வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- சிங்கள – தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழர் விவகாரம்
– ‘பிச்சைக்காரன் புண்‘
- தமிழரசுக் கட்சி தனி வழி போவதால் சாதிக்கப் போவது என்ன?
- தீர்வை நோக்கி தமிழ்த் தலைமைகள் பயணிக்கின்றனரா?
2009இல் போர் மௌனிக்கப்பட்ட பின் கடந்த 14 வருட கால வரலாறு தமிழ்த் தலைமைகளின் பொறுப்பற்ற தன்மை ஒற்றுமை இன்மை தமிழ்த் தலைமைகளிடையே நிலவுகின்ற நாடாளுமன்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான நாற்காலிகளுக்காக நடைபெறும் போட்டா போட்டி என்பன தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பழைய நினைவுகளை மக்கள் மீட்டுப் பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
- தென்னிலங்கை அரசியல் சக்திகளின் ‘திருந்தாத போக்கு’
மறுபுறம் தென்னிலங்கையின் அரசியல் சக்திகளின் ‘திருந்தாத போக்கு‘ என்பனவும் தமிழீழ விடுதலைப் புலிகள்குறித்த ஞாபகங்களை மீட்டுப் பார்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதுபற்றி ஒரு சில அரசியல்வாதிகளும் மக்களும் ஊடகங்களின் முன் வெளிப்படையாகவே கருத்துக்களை முன் வைத்து வருவதையும் காணக் கூடியதாக உள்ளது.
சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் வரலாறு பெரும்பாலும் போராட்டக்களத்திலேயே கரைந்து போயிற்று.காலச் சூழ்நிலை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் வெற்றிகரமான இராஜதந்திர காய் நகர்த்தல்கள் தமிழ்த் தலைமைகளின் தூரநோக்கற்ற அரசியல் பார்வை தமிழ் இனத்துக்குள்ளேயே கிளைவிட்டு வளர்ந்த துரோகத்தனங்கள் காட்டிக் கொடுப்புகள் என்பன தமிழர் போராட்டத்தின் வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தை திசைமாற்றிவிட்டன..
இதற்கும் அப்பால் தென்னாசிய மற்றும் உலக புவிசார் அரசியலின் தாக்கங்கள் 2001 செப்டம்பர் 11 உலக வர்த்த மையம் மீதான தாக்குதலையடுத்து பயங்கரவாதத்தை மையப்படுத்தி கட்டி எழுப்பப்பட்ட உலக ஒருங்கமைப்பு என்பன தமிழர் போராட்டத்தை புரட்டிப்போட்டுள்ளது என்பதை யாவரும் அறிவர்.
எனினும் வடக்குக் கிழக்கில் தமிழ்ச் சமூகத்தின் சமூகக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டே வந்தது என்பதை மறுப்பதற்கில்லை. திட்டமிடப்பட்டு போதையில் மூழ்கடிக்கப்படும் தமிழ்ச் சமூகம் கலாசார சீர்கேடு திசைமாறிப் போகும் இளைய சமூகம் பெற்றோரே மனதைக் கல்லாக்கி தமது பிள்ளைகளை பொலிசாரிடம் கையளிக்கும் அவலம் போன்ற பல சமூக சீர்கேடுகளை விடுதலைப் புலிகளின் காலத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்ற நிலை இருந்ததை மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
தமிழர் விவகாரத்தில் தீர்வை நோக்கிய பயணத்தில் மாத்திரமல்ல தமிழ்ச் சமூகம் காலம் காலமாகக் கடடிக் காத்து வந்த சமூகப் பாதுகாப்பு கட்டமைப்ப என்பன சிதைக்கப்பட்டு சீரலிக்கப்பட்டு திசைமாறிப் போவதையும் தமிழ் தலைமைகள் குறிப்பாக 2009 இல் போர் மௌனிக்கப்பட்ட பின் வரலாற்றுப் பாடங்களை கற்கவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு அரசியல் செய்கின்றனரா? ஏன்ற கேள்வி எழும்புகின்றது.
2009 இல் போர் மௌனிக்கப்பட்டதன் பின் தமிழ்த் தலைமைகளின் வரலாறு குறிப்பாக செயற்பாடுகள் மேற் கூறியது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.
அதே வேளையில் 2009க்குப் பின் உண்மையிலேயே தமிழர் விவகாரத்துக்கான தீர்வை நோக்கி தமிழ்த் தலைமைகள் பயணிக்கின்றனரா என்ற கேள்;வியும் எழும்பாமலும் இல்லை. தீபாவளிக்கு தீர்வு பொங்கலுக்கு தீர்வு புத்தாண்டுக்குத் தீர்வு என பல தீர்வுகளை தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் வழங்கியதை தமிழ் மக்கள் மறப்பதற்கில்லை.
மொத்தத்தில் தமிழ்த் தலைமைகள் சமூகநலன் சமூகப் பொறுப்பு தமிழ்மக்களின் அரசியல் பயணம் என்ற சிந்தனைகளுக்கு அப்பால் நாற்காலிகளுக்கான அரசியலிலேயே தமது முழுக் கவனத்தையும் குவித்து வைத்தள்ளமையானது தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானித்தாக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்பதையே காட்டுகின்றது.
அதுமாத்திரமல்ல யாழ் மாநகர சபை உற்பட பல்வேறு பிரதேச சபைகளையே ஒன்றுபட்டு ஒற்றுமையாக நடத்த முன் வராதவர்கள் தமிழ்மக்களுக்குத் தலைமை ஏற்க தகுதியானவர்களா என்ற கேள்வியையும் தமிழ் மக்கள் இன்று பரவலாக முன் வைக்கத் தொடங்கியுள்ளனர்.
- தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பொறுப்புக் கூற வேண்டும்
2009க்குப் பிற்பட்ட தமிழர் அரசியலின் இன்றைய இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பொறுப்புக் கூற வேண்டும். போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏகபோக பாத்திரத்தை வகித்தது. கடந்த 14 வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலே பேசு பொருளாக இருந்தது. எனினும் தமிழர் விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஒரு அங்குலம்தானும் நகர முடியவில்லை என்பதுதான் உண்மை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசுக்கட்சியும் அக் கட்சியைச் சார்ந்த முக்கியஸ்தர்களே கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதுமே இதற்குக் காரணமாகும். தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்களே கூட்டமைப்பையும் பொறுப்பெடுத்தமையானது கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுப்பதிலேயே கடந்த 12 வருடங்களையும் செலவழித்துள்ளனர்என்பதே உண்மையாகும்.
அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் அரசியல் காவலனாக வளர்த்தெடுப்பதில் காட்ட வேண்டிய கடப்பாட்டை புறந்தள்ளி தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தினர். இது தமிழ்த் தலைமைகளின் கூட்டுப் பொறுப்புக்களுக்கப்பால் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை பலப்படுத்துவதாகவே அமைந்தது.
இதுபற்றி இப் பத்தியாளர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனது பத்தியில் வலியுறுத்தி வருவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ச்சியாக முன் வைத்து வந்துள்ளார் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றோம்.
- கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டுமென கூட்டமைப்பில் இருந்து குரல் எழும்பியுள்ளது.குறிப்பாக இந்தக் குரல் தமிழரசுக் கட்சியில் இருந்து எழுந்துள்ளது.தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இதுவரை காலமும் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏணைய கட்சிகளே இந்தக் கோரிக்கையினை கடந்த காலங்;களில் முன் வைத்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற சக்திகளும் இந்தக் கோரிக்கையினை தொடர்ச்சியாக முன்வைத்தன.
ஆனால் கூட்டமைப்பின் தலைமையும் தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவதை தவிர்த்து வந்தனர். இறுதியில் இந்தக் கோரிக்கையை முன் வைத்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பல வெளியேறின அல்லது வெளியேற்றப்பட்டனர்.அதைப்பற்றி எல்லாம் கணக்கில் எடுக்காத தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கூடாக தமிழரசுக் கட்சியின் அரசியலை முன்னெடுப்பதிலும் பலப்படுத்திக் கொள்வதிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியது.
- தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்தது
அதுமாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பிற்குள் டீபை டீசழவாநச பாணியில் ஆட்சி நடத்தியது. இதன்மூலம் தமிழரசுக் கட்சி பெரிதாக ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை.இறுதியில் கூட்டமைப்பை சிதைத்ததாகவும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தகர்ப்பதுமாகவே அமைந்தது.
தற்போதும்கூட பிரதேச சபைகளுக்கான தேர்தல் மற்றும் தேர்தல்களை தமிழ்க் கட்சிகள் கூட்டாக எதிர் கொள்ள வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தபோது தமிழரசுக் கட்சியின் பொலிட்பீரோ கூடி அதற்கெதிராக தீர்மானம் நிறைவேற்றியதாக செய்திகள் வெளிவந்தன. தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கூட்டமைப்பில் ஏணைய தமிழ்க் கட்சிகள் இணைவதை எவரும் தடுக்க இயலாது என அறிக்கைவிடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் அதற்கென சின்னம் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் ஏணைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்து பயணிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
.ஜக்கிய சமாதானக் கூட்டமைப்பு முஸ்லிம் கட்சிகளும் அமைப்பக்களும் ஓரணியில் தேர்தலுக்கு முகம் கொடுப்பது குறித்த அழைப்பை விடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
- ஒட்டியும் வெட்டியும் ஓடி கண்ணாமூச்சி காட்டுவதேன்?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழர் விவகாரம் குறித்து தீர்வு காண்பதற்கென அழைப்புவிடுத்தபோது ஏனைய தமிழ்த் தலைவர்களுடன் முதல் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி பிறகு தனித்து ஜனாதிபதியைச் சந்தித்தது. தற்போதுமகூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரம் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசியுள்ளார்.பேச்சுவார்த்தையின் முடிவில் பேச்சு வார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஜனாதிபதிசட்டத்தரணியும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை என்ற போர்வையில் ஏணைய தமிழ்த் தலைமைகளுடன் ஒட்டியும் வெட்டியும் ஓடி கண்ணாமூச்சி காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- தமிழரசுக் கட்சி தனி வழி போகவே முயல்கின்றது.
ஒற்றுமைப்பட வேண்டிய இன்றைய நிலையிலும் தமிழரசுக் கட்சி தனி வழி போகவே முயல்கின்றது. தமிழரசுக் கட்சி தனி வழி போவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் கட்சிக்கென யாப்பு உருவாக்கப்பட வேண்டும் ஏணைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்ததான பயணத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப முன்வரவேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் கொழம்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா முன் மொழிந்துள்ளமையை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயமாகும். இதன் மூலமே தமிழரின் உரிமைப் பயணத்தை அர்த்தமுள்ள பாதை நோக்கி நகர்த்துவதாகவும் திசைமாறிக் கிடக்கின்ற தமிழ்த்தேசிய உறவுகளையும் அணைத்து இணைத்து செல்லக் கூடியதாகவும் இருக்கும்.
- ‘தமிழர் விவகாரம் – பிச்சைக்காரனின் புண்’
தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழர் விவகாரம் ஒரு ‘பிச்சைக்காரன் புண்.’. இந்த அரசியல்வாதிகள் அனைவருமே பிச்சைக்காரர்கள் அல்ல. வசதிக்கு மீறிய பணம் படைத்தவர்கள்.இவர்களது அரசியல் வாழ்க்கை ‘தமிழர் விவகாரம் என்ற பிச்சைக்காரப் புண்ணை‘ வைத்தே பின்னிப் பிணைந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். தென்னிலங்கை மக்கள் தற்போதுதான் ஓரளவேணும் உணரத் தொடங்கியுள்ளனர். எனவே தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் தமக்கான அரசியலை நடத்துவதற்கு முற்றுப்புள்ளியிட்டு தமிழ்த் தேசியத்தை நோக்கி இதயசுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும்.
- 75 வருடகாலமாக சுமக்கும் சிலுவை
தமிழ் மக்களைப் பொறுத்து 75 வருடகாலமாக சுமக்கும் சிலுவையுடன் இலங்கை மக்களுக்கே பொதுவான சுமைகளையும் புதிய ஆண்டிலும் சுமந்தாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கொழம்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா முன் மொழிந்துள்ளமை நிறைவேற்றுமாயின் தமிழ்த்தேசியம் புதிய பாதையில் அடி எடுத்து வைப்பதாக இருக்கும்.