பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு.
(மன்னார் நிருபர்)
(10-01-2023)
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(10) செவ்வாய்க்கிழமை மன்னாரில் 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை 6 ஆவது நாளாகவும் காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள்,கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன் போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் இடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு ஒரு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்,அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமது கோரிக்கை அடங்கிய மகஜர் வாசித்தனர்.