கிரங்களாக இந்தியாவிலிருந்து வருகைபுரிந்து இங்கு தானிய வாசம் (நெல்லில் வாசம்) செய்து வருகின்றனர். விரைவில் எழுந்தருளி மக்கள் துயர் துடைக்க நரசிம்ம மூர்த்தியாக பகவான் ஏற்கனவே வருகை தந்து பூஜைகள் கண்டு ஆராதிக்கப்பட்டு வருகிறார். கோவில் அமைப்பதில் ஏற்பட்ட பின்னடைவுகளை நீக்கவும் தோஷங்களை போக்கவும் பக்த வத்சலனான நரசிம்மமூர்த்தி சந்நிதியும், வடகிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் தற்போதைய நிலைபற்றி வடிவமைப்பாளர் விஷ்வஸ்ரீ சந்தனகுமார் ஸ்தபதி பல தகவல்களைத் தெரிவித்தார். அதன்படி கோவிலின் பிரதான கோபுரம் 61 அடி உயரத்தில் அமைகிறது. 7 தலங்கள் (நிலைகள்) கொண்ட கோபுரம் பூர்த்தி அடைந்துள்ளது. இவற்றுக்கான வர்ணப்பூச்சி வேலைகளும் நிறைவடைந்துவிட்டன.
பிரதான மண்டபத்தில் பகவானின் தசாவதார வடிவங்கள் காட்சியளிக்கின்றன. ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மூர்த்திகள் நிலை கொள்ளும் ஆலயங்களின் விமானங்கள் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் நில அமைப்பு, வர்ணம் தீட்டல் போன்ற பல வேலைகள் உள்ளன. பக்தர்களின் உதவிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு மத்திய பகுதியில், எப்படியாவது மஹா கும்பாபிஷேகத்தை நிகழ்த்த வேண்டும் என்னும் உறுதியுடன் வேலைகள் தொடர்கின்றன. இத்திருப்பணியில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு இறை அருளை பெற்றுக்கொள்ளுமாறு சந்தன குமார் ஸ்தபதியும் ஆலய பக்தர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஹரே கிருஷ்ணா.
கிருஷ்ணப்பிரியன் ஆர். ராஜலிங்கம்